சின்னச்சின்ன செடிவளத்து
சிங்காரமாய்த் தோட்டமிட்டு
சிந்தாம தண்ணிஊத்தி
ஆயா வெதச்சதெல்லம்
அலுக்காமக் களையெடுத்து
ஆசையுடன் வளப்போமே!
ஆயா சங்கூத
ஆலாய் வளந்திருக்கும்
காய்,கீரை,வெங்காயம்
அத்தனையும் ஆராஞ்சு
அழகழகாய்க் கிள்ளிவர
அம்மான் பெண்டிருமே
அறுசுவையாய் ஆக்கிடுவார்!
வாசலிலே பெரிய
வாகான வட்டிலிட்டு
வாஞ்சையுடன் ஊட்டிடுவார்
ஓடி ஓடி நாமெல்லாம்
உண்டு மகிழ்வோமே!
வளவுக்குள் ஊஞ்சலாட
வரிசையிட்டு நிப்போமே!
ஆளுக்கொரு சத்தகத்தால்
பங்குவச்சுப் புளிகுத்தி
பக்குவமாக் கொட்டையெடுத்து
ஓட்டில் வறுத்தெடுத்து
உப்புபோட்டு ஊறவச்சு
உல்லாசமாய் உண்போமே!
காரைக்குடியில்
ஏகாதசி விரதமிருந்து
இரவெல்லாம் முழிச்சிருந்து
பல்லாங்குழி முதலாக
பாம்புத்தாயம் ஈறாய்
பமபதம் விளையாண்டு,
வெள்ளனவே ஏந்திரிச்சு
வெள்ளமெனக் கெணத்தில
வேகமாத் தண்ணியெறச்சு
குளிச்சு முடிச்சதுமே
கொப்பாத்தா கோயிலுக்கும்
பெருமா கோயிலுக்கும்!
பரமபத வாசல்கண்டு
பிரசாதம் வாங்கிவந்து
பிரியமுடன் உண்போமே....
இட்டலியும் கோசமல்லி
இன்னும் இன்னும் என்றுகேட்டு
இனிமையுடன் உண்போமே!!