Sunday, December 7, 2014

இரணியூர் ஆட்கொண்டநாதர்.

ஒற்றைவெண் பிறைதன்னை உச்சியில் வைத்தவா
                      உலகாளும் எம்பிரானே!
கற்றைச்ச டையினில் கங்கையைத் தாங்கியே
                      களிகூரும் தம்பிரானே!
பற்றியே கழுத்தினில் பாம்பினை அணிந்தவா
                      பரங்கருணைப் பேராளனே!
சுற்றியுனை வணங்கிடச் சொந்தங்கள் பெருக்கியே
                     சுகமாக்கும் சீராளனே!
கடலினை அதிகமாய்க் கடைந்ததால் வந்திட்ட
                     நஞ்சுண்ட கண்டனானாய்!
உடலிலே நோவென்று உன்னையே வணங்கினால்
                    உற்றதொரு மருந்தாயினாய்!
உடலிலே பாதியை உமயவள் பெற்றதால்
                  அர்த்தநா சனாரீசனானாய்!
கடலெனும் அன்பிலே அடியவர் பூசிக்கும்
                  திருநீறு வாசனானாய்!
ஆயகலை அனைத்துமே அறிந்தவன் என்றாலும்
                  அன்புமகன் குருவாகினான்!
மாயவன் மருகனின் மந்திர உபதேசம்
                 மயங்கியே கேட்டிருந்தாய்!
மாயவன் இரணியனை வதம்செய்த கோபத்தை
                 நீக்கியே ஆட்கொண்டவா!
மேயஉன் கருணையை முற்றோதல் செய்திட
                 இப்பிறவி போதுமாமோ!
சேயெங்கள் துணையாகிச் செய்கின்ற செயலெலாம்
                 செழித்தோங்கச் செய்திடுவாய்!
நேயமுடன் அடியவரை ஆட்கொள்ளும் நாதனே
                 இரணியூர் ஆளும்சிவனே                      
        
Related Posts Plugin for WordPress, Blogger...