Sunday, December 7, 2014

இரணியூர் ஆட்கொண்டநாதர்.

ஒற்றைவெண் பிறைதன்னை உச்சியில் வைத்தவா
                      உலகாளும் எம்பிரானே!
கற்றைச்ச டையினில் கங்கையைத் தாங்கியே
                      களிகூரும் தம்பிரானே!
பற்றியே கழுத்தினில் பாம்பினை அணிந்தவா
                      பரங்கருணைப் பேராளனே!
சுற்றியுனை வணங்கிடச் சொந்தங்கள் பெருக்கியே
                     சுகமாக்கும் சீராளனே!
கடலினை அதிகமாய்க் கடைந்ததால் வந்திட்ட
                     நஞ்சுண்ட கண்டனானாய்!
உடலிலே நோவென்று உன்னையே வணங்கினால்
                    உற்றதொரு மருந்தாயினாய்!
உடலிலே பாதியை உமயவள் பெற்றதால்
                  அர்த்தநா சனாரீசனானாய்!
கடலெனும் அன்பிலே அடியவர் பூசிக்கும்
                  திருநீறு வாசனானாய்!
ஆயகலை அனைத்துமே அறிந்தவன் என்றாலும்
                  அன்புமகன் குருவாகினான்!
மாயவன் மருகனின் மந்திர உபதேசம்
                 மயங்கியே கேட்டிருந்தாய்!
மாயவன் இரணியனை வதம்செய்த கோபத்தை
                 நீக்கியே ஆட்கொண்டவா!
மேயஉன் கருணையை முற்றோதல் செய்திட
                 இப்பிறவி போதுமாமோ!
சேயெங்கள் துணையாகிச் செய்கின்ற செயலெலாம்
                 செழித்தோங்கச் செய்திடுவாய்!
நேயமுடன் அடியவரை ஆட்கொள்ளும் நாதனே
                 இரணியூர் ஆளும்சிவனே                      
        

Saturday, October 18, 2014

சரசுவதி பாடல்

அன்னவா கனத்தமர் அன்னையே சரஸ்வதி
             அருட்கல்வி  அரசிநீயே!
சொன்னவாக் கினில்வந்து சுயமாகக் கவிபாட
             சொந்தமாய்க் கேட்டுவாவா!
உன்னரும் கருணையால் உயர்கல்வி பெற்றிட
             உரமூட்ட வேண்டிநின்றோம்!
இன்னரும் தமிழிலே இயலிசை இசைபட
             இதமாக எடுத்தாளத்தா!
வெண்கலை உடுத்தியே வீணைகைக் கொண்டுநீ
             விரலுவந்து மீட்டிடுவாய்!
வெண்மலர்த் தாமரை விழைந்துமே அமர்ந்துநீ
            வியன்காட்சி தந்தருள்வாய்!
இலக்கணம் இலக்கியம் நேரிசை நிரையசை
            இவையெலாம் புரியவேண்டும்!
தலைக்கனம் இல்லாமல் தக்கோரை நாடியே
            தமிழிலே மூழ்கவேண்டும்!
கற்றோர்கள் காமுறும் கவின்வேதம் நான்கையும்
            கையிலே வைத்திருப்பாய்!
வற்றாத கல்வியை முற்றாகத் தருவாயே
            சரஸ்வதி அம்மையுமையே!
காத்திருந்த காலங்கள் கனியாக மாறியே
            கைவந்து நிறையவேண்டும்!
கூத்தனூர் உறைகின்ற ப்ரம்மனின் துணையான
              ப்ராஹ்மியே அம்மை தாயே!           

Tuesday, September 23, 2014

ஆதீனமிளகி ஐயனார் போற்றி.

ஐயன் பெருமை சாற்றிட எமக்கு
ஐங்கர னேநீ அருள்வாய்போற்றி!

