வெந்தமனம் வெல்வதற்கு
வேறுவழி தேடுகையில்
நந்தவனம் தொட்டுவந்து
நடனமிடும் பூங்காற்று
இந்தமனம் இளைப்பாற
இரும்புருக்கும் இளங்குரலில்
தந்தனத்தாம் பாடிவரும்
தெள்ளுதமிழ்க் கள்ளூற்று!
மந்திர விழியாலே
மௌனத்தின் மனங்கவர்ந்து
சுந்தர மொழிபேசிச்
சொக்கவைக்கும் தோகைமயில்!
பந்தலிட்டுப் பூப்பூத்துப்
பக்குவமாய்க் கனிவதற்கு
சொந்தமெனப் படர்ந்துவந்து
சுகமாக்கும் தளிர்க்கொடி!
சந்தங்கள் சதிராடிச்
சங்கீதம் இசைத்துவரச்
சந்தனத்தில் நிறமெடுத்துச்
சங்கமிக்கும் பொன்னருவி!
பொன்னருவிப் பெருக்கைப்போல்
பூந்தமிழாய்ச் சிரித்திருக்கும்
என்னரிய மழலையரே!
ஏற்றமுடன் வாழியரே!!
1 comment:
இந்தமனம் இளைப்பாற
இருபுருக்கும் இளங்குரலில்
தந்தனத்தாம் பாடிவரும்
தெள்ளுதமிழ்க் கள்ளூற்று!
......தமிழ் தேனமுதம்! அருமை....
Post a Comment