Wednesday, October 20, 2010

ஆயாள் வீட்டின் காயா நினைவுகள்

இவையெல்லாம் நான் 1992ல் எழுதியது
எங்கள் ஆயாள் வயதாகிவிட்டதன் காரணமாக என் தாய்வீட்டில்
இருந்ததாலும் அம்மான்வீடு எங்களையெல்லாம் விடாமல் கூப்பிடுவார்கள்.நாங்களும் சென்றுவருவோம். இந்த இனிய நினைவுகள்
எல்லோருக்கும் இருக்கும். இதைப்பகிர்ந்துகொள்ள எனக்குக் கணினியைக்
கற்றுத்தந்து என் குழந்தைகள் எனக்குவாய்ப்பளித்துவிட்டார்கள். இனிவரும்
காலங்களில் வேறு என்னமாதிரி கல்வி வளர்ச்சியடையப்போகிறதோ தெரியவில்லை. நீங்களும் கற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்!
                             அன்புடன் சும்மாவின் அம்மா.          

ஆயாள் வீட்டின் காயா நினைவுகள்
புள்ளி மான்போல்
துள்ளி விளையாண்ட
கொல்லை வாசல்
குவித்திடும் நினைவுகள்
முற்றம் முழுதும்
மெத்தை விரித்த
முருங்கைப் பூக்கள்
பருப்புப் போட்ட
பக்குவத் துவட்டல்
ஆயாள் கையால்
இருப்புச் சட்டியில்
இன்னிசை பாடும்!
இன்றும் நினைத்தால்
எச்சில் ஊறும்!!
கொட்டில் மாடும்
கத்தும் கன்றும்
எட்டாத் தொலைவில்
இருக்குது இன்று!
அவரைப் பந்தல்
அதற்கொரு சங்கு
அதிகாலை எழுந்து
ஆயாள் ஊதும்
அழகே நன்று!
மோரில் குளித்து
தடுக்கில் தவழ்ந்து
வெயிலில் காயும்
மிளகாய்கள்!
வத்தல் போட்ட
மூக்கு மாங்காய்
வாரித் தின்றபின்
வலிக்கும் வயிறு
வளவில் ஆடிட
வாகான ஊஞ்சல்
அளவில்லாத
ஆனந்தம் கூடும்!
வங்காள அண்டாவில்
வந்துவிழும் மழைத்தண்ணி
தூப்பாயை அடைத்துவைத்து
துணிதுவைக்க நீர்கட்டி
மழைபேஞ்சா வளவோடு
வாருங்கோல் விளையாடும்!
பளபளக்கும் பட்டாலைப்
பட்டியக் கல் அழகும்!
பர்மாப்பாய் விரித்த அழகும்
பார்த்தாலே மனம்நிறையும்!
சிறுகுறும்பு செய்கின்ற
சின்னக் குழந்தைகூட
பொட்டிமேசை முன்னாலே
வட்டிக் கணக்கெழுதி
அட்டணக்கால் போட்டு
அசையாமல் நிமிர்ந்திருக்கும்
வீரப்ப அம்மானின்
விழிகண்டால் வாய்பொத்தும்!
அடுக்கடுக்காய் அதிரேசம்
மனகோலம் மாவுருண்டை
எடுக்க எடுக்கக் குறையாத
எண்ணில்லாத பலகாரங்கள்!
எறும்புக்கு வேலியிட்டு
விளக்கெண்ணெய்த் துணிசுற்றிய
வெண்கலப் பானையில்!!
ஓட்டில் வறுத்துத்
திருகையில் திரித்த
வேங்கரிசி மாவு!
அரிசிமாவில் அதிசயம் காட்டும்
மொறுமொறுப்பான 
ஜிலேபி முறுக்குகள்
பாசியில் பின்னிய
ஓவியம் காட்டும்
ஓலைக் கொட்டான்
சித்திரை வெயிலின்
சிந்தும் வியர்வையில்
சத்தகம் கையில்
சதிராடி நின்று
பொத்திய பொட்டிகள்!
குத்திய புளிகள்!!
வண்ணம் பின்னிய
பாய்கள் தடுக்குகள்!
வளவளப்பான
வாருங்கோல்கள்!!
ஆயாள் கைவண்ணம்
அழகாய் மின்னும்!
சின்ன அம்மான்
சிரித்த முகம்போல்
விரித்த இலையில்
விளையும் அன்னம்!
பெரிய அம்மான்
பெண்டிர் கையால்
பிசைந்து ஊட்டும்
அரிய நினைவுகள்
அமுதக் காட்சிகள்!
சர்க்கரைக் கரைசலில்
சத்து மாவுடன்
தட்டானின் தங்கம்போல்
கொட்டானில் தேங்குழலுடன்
மூணரை மணிக்கு
தினமும் காப்பி!
நாலரை மணிக்கு
நற்சிவன் கோவில்!
ஏழரை மணிக்கு
இரவு உணவுபின் இனியநித்திரை!
காலைமுதலாய் இரவுவரையில்
வேலைகள் எல்லாம் விதிப்படி நடக்கும்!
ஆயாள்வீட்டின் அழகியநினைவுகள்!
காயாநினைவுகள் கட்டும் நினைவுகள்!

