Wednesday, March 27, 2013

காட்டுக்கருப்பையா!

கருப்பையா கருப்பையா காட்டுக்  கருப்பையா!
கருப்பையா கருப்பையா காத்தருள்வாய் கருப்பையா!

வெண்புரவி மீதமர்ந்து விண்ணதிர வந்திடுவாய்!
என்புருக வணங்கிநின்றால் எழிற்கோலம் காட்டிடுவாய்!
நாட்டும் புகழோடு நலம்சேரக் கருணைமுகம்
காட்டும் கருப்பையா காட்டுக் கருப்பையா!----[கருப்பையா]

சலங்கையிட்டு நீவந்து சதிராட்டம் ஆடுகையில்
கலக்கமெல்லாம் போயொழிந்து களிப்புமிகக் கூடுதையா!
குலுங்கவே சிரித்துநீ கோபுரமாய் உயர்கவென்று
சலங்கை குலுங்கவந்து சடுதியிலே வரம்தருவாய்!----[கருப்பையா\]

வீச்சரிவாள் கைக்கொண்டு வீதியிலே நீவந்தால்
பேச்செல்லாம் மறந்துநின்று பெருமையுறப் பார்த்திருப்போம்!
உச்சரிக்கும் நாமமெல்லாம் உன்பேராய்த் தானிருக்கும்!
உச்சிமுகந் தெமையாளும் உன்னதமே கருப்பையா!----[கருப்பையா]

சுக்குமாந் தடியுடனே சுழன்றாடும் அழகாநீ
எத்திக்கும் காட்சிதந்து எழிற்கோலம் காட்டிடுவாய்!
பக்குவம் தந்தருளி பாசமுடன் காத்திடுவாய்!
 தித்திக்கும் அருளாலே தேன்குடித்த வண்டானோம்!----[கருப்பையா]

உள்ளத்தில் உன்முகமே ஒய்யார மாய்விளங்க
அள்ளிவரும் தமிழாலே அழகான பாட்டிசைத்தோம்
பிள்ளைகள் எமக்காகப் பிரியமுடன் காட்சிதந்து
துள்ளிவரும் குதிரைமேல் துடிப்புடனே வந்திடுவாய்----[கருப்பையா]

வேண்டிவரம் கேட்டவர்க்கு விருப்புடனே தந்தருளி
ஆண்டருளும் அற்புதமே ஐயாஎம் கருப்பையா!
சொல்லரிய அன்பாலே சொக்கியே நிற்கின்றோம்!
வெல்லரிய பலம்தருவாய்!விரைவாக வந்திடுவாய்!!----
[கருப்பையா]

பிள்ளைகுட்டி எல்லோரும் பிரியமுடன் பாத்திருக்க
வல்லவேட்டிப் பட்டணிந்து வலம்வருவாய் கருப்பையா!
நல்லபுள்ளி பெருகிவர நலமுடனே உனைவணங்க
அள்ளியள்ளித் தந்திடுவாய் ஐயாஉன் அடிபணிந்தோம்!


Related Posts Plugin for WordPress, Blogger...