Saturday, December 23, 2017

வினைதீரக்கும் வேலவன்

வேல்கொண்டு வினைதீர்க்கும் வேலவா போற்றி!
வேல்போல வேகத்தைத் தந்திடுவாய் போற்றி!
ஆல்போல குலம்தழைக்க அருள்வாய் போற்றி!
பால்பொங்கும் மனைதந்து மகிழ்விப்பாய் போற்றி!

கால்தூக்கி ஆடியவன் கண்மணியே போற்றி
வேல்தூக்கி வந்திடும் வித்தகனே போற்றி!
சல்லாபச் செந்தமிழாய்ச் சந்தித்தோம் போற்றி!
உல்லாச மாய்வந்து உவப்பாய் போற்றி!

கல்லசையும் கவிபாடிக் களித்தோம் போற்றி!
மெல்லிசைக்கு மனங்கனிந்து மிளிர்வாய் போற்றி!
சொல்லதிரும் தமிழெடுத்துத் துதித்தோம் போற்றி!
வல்லகதிர் வேலெடுத்து வருவாய் போற்றி!

எல்லாமாய் அல்லதுமாய் இருப்பாய்போற்றி!
எல்லார்க்கும் நல்லனாய் ஆக்குவாய் போற்றி!
எல்லையில் கருணைசெய் எம்மான் போற்றி!
தொல்லைசூழ் பகைமையைத் துரத்துவாய் போற்றி!

சொல்லமைக்கச் சுந்தரமாய் வருவாய் போற்றி!
வல்லமை தந்தெம்மை வாழ்த்துவாய் போற்றி!
அல்லதையும் நல்லதாக்கும் அழகே போற்றி!
நல்லதையே நினைத்திடுவோம் நலம்தா போற்றி!

எல்லார்க்கும் இனிமைசெய் எழிலே போற்றி!
பொல்லார்க்கும் புத்திதரும் பூரணா போற்றி!
கல்லார்க்கும் கருணைசெய் கனிவே போற்றி!
வல்லாரை வழிநடத்தும் வடிவேலா போற்றி!

நல்லதொரு நாமமது சரவணபவ போற்றி!
கல்லதிரும் கற்பனையில் கண்டோம் போற்றி!
செல்வத் திருமகனே செந்திலா போற்றி!
மெல்லச் சிரித்தமுக வேலவா போற்றி!

வெல்லத் திருப்புகழில் விழைந்தோம் போற்றி!
சொல்லற்கரிய தமிழ்ச் சூரியனே போற்றி!
உள்ளத்து இருத்தியே உகந்தோம் போற்றி!
கள்ளப்பு லன்கரைக்கும் கந்தனே போற்றி!

வெல்லத்தமிழ் போற்றும் விருத்தனே போற்றி!
சல்லாப செந்தமிழே சந்திரா போற்றி!
வல்லிசிவ காமியின் வாஞ்சைமகன் போற்றி!
பில்லிசூ னியம்விலக்கும் பேரருளே போற்றி!

வேல்வழியே வினைகளையும் வித்தகா போற்றி!
சால்வழியும் நீர்போலச் சமத்துவா போற்றி!
அல்லவை தீர்த்தருளும் ஆறுமுகா போற்றி!
நல்லவை தந்தருளும் நாதனே போற்றி!

பொல்லேன் அறியாமை பொறுத்தருள்வாய் போற்றி!
கல்லேன் குறைகளைந்து காப்பாய் போற்றி!
வெல்வேன் எனும்உறுதி தந்திடுவாய் போற்றி!
சொல்வேன் உன்நாமம் எந்நாளும் போற்றி!

சொல்லின் செல்வாசொக்கன்மகனே போற்றி!
சொல்லின் உன்நாமம் சுகந்தருமே போற்றி!
புல்லின்மேல் பனிபோலப் பூத்தமுகம் போற்றி!
சொல்லரிய தமிழ்போலத் தூயவனே போற்றி!

வெல்லரிய பலம்தருவாய்  விடைவாகனா போற்றி!
சொல்லெடுத்துத் துதித்தவர்ககுத் துணையே போற்றி
வில்லெடுத்த நம்பிராஜன் மருகா போற்றி!
வல்லியர் இருபுறம் வைத்தாய் போற்றி!

இல்லக் கிழத்தியர் இணையடி போற்றி
சொல்லச் சொல்லச் சுகமே போற்றி!

Thursday, May 11, 2017

ஆராவயல் வீரமாகளி அம்பாள்.

சித்திரைச் செவ்வாயில் திருவிழா நடக்குமே
               சிங்காரக் கொலுவிருப்பாய்!
எத்திக்கி லிருந்தாலும் எழிற்கோலம் காணவே
               எல்லோரும் ஓடிவருவார்!

வேண்டிவரம் கேட்டவர்க்கு விளையாடப் பிள்ளையும்
              விரும்பியதும் தந்தருள்வாய்!
ஆண்டியென உள்ளவரும் அடிபணிந்து ஏத்தவே
              அழியாத பொருள்தருவாய்!

மழலையர்க்குத் தொட்டில்கட்டி மகிழ்வோடு பொங்கலிட்டு
              மாவிளக்கும் ஏற்றிவைப்பார்!
மாவாலே களிக்கிண்டி மக்களுக்குப் பகிர்ந்தளிக்க
              நோகாமல் நோய்கள் தீர்ப்பய்!

பால்குடங்கள் காவடிகள் முளைப்பாரி தீச்சட்டி
               பாதத்தில் சேர்க்க வருவார்!
வேல்கொண்டு துன்பங்கள் விரைந்தோட வைப்பாயே
               வீரமா காளிஉமையே!

ஓலைக் குடிசையிலே!


ஒத்தை விளக்கெரியும் ஓலைக் குடிசையிலே
சித்தம் முழுவதுமே சிரித்த முகம்சிவக்க
சத்தம் இல்லாத சலங்கை ரகசியத்தில்
அத்தை மகள்வரவை ஆர்க்கப் பார்த்திருந்தான்!
மத்தம் பிடிக்கவைத்த மங்கை மனதினிலே!
புத்தகம் படிக்கையிலோ பூமுகம் எதிரினிலே!

ஓலைக் குடிசையிலே ஒத்தை விளக்கெரிய
வாலைக் குமரியவள் வளையல் கரங்களிலே
பாலைக் காய்ச்சிவந்து பக்குவமாய் இனிப்பிட்டு
ஏலக் காய்சேர்த்து ஏந்திவரும் அழகினிலே
சேலைத் தலைப்புக்குள் சேர்த்துக் கட்டிவிட்டாள்!
நாளை என்பதுவே நாயகனின் நினைவில்லை!

எப்போதோ எழுதியது!




Related Posts Plugin for WordPress, Blogger...