சித்திரைச் செவ்வாய்த் திருவிழா

தென்னம் பாளையின்
தேன்மதுக் குடங்கள்!
சித்திரச் சட்டியில்
சிரிக்கும் முளைப்பாரி!
பால்குடம் காவடி
அக்கினிச் சட்டி!
பார்த்த முகங்கள்
பழகிய நண்பர்கள்!
கூத்தாடி மகிழும்
ஆத்தாளின் அம்பலத்தில்
சேர்ந்து கூடி மகிழ்கின்ற
சித்திரையின் திருநாளில்
கூத்தில் நடக்கின்ற
வள்ளி திருமணத்தின்
வாய்ஜாலக் கலகலப்பும்
அள்ளிவைத்து மடியினிலே
அழகுமழலையர்க்கு
அழகான பெயர்சூட்டி
ஆயுசு நூறு என்று
சந்திரமதி தாலாட்டும்
அரிச்சந்திரா நாடகமும்
சிந்தும் நினைவுகளில்
சிக்கவைத்துப் பார்க்கிறது!
தொட்டில் கட்டிய
கரும்புத் துண்டினை
வெட்டித் தின்ன
விளையும் ஆசைகள்!
பத்துப் பைசா
பஞ்சு மிட்டாய்கள்!
நுகத்தடி இல்லா
நுங்கு வண்டிகள்!
அகத்தில் ஆடும்
ஆயிரம் நினைவுகள்!
நொடிக்கொரு தடவை
வெடிக்கும் கனவுகள்!!
துடிக்கும் நெஞ்சில்
துள்ளும் நினைவுகள்!

   ஆராவயல் வீரமாகாளி அம்மன்


சித்திரைச் செவ்வாயில் திருவிழா நடக்குமே
     சிங்காரக் கொலுவிருப்பாய்!
எத்திக்கி லிருந்தாலும் எழிற்கோலம் காணவே
     எல்லோரும் ஓடிவருவார்!
வேண்டிவரம் கேட்டவர்க்கு விளையடப் பிள்ளையும்
     விரும்பியதும் தந்தருள்வாய்!
ஆண்டியென உள்ளவரும் அடிபணிந்து ஏத்தவே
     அழியாத பொருள்தருவாய்!
மழலையர்க்குத் தொட்டில்கட்டி மகிழ்வோடு பொங்கலிட்டு
       மாவிளக்கும் ஏற்றிவைப்பார்
மாவாலே களிக்கிண்டி மக்களுக்குப் பகிர்ந்தளிக்க
     நோகாமல் நோய்கள் தீர்ப்பாய்!
பால்குடங்கள் காவடிகள் முளைப்பாரி தீச்சட்டி
      பாதத்தில் சேர்க்கவருவார்
வேல்கொண்டு துன்பங்கள் விரைந்தோட வைப்பாயே
      வீரமாகாளி உமையே!

இறையருளால் ஆக்கம் திருமதிமுத்துசபாரத்தினம்

   திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் அழைத்து
   விருந்திடுவார்கள் எங்களது ஆயாள் வீட்டில்

                              
உருக்கிய நெய்யால் மெருகூட்டி
பருப்பு மசியல் பால்கூட்டு                                  
முருங்கைக் காய்கள்
மூழ்கிய சாம்பார்!
எண்ணையில் குளித்து
மிளகில் புரண்டு
மினுக்கும் முட்டைகள்!
தொண்டை ருசியைத்
தூண்டும் விதத்தில்
வெண்டைக் காயில்
ஒரு மண்டி!
தேன்போல் இனிப்பும்
திகட்டாப் புளிப்பும்
மாங்காய்ப் பச்சடி
மணக்குது ஜோராய்!
வாழைக் காயில்
வண்ணப் பொரியல்!
ருசிக்கும் ரசமும்
ரசிக்கும் அப்பளமும்
பசிக்கு ருசிக்கும்
பக்க மேளமாய்!
வெல்லப் பாகில்
விந்தை புரிந்து
முந்திரி கிஸ்மிஸ்
முகிழ்த்திடும் அழகில்
தேங்காய்ப் பாலுடன்
திமிறும் பாயசம்!
அன்பின் மிக்கார்
அழைத்தார் வந்தோம்
அம்மான்கள் வீட்டில்
அறுசுவை உணவு!
காளி அம்மனைக்
கண்சிறை பூட்டி
பால்குடம் காவடி
அக்கினிச் சட்டி
பார்த்து மகிழ்ந்தோம்
உண்டு நிறைந்தோம்!
தொடர்ந்து வருவோம்
தொல்லையில் அன்பு!
தொடரட்டும் இங்கு!
வாரோம் நன்று!!
வாழிய நீவிர்!!!


3 comments:

Chitra said...

அருமை, அம்மா. இப்போதானே தெரியுது - தேன் அக்காவுக்கு எங்கே இருந்து கவிதை எழுதும் திறன் வருகிறது என்று...

Ramanathan SP.V. said...

முத்தான கவிதைகள். எனக்கும் பழைய நினைவுகள். அவற்றில் சில இன்றும் அப்படியே இருக்கின்றன.

Alagammai Arunachalam said...

Acho so sweet... first aaya veettu ninaivuhal pathina kavithai, reminded me of my aaya veedu(at aaravayal) - most of what you have written, I have done at my aayaa's house. Next chithirai chevvai, koothu - i was wondering like, does this chevvai happens in all nagarathar villages. Then saw ur aaravayal veeramaakaaliamman kavithai... great i loved all. I remembered all I did during my childhood at aaraavayal. My aayaa's house is also there at aaraavayal. But aaya/ayya - both are not there. But appatha's or my parent's house is there, and still visiting aaravayal occassionally, but not able to make it up during chevvai. Thanks a lot for all you have written.

Anbudan,
Alagammai.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...