Thursday, May 11, 2017

ஆராவயல் வீரமாகளி அம்பாள்.

சித்திரைச் செவ்வாயில் திருவிழா நடக்குமே
               சிங்காரக் கொலுவிருப்பாய்!
எத்திக்கி லிருந்தாலும் எழிற்கோலம் காணவே
               எல்லோரும் ஓடிவருவார்!

வேண்டிவரம் கேட்டவர்க்கு விளையாடப் பிள்ளையும்
              விரும்பியதும் தந்தருள்வாய்!
ஆண்டியென உள்ளவரும் அடிபணிந்து ஏத்தவே
              அழியாத பொருள்தருவாய்!

மழலையர்க்குத் தொட்டில்கட்டி மகிழ்வோடு பொங்கலிட்டு
              மாவிளக்கும் ஏற்றிவைப்பார்!
மாவாலே களிக்கிண்டி மக்களுக்குப் பகிர்ந்தளிக்க
              நோகாமல் நோய்கள் தீர்ப்பய்!

பால்குடங்கள் காவடிகள் முளைப்பாரி தீச்சட்டி
               பாதத்தில் சேர்க்க வருவார்!
வேல்கொண்டு துன்பங்கள் விரைந்தோட வைப்பாயே
               வீரமா காளிஉமையே!

ஓலைக் குடிசையிலே!


ஒத்தை விளக்கெரியும் ஓலைக் குடிசையிலே
சித்தம் முழுவதுமே சிரித்த முகம்சிவக்க
சத்தம் இல்லாத சலங்கை ரகசியத்தில்
அத்தை மகள்வரவை ஆர்க்கப் பார்த்திருந்தான்!
மத்தம் பிடிக்கவைத்த மங்கை மனதினிலே!
புத்தகம் படிக்கையிலோ பூமுகம் எதிரினிலே!

ஓலைக் குடிசையிலே ஒத்தை விளக்கெரிய
வாலைக் குமரியவள் வளையல் கரங்களிலே
பாலைக் காய்ச்சிவந்து பக்குவமாய் இனிப்பிட்டு
ஏலக் காய்சேர்த்து ஏந்திவரும் அழகினிலே
சேலைத் தலைப்புக்குள் சேர்த்துக் கட்டிவிட்டாள்!
நாளை என்பதுவே நாயகனின் நினைவில்லை!

எப்போதோ எழுதியது!




Related Posts Plugin for WordPress, Blogger...