நரியங்குடி வாழ் நாதாபோற்றி!
சரணடைந் தோம்உனை சாஸ்தாபோற்றி!
பூரணை புஷ்கலை பதியேபோற்றி!
பொங்கிவரும் அருள் நிதியேபோற்றி!
அரிசிவன் மகனாய் உதித்தாய்போற்றி
கரிமுகன் தம்பி ஆனாய்போற்றி!
புலிமேல் வந்த புண்ணியபோற்றி!
கலிதீர்க் கவந்த கருணைபோற்றி!
ஆதீன மிளகி ஐயாபோற்றி!
கோதி லாக்குணம் தருவாய்போற்றி!
யாதும் ஆகி நின்றாய்போற்றி!
சோதி சூழும் சுடரொளிபோற்றி!
இருதுணை அருகமர் இனியாபோற்றி!
பருகும் தமிழாய் இனிப்பாய்போற்றி!
பெருகும் அன்பில் பிணைவாய்போற்றி!
உருகும் அருளில் உயர்ந்தோம்போற்றி!
ஆறூர் மக்களின் அகமேபோற்றி!
பேரருள் சுரக்கும் பெருமைபோற்றி!
பாரூர் வணங்கும் பரமேபோற்றி!  [உலகம்]
ஊரூர் எல்லை காவல் போற்றி!
வில்வ வனத்தமர் வேந்தேபோற்றி!
செல்வ வளம்தரும் செங்கைபோற்றி!
நல்ல மனத்தமர் நயமேபோற்றி!
சொல்லில் உயர்ந்த தமிழேபோற்றி!
இல்லறம் இனிக்கச் செய்வாய்போற்றி!
நல்லறம் தழைக்க அருள்வாய்போற்றி!
பில்லி சூனியம் விலக்குவாய்போற்றி!
தொல்லை தரும்பிணி நீக்குவாய்போற்றி!
சொல்லொடு பொருளாய் வருவாய்போற்றி!
வல்லமை தருவாய் போற்றி! போற்றி!
சுற்றி வந்துனை வணங்கினம்போற்றி!
சுற்றிவ ரும்பகை அழிப்பாய்போற்றி!
பற்றின வர்க்குப் பந்தம்போற்றி!
வற்றா நதிபோல் வளமேபோற்றி!
ஓசை மணியடித்[து] அழைத்தோம்போற்றி!
பூசை ஏற்க வருவாய்போற்றி!
வாச மலரெலாம் ஏற்பாய்போற்றி!
நேச மனதிலே நிறைவாய்போற்றி!
தாச தாசராய் ஆனோம்போற்றி!
பேச மறந்தனம் பிரியாபோற்றி!
அன்னை தந்தையாய் வருவாய்போற்றி!
தன்னை அறியச் செய்வாய்போற்றி
முன்னை வினையைத் தீர்ப்பாய்போற்றி!
கண்ணை இமைபோல் காப்பாய்போற்றி!
வெள்ளிக் கவசம் விழைந்தாய்போற்றி!
அள்ளி வரும்அருள் அழகேபோற்றி!
கள்ளமில் அன்பில் கரைவாய்போற்றி!
கள்ளூரும் காட்சியில் கனிந்தோம்போற்றி!
புள்ளிகள் பெருகச் செய்வாய்போற்றி!
தெள்ளிய மனதில் திகழ்வாய்போற்றி!
கள்ளருக்[கு] எமனாய் இருப்பாய்போற்றி!
விள்ளரும் சாதனை அருள்வாய்போற்றி!
வெண்பரி மீதமர் வேந்தேபோற்றி!
மண்பரி மழையாய் பொழிவாய்போற்றி![மண் மகிழும்வண்ணம்]
புரவி எடுப்பை ஏற்பாய்போற்றி!
உறவுகள் எல்லாம் சேர்ப்பாய்போற்றி!
சேமக் குதிரை சேவடிபோற்றி!
சாமத் துணையாய் வருவாய்போற்றி!
காட்டுக் கருப்பர் துணையேபோற்றி!
நாட்டும் புகழைத் தருவாய்போற்றி!
சாட்டை எடுத்து வருவாய்போற்றி!
நாட்டைத் திருத்தி நலம்தாபோற்றி!
வல்ல வேட்டிப் பட்டணிபோற்றி!
வீச்சறி வாள்கைக் கொண்டருள்போற்றி!
சாம்பி ராணி வாசாபோற்றி!
சோம்பல் இல்லாச் சுதந்திரம்போற்றி!
கருத்த மீசைக் கருப்பாபோற்றி!
வருத்தம் போக்கி வளம்தாபோற்றி
சுக்கு மாந்தடிச் சூராபோற்றி!
பக்க மிருந்து காப்பாய்போற்றி!
முன்னோடி  முன்வழி தருவார்போற்றி!
முன்னே வந்து காப்பார்போற்றி!
ராக்காயி பேச்சி ராத்துணைபோற்றி!
காக்கும் கருணை போற்றிபோற்றி!
கன்னியர் எழுவர் கழல்கள்போற்றி!
எண்ணிய மாலை தருவார்போற்றி!
திண்ணிய மனமே திரண்டருள்போற்றி!
நண்ணிய தெல்லாம் நலமேபோற்றி!
தேவானை வள்ளி முருகன்போற்றி!
பாவால் பாடிப் பணிந்தனம்போற்றி!
அஷ்டமி வைரவர் அருள்வார்போற்றி!
கஷ்டமி லைஎனும் கனிவேபோற்றி!
சப்பாணி சின்னக் கருப்பர்போற்றி!
எப்போ தும்துணை இருப்பார்போற்றி!
நொண்டிக் கருப்பா வருவாய்போற்றி!
கண்டிலம் உன்போல் கருணைபோற்றி!
பெரிய கருப்பர் பொன்னடிபோற்றி!
பிரிய முடன்துணை வருவாய்போற்றி!
காளி வீரப்பர் கண்டோம்போற்றி!
ஊழி தோறும் உறவேபோற்றி!
வாழும் வாழ்வின் வசந்தம்போற்றி!
சூழும் தீமை தீய்ப்பாய்போற்றி!

