Tuesday, November 30, 2010

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன்.

கற்பகக் கணபதியின் பொற்பதம் பணிந்துநான்
            கவிமழை பொழிய வேண்டும்!
கற்கண்டுத் தமிழாலே காரைநகர் மாரியின்
           கருணையைச் சொல்ல வேண்டும்!
கற்றவை கருவாகிக் கவியாக நான்வடிக்கக்
          கந்தனின் அருளும் வேண்டும்!
கொற்றவை புகழ்தனைக் கூறிநான் மகிழ்ந்திடக்
          குலதெய்வம் அருள வேண்டும்!
அந்தணர் குலமகள் பந்தமாய் வந்தவள்
          அழகான முத்துமாரி!
வந்தனை செய்பவர் வாழ்விலே வளங்களை
         வாரியே வழங்கும் மாரி!
ஆதங்கப் பட்டோர்க்கு அற்புதம் காட்டிடும்
          அன்னையே முத்துமாரி!
பேதங்கள் இல்லாது பேரருள் புரிந்திடும்
          பெட்டகம் முத்துமாரி!

உண்ணாமல் உறங்காமல் உணர்வெல்லாம் நீயாக
           உனைக்காண ஓடி வாரோம்!
கண்ணீரே பாலாகிக் காதலுடன் நாடினோம்
           கருணை மழை பொழியுமம்மா!
தன்னாலே வளர்ந்துவரும் தனித்தமிழில் தாயுனக்குத்
           தாலாட்டுப் பாடி வாரோம்!
உன்னாலே ஆகுமென உளமார நம்பினோம்
           உன்னதக் காட்சிதாரும்!
உயிர்போலத் தீச்சட்டி உவப்புடன் ஏந்தினார்
           உயர்வடைய வேணு மம்மா!
பயிர்வளர்த்துப் பக்குவமாய் பாதத்தில் சேர்க்கிறார்
           பாசத்தைக் காட்டுமம்மா!
மயில்தோற்கும் நடனத்தில் மகிழ்வோடு வருகிறார்
            மக்களைக் காருமம்மா!
ஒயிலான அழகோடு உளம்நிறைய அருளோடு
            உலகாளும் முத்துமாரி!


பூமாரி பொன்மாரி பொருளனைத்தும் தரும்மாரி
           புகழ்முத்து மாரியம்மா!
பூமாரி போலருள் பொழிந்திடும் பெரும்சக்தி
             ஓம்சக்தி மாரியம்மா!
பூமிதிக்கும் பாதங்கள் புகழ்நோக்கி நடைபோடப்
             புன்னகையில் வழிகாட்டுவாய்!
சாமியென வழிபடவே சங்கடங்கள் சம்கரிக்கும்
            சங்கரியே முத்துமாரி!
ஓம்என்ற சொல்லுக்குள் உலகாளும் மாதாவே
            உன்வேலைத் தாங்கி வாரார்!
நாமென்ற ஆங்காரம் நடுவழியில் மறைந்திட
           நல்வரம் தந்தருள்வாய்!
நோன்புக்குப் பலன்தந்து நொந்தவர் மனம்மகிழ
           நொடியிலே காட்சிதருவாய்!
வேம்புக்குள் விளையாடி வினையெல்லாம் தீர்த்தருளும்
          வித்தகியே முத்துமாரி!

சேவடிகள் நடனமிடச் சிறியவரும் பெரியவரும்
           சிலிர்த்தெழுந்து ஓடிவருவார்!
பாவடிகள் பாடிவரும் பக்தருக்கு நலம்கோடி
          பாவையிவள் மகிழ்ந்தருளுவாள்!
காவடியும் பால்குடமும் முளைப்பாரி மதுக்குடமும்
          தீச்சட்டி பூமிதியுமே!
காணக் கிடைக்காத காட்சியிது பங்குனியில்
         காரைநகர் பொங்கிவழியும்!
ஆணவம் நீக்கியே அருள்மழை பொழிந்திடும்
         அன்னையே முத்துமாரி!
பேணிஅடி பணிவோர்க்குப் பெருமைகள் தந்திடும்
          பெருங்கருணை முத்துமாரி!
கனவுகள் நன்வாக்கிக் கையிலே பலன்தரும்
           கற்பகம் முத்துமாரி!
காரைமா நகர்விளங்கும் மீனாட்சி புரம்உறை
          கண்மணி முத்துமாரி!
Friday, November 26, 2010

இரணியூர் ஆட்கொண்டநாதர் சிவபுரந்தேவி

அற்புதங்கள் செய்தெம்மை ஆட்கொண்ட நாதன்மகன்
கற்பகத்தின் கருணையிலே கனிந்துமனம் மகிழ்ந்துநின்றோம்
வலம்வந்து வணங்கிடவே வருந்துன்பம் களைந்திடுவாய்
நலம்தந்து பலம்தருவாய் அள்ளியள்ளி!


அள்ளிக் கொடுக்கின்ற அருளாலே வளம்கண்டு
வெள்ளி முளைக்குமுன்னே விரைவாகச் செய்திட்ட
தங்கக் கதவுதைத்த தனவணிகர் வணங்குகின்ற
எங்கள் தமிழ்நாட்டின் இரணியூரே!

இரணியனை வதைத்தநர சிங்கனவன் சாந்திபெற
இரணியூர் ஆட்கொண்ட நாதனவன் கருணையினைப்
பாட்டுக் கவியெழுதிப் பாடவந்த முத்து நான்
கேட்டுச் செவிகுளிர்ந்து பாராயோ!


