Wednesday, December 7, 2016

மக்களுக்கு அம்மாவாய்....

தங்கத் தமிழ்நாட்டைத்
தரணியிலே உயர்த்துதற்கு
சிங்கத் திருமகளாய்
சீறும் குரலானாய்!
பங்கமின்றிப் பலமொழிகள்
பார்வியக்கப் பேசிடுவாய்!
வங்கக் கடலோரம்
வள்ளல் அருகமர்ந்தாய்!

கேரளமும் கன்னடமும்
கீர்த்திமிகு தமிழ்நாட்டை
பேரழகாய் ஆண்டதுவே!
பார்போற்றச் சமத்துவமாய்!!

மங்காமல் புகழ்சேர்த்த
மன்னுபுகழ் தமிழகத்தில்
திங்கட் கிழமையிலே
திருவடிகள் சேர்ந்துவிட்டாய்
பொங்கிவரும் புன்சிரிப்பு
பூத்த மலர்முகத்தை
எங்கே இனிக்காண்போம்
இதயங்கள் உலுக்கிவிட்டாய்!

பொற்குவியல் விட்டுவிட்டு
புதுஉலகம் சென்றுவிட்டாய்!
சுற்றிவரும் பகைவிலக்கும்
சுத்தமன நட்பிருக்க,
சுற்றமெல்லாம் உனக்காகத்
தோள்கொடுக்கக் காத்திருக்க
மற்றுமொரு பிறப்பெடுத்து
மக்களுக்கு அம்மாவாய்............!!!

Wednesday, November 2, 2016

தந்திமுகன் தம்பி!

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்வேல்!

தந்திமுகன் தம்பியே தமிழெடுத்துப் பாடினோம்
முந்திவந்து நின்றுநீ முகம்காட்டி அருளுவாய்!
கந்தனென்று சொல்லவே கவியூறும் மனதிலே!
வந்தனென்று வருகுவாய் வளமெல்லாம் தருகுவாய்!    
                                                                                             (வேல்முருகா)                                        
செந்தமிழின் சொல்லெடுத்த சிங்காரப் பாட்டிசைக்க
வந்தெனது நாவிருந்து வளர்தமிழைப் பெருக்குவாய்!
சொந்தமென வந்துநீயே சொல்லுக்குப் பொருளாவாய்!
பந்தங்கள் சேர்ந்திணையப் பாலமென அருளுவாய்!!    
                                                                                           (வேல் முருகா...)

சிந்தனையில் செல்வாஉன் சீர்புகழை ஏத்திநின்றோம்!
வந்தனைசெய் வோர்களுக்கு வாழ்வெல்லாம் நல்வரவே!
தந்தனைநல் வாழ்வென்று தமிழாலே பாடிவந்தோம்!
வந்தணையும் கருணையே வள்ளிமயில் மணவாளா!    
                                                                                       (வேல் முருகா...)

தந்தைக்கே குருவான தங்கமகன் உனைக்காண
சிந்துபாடி வரும்வேக சிங்காரக் காவடிகள்!
பைந்தமிழின் பாட்டுக்கு பக்கமேளம் நாதசுரம்
தந்தினத்தோம் ஆட்டமாடித் தளராமல் வருகுதைய்யா!
                                                                                          (வேல்முருகா)

கந்தவேலின் சக்தியது கரைகாணா வெள்ளமது!
சுந்தரமாய் வந்துநின்று சூரனையும் வென்றதது!
தந்திரங்கள் மந்திரங்கள் சடுதியிலே நீக்கிவிடும்!
வந்தவினை அகற்றிவிடும் வரும்வினைகள் ஓட்டிவிடும்!
                                                                                          (வேல்முருகா)

மந்தனவன் திசையிலும் மக்களின் கலிதீர்ப்பாய்!
நந்தனவன் மருகனே தெய்வானை கணவனே
வந்தோம்நின் பழநிக்கு வடிவழகு முகம்காண!
சந்தோசம் பெருகுதையா தருவாயே நிம்மதியை!    
                                                                                   (வேல் முருகா...)

சந்தத்தில் தமிழெடுத்து சொந்தமுடன் பாடிவர
வந்துநின்று மனம்நிறைய வளர்சோதி யாய்ப்பெருகி
மந்தார மயில்மீது மகிழ்வோடு காட்சிதந்தாய்!
கந்தப்பழம் கண்டோமே கரமேந்தி வாழ்த்திடுவாய் !    
                                                                                     (வேல் முருகா...)

Wednesday, September 21, 2016

என்னநாஞ்சொல்லுறது ?! 5

ஒண்ணொண்ணா நெனப்புவச்சு
ஒழுங்காக வரிசவச்சு
பென்னால எழுதிவச்சு (பேனா)
பெருமையாப் பாத்துக்கிட்ட
பொன்னான காலம்போச்சு!
பொறுமையெல்லாம் போயிருச்சு!

பின்னால குத்திவச்ச
பேப்பருக்கு வேலையெல்லாம்
வெகுவாக கொறஞ்சுபோச்சு!
கண்ணால பாத்ததெல்லாம்
கணிணினியில முடக்கியாச்சு!
கண்ணுவலிக்கி எக்சர்சைசு!
கையிவலிக்கி எக்சர்சைசு!
முதுகுவலி வந்துருச்சு!
மொழங்காலு வலியுங் கூட
முணுமுணுன்னு வந்துருச்சு
மொத்தமா போட்டுருச்சு!

என்னடா வாழ்க்கையிது!
எல்லாத்துக்கும் எக்சர்சைசு!
எழுந்தஒடன காலையில
ஒழுங்காக நடக்கறதுக்கு

காலையில ஏந்திரிச்சு
வாசக்கூட்டிக் கோலம்போடு!
கையால பாக்கறவேலய
கனஜோராப் பாத்துப்போடு

ஐய்யாநீ ஏந்திரிச்சு
பாலு,காய வாங்கநட!
பழவகைய ஒருவேள
பக்குவமா உணவாக
எல்லாரும் எடுத்துக்கங்க!
நல்லதெல்லாம் உங்களுக்கே!!

என்ன நாஞ்சொல்லுறது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!

Monday, August 15, 2016

மலைக்கவைக்கும் நிலை வைத்து...

மலைக்கவைக்கும் நிலைவைத்து!
மாண்புறவே செதுக்கிவைத்து!!
மனைக்குவரும் மக்களெல்லாம்
மல்லாந்து பார்க்கவைத்து!!!
நிலைக்கவேண்டும் எனநினைத்து
நிலைவைத்துக் கட்டினார்கள்!

அகப்பக்கம் தெரிவதற்கு            
முகப்புவைத்துக் கட்டினார்கள்!
முகப்புக்குள் நுழைகையிலே
முல்லைப்பூ வாசம்வரும்!                

[ஒரு வீட்டின் முகப்புக்குள் நுழைகையிலே
அந்த வீட்டின் செல்வச்செழிப்பும்
அழகு ரசனையும் விருந்தோம்பலும்
தெளிவாகத் தெரியவரும்!]

தொட்டதெல்லாம் துலங்கவென்று
பட்டாலை கட்டினார்கள்!                    

[வீட்டில் முக்கியமான நிகழ்ச்சிகள்
பற்றிய செய்திகள் எல்லாம் இந்தப்
பட்டாலையில் வைத்துத்தான்
பெரியவர்களால் முடிவு
எடுக்கப்படும்]
                                                                         
அளவில் பெரிதாக                            
அழகுவரிசைத் தூண்வைத்து
அளவில்லாச் செல்வம்பெற      
வளவுதனைக் கட்டினார்கள்!

[அதாவது குழந்தைச் செல்வங்கள்    
ஓடிப்பிடித்து விளையாடுவதற்கு]

ஆலமரம் போல்செழித்து          
அருகுபோல் வளரவென்று        
ஆல்வீடும் கட்டினார்கள்!

[எல்லா வீடுகளிலும் அதிகப்படியாக
உள்ள மரப்பீரோல்கள் எல்லாம்
இங்குதான் வைப்பார்கள்.
குளிர்காலங்களில் படுப்பதும்
இங்குதான்]

இரண்டிரண்டாய்ப் பெருகிவந்து
இல்லம் செழிக்கவென்று                                              
இரண்டாங்கட்டும் கட்டினார்கள்!

[பந்திக்கட்டு என்றும் சொல்வார்கள்.
திருமணம் போன்ற முக்கிய
நிகழ்ச்சிகளுக்கு விருந்துவைப்பது
இங்குதான்]                                                                        

                                                                     
இடுப்பு வலிக்காமல்                          
இருந்து சமைப்பதற்கு                        
அடுப்படி வசம்பார்த்து                      
அழகுறவே கட்டினார்கள்!
               
[தரையில் இருந்து அல்லது
குனிந்து சமையல் செய்யும்போது
வயிற்றில் அனல் தாக்காது.
அதனால் கர்ப்பப்பை
பாதுகாக்கப்படுகிறது]

இல்லையென்று சொல்லாமல்    
அள்ளித் தருவதுமே                          
அளவறிந்து செய்தார்கள்!

[ஆற்றில் கொட்டினாலும்
அளந்துகொட்ட வேண்டும்
என்பார்கள்]

            ஆனால்   இன்று.....?!
           ----------------------------
http://muthusabarathinam.blogspot.in/2012/01/blog-post_


Related Posts Plugin for WordPress, Blogger...