திருமஞ் சனநீ ராடுவாய்போற்றி!
திருவெ லாம்சேர அருள்வாய்போற்றி!
பாலபி சேகம் செய்தோம் போற்றி!
பாலரைக் காக்க வருவாய்போற்றி!
பஞ்சா மிர்தம் ஏற்பாய்போற்றி!
கொஞ்சிட மழலை தருவாய்போற்றி!
தயிரபி சேகம் செய்தோம்போற்றி!
பயிர்போல் வம்சம் தழைக்கணும்போற்றி!
இளநீர் அபிசேகம் செய்தோம்போற்றி!
கழனி விளையச் செய்வாய்போற்றி!
பன்னீர் அபிஷேகம் செய்தோம் போற்றி!
நன்நீர் பெறவே அருள்வாய் போற்றி
சந்தனக் குழம்பில் சார்வாய் போற்றி!
திருநீர்க் காப்பில் திகழ்வாய்போற்றி!
நாடிவந் துன்கழல் பணிந்தோம்போற்றி!
ஓடி வந்தருள் உன்னதம் போற்றி!

பாடிவந் துன்புகழ் பரவினம்போற்றி!
கூடியே வாழ்ந்திட அருள்வாய்போற்றி! [நரியங்குடிவாழ் நாதா]

Friday, August 22, 2014

அக்கினி ஆத்தாள் அருள்வேண்டல்.

அக்கினி ஆத்தா உன்புகழை
     ஆசையுடன் நாம் பாடவந்தோம்
சிக்கலை எல்லாம் தீர்த்துவைப்பாய்
     சீரடி போற்றி வணங்குகிறோம்!

பக்கமிருந்து பார்த்திருப்போம்
     பாசமுடன் எமைக் காத்திடுவாய்!
தக்கபடி நல் வாழ்வமைத்து
    தாரணி போற்றச்செய்திடுவாய்!

தொக்கென வந்தவர் துயர்தனையே
   தூர விலக்கி துணையிருப்பாய்!
சிக்கெனப் பற்றினம் உன்பாதம்
    சிரசில் வைத்தே வணங்குகிறோம்!

பெற்றவர் எல்லாம் பெருமையுற
    பிள்ளைகள் எல்லாம் செம்மையுற
பெற்றவை எல்லாம் பெரும்பேறாய்
    பெற்றது உந்தன் கருணையிலே!

நற்றவம் செய்தோம் நானிலத்தில்
    நல்ல புள்ளிகள் பெருகிடவே!
கொற்றவை உந்தன் பேரருளால்
    கூடியே நாங்கள் மகிழ்கின்றோம்!

பொற்றா மரைபோல் புன்னகையில்
    பூத்திருக்கும் உன் முகம் கண்டால்
வற்றா நதிபோல் வளம்பெருகும்
    வரங்கள் தந்து வாழ்த்திடுவாய்!

உள்ளிருக் கும்உன் வீடுவந்தால்
   புள்ளி மான்கள் மகிழ்வோடு
துள்ளிவி ளையாடும் சோலையிலே
   புள்ளினம்போல் மனம் இசைபாடும்!

பள்ளயம்  இட்டு  உனைவணங்கி
  கள்ளமில் அன்பால் காத்திருக்கோம்
உள்ளன் போடே ஏற்றெங்கள்
  உள்ளம் மகிழச் செய்திடுவாய்!

பள்ளம் மேடினை வாழ்க்கையிலே
   பக்குவமுறவே கடந்துவர
வெள்ளம் பொழியும் அருளாலே
  வினைகள் போக்கி காத்திடுவய்!



          ஏலம் எடுத்த பயன்

உப்பை எடுத்தவர் வாழ்வினிலே
    உயர்ந்து நலம்பறச் செய்திடுவாய்!

மஞ்சள் ஏலம் எடுத்தவர்க்கு
   மங்கல மனையறம் தந்திடுவாய்!

சர்க்கரை எடுத்தவர் சடுதியிலே
   சகலமும் பெற்றிடச் செய்திடுவாய்!

சேலை எடுத்தவர் வாழ்வினையே
    சோலை ஆக்கித் தந்திடுவாய்!

பன்னீர் ஏலம் எடுத்தவர்க்கு
    தண்ணீர் பஞ்சம் இல்லையம்மா!

பழத்தை எடுத்தவர் பலம் பெறுவார்!
    பகையை மறந்தே உறவாவார்!!

Tuesday, May 6, 2014

மத்தாப்பூச் சிரிப்பழகா!

மத்தாப்பூச் சிரிப்பழகா மயில்மேலே வருமழகா!
கொத்தாய்ப்பூ பூத்ததுபோல் கொஞ்சுதமிழ் பேரழகா!
சித்தத்தில் உனைவைத்து சீரடிகள் நினைந்துருகி
நித்தநித்தம் உனைவேண்ட நீவருவாய் திருமுருகா! ----------[மத்தாப்பூ]

சேவல்உன் கொடியிருக்க சிங்காரமாய் கையணைத்து
மேகாரம் மீதமர்ந்து மிடுக்குடனே காட்சிதந்தாய்!
தேவானை வள்ளியுடன் தேரினிலே வந்திடுவாய்
நோவாமல் கண்களினால் நோக்கிடநோய் போக்கிடுவாய்! -[மத்தாப்பூ]

சந்தத்தில் தமிழெடுத்து தானானாப் பாடிவர
சொந்தத்தில் உறவெடுத்து தோழனைப்போல் நீவருவாய்!
கந்தனுந்தன் பேர்சொன்னால் கவலையெல்லாம் துரத்திடுவாய்!
வெந்தமனம் வென்றுவர வேலெடுத்து வந்திடுவாய்! ----------[மத்தாப்பூ]

காலயிலே உனைப்பாத்தா கவிதையெலாம் ஊத்தெடுக்கும்!
மதியத்தில் பாத்துவந்தா மனசெல்லாம்! பூத்திருக்கும்!
மாலையில கண்டவங்க மகிழ்வுடனே வாழவைப்பாய்!
இரவுவந்து வணங்கிநின்றால் வரம்தந்து வாழ்த்திடுவாய்! --[மத்தாப்பூ]


Sunday, March 2, 2014

இரங்கலையோ?


ஆறுமுகன் சன்னதிமுன்
அன்னதானம் செய்யவும்
அறிவுப்பசிக் கென்று
கல்விதானம் செய்யவும் [வேதபாடசாலை]
சந்தானம் பெருகவென்று
சந்தான கோபாலர்வைத்து
அன்றாடம் பூசைசெய்ய
அந்தணரும் தான்வைத்து
அதற்குமொரு பங்குவைத்தார்!
இத்தனையும் செய்தாலும்
இரண்டுபிள்ளை கூட்டிவைத்தார்!
அத்தனின் மகனுக்கு
அருள்மனம் அருள்மனம் இரங்கலையோ?!
பிள்ளை பெறுவதற்கு
பெருந்தவங்கள் செய்யெவைத்து
புள்ளியெலாம் பெருகுதற்கு
பிள்ளையெனப் பிறக்கவைத்தாய்!
இத்தனையும் செய்தவர்க்கு
இளங்குமரன் இரங்கலையோ?
மகனாய் இருந்தவனை
‘மா’ புள்ளி ஆக்காமல்
மற்றவர்க்குத் தானவனை
மாப்பிள்ளை ஆக்குவையோ?

Related Posts Plugin for WordPress, Blogger...