பார்வையிலே எமைவைத்து பார்புகழ பலம்கொடுத்து
கோர்வையாய்த் தொழில்கொடுத்து குவலயத்தார் புகழவைத்தாய்!
கோவில் திருப்பணிக்கு கொண்டுவந்து கொடுக்கவைத்தாய்
நாவினிக்கத் தமிழ்பாடத் தாராயோ!


தாஎன்று கேட்குமுன்னே தருகின்ற தெய்வமய்யா
தேமதுரத் தமிழ்போலத் திக்கெட்டும் புகழ்பரப்பும்
கல்லுத்தி ருப்பணியும் கலைமிளிரும் சிலையழகும்
சொல்லித் தெரிவதில்லை காணீரோ!


காணும் கண்ணழகே! கைவிரலின் நகம்அழகே!!
பூணும் அணியழகே!பூவிரியும் முகத்தழகே!!
சிவபுரந் தேவியரே சிரித்தமுகத் தாமரையே!!!
நவசக்தி நல்லருளில் நனையீரோ!


நனைகின்ற அன்பாலே நாள்தோறும் வணங்கிவர
மனைமக்கள் சுற்றம்சூழ மகிழ்ந்திருக்கச் செய்வீரே!
தனம்தந்து தளர்வில்லா மனம்தந்து தகைசான்ற
குணம்தந்து குலம்தழைக்கச் செய்வீரே!

முருகா என்றால் முத்தமிழாய்.....

வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்-ஆஹா
வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல்

முருகா என்றால் முத்தமிழாய்-மால்
மருகா வருவாய் மயில்மேலே!
உருகா உள்ளமும் உருகாதோ-அன்பு
பெருகா தோஉன் பேர்சொன்னால்!--அஹா வேல்
பெருகும் அன்பில் பிணைந்தவனே-உயிர்க்
கருவாய் உயிரில் இணைந்தவனே!
நறுமணச் சந்தனப் பிரியனுனை-காண
மறுபடி மறுபடி வருகின்றோம்!--அஹா வேல்
சேவல் கொடியுடை செல்வமகன்-காணா
ஆவல் மிகவே ஆகுதையா!
பூவால் உன்னைப் பூசித்தோம்-தமிழ்
நாவால் பாட நலம்தருவாய்!--ஆஹா வேல்
பாலும் தேனும் அபிசேகம்--காண
பாலன் உனையே நாடிவந்தோம்!
வேலும் மயிலும் துணையென்றே-நடை
கோலும் இன்றிக் கூடிவந்தோம்!--ஆஹா வேல்
கையும் காலும் கடைசிவரை-பிறர்
கையை எதிர்பார்த் திருக்காமல்
செய்யும் செயலைச் சிறக்கவைப்பாய்-ஐயா
பெய்யும் மழையென அருள்புரிவாய்--ஆஹா வேல்
நெடித்த திருமால் மருமகனே-மனச்
செடிக்கு உரமாய் இருப்பவனே!
வெடித்த பஞ்சாய்ச் சிரிப்பவனே-பாப்
படித்த படியுனைச் சரணடைவோம்!--ஆஹா வேல்
எடுத்த காவடி எல்லார்க்கும்-மனம்
பிடித்த படியே வாழ்வுதந்தாய்!
தொடுத்த பூவால் மாலையிட்டோம்-இனி
அடுத்த பிறவியும் உன்னடிமை--ஆஹா வேல்
உன்னைத் தேடியே வருவோர்க்கு-அவர்
முன்னை வினைகளை முடித்துவைப்பாய்!
தன்னே ரில்லாத் தமிழ்மகனே-ஆஹா
என்னே உன்னருள் எழிலழகா!!--ஆஹா வேல்

Friday, November 19, 2010

அக்கினி ஆத்தாள் பாட்டு

காக்கும் கரமுடைய கற்பகமே கவின்தமிழே
கேட்கும் வரமளிக்கும் கேண்மையளே கிளரொளியே
பூக்கும் மலர்தேடிப் பூம்பாதம் சேர்க்கின்றோம்
ஆக்கும் அருட்கருணை தா!

அன்னையே அமுதமே ஆனந்தவெள்ளமே
              அருட்சோதி வடிவாகினாய்!
தன்னையே மறந்துநான் தமிழ்பாடி வந்திட
             தமிழுக்கு எழில் கூட்டுவாய்!
நன்மையும் தீமையும் நாளுமுள்ள வாழ்க்கையில்
             நான் உழன்று அழுந்தாமலே
உன்னையே தினம்தினம் உள்ளத்தில் துதிக்கிறேன்
              ஒய்யாரக் காட்சி தருவாய்!
மண்ணிலே துன்பங்கள் மலைபோல வந்தாலும்
              மாதரசி உனை வேண்டினால்
கண்ணிலே காணாமல் கடுகியே மறைந்திட
              கைதூக்கி வரமருளுவாய்!
சின்னஉரு சிரித்தமுகம் சீர்புகழில் பழுத்தமுகம்
             சிங்காரப் பூந்தோட்டமே
அன்னமென நடைபயின்று அருள்பொழிய வருவாயே
             அக்கினி ஆத்தா உமையே!

உயிருக்கு உயிராக உயிருக்குள் உயிராக
              உருவாகி வந்தவள் நீ!
கருவுக்கு கருவாகி கருவுக்குள் கருவாகக்
             காக்கின்ற கருணை நீயே!
புல்லர்க்குப் புல்லராய்ப் புன்மைசெய் தாரையும்
            புறந்தந்து திருந்தவைப்பாய்
நல்லார்க்கும் நல்லராய் நன்மைகள் செய்தவரை
            நானிலம் போற்றவைப்பாய்!
வெல்லத் தமிழினில் விரிவாக உன்புகழை
           விழைந்துநான் பாடுகின்றேன்!
சொல்லத் தெரியவில்லை சொற்பதங் கடந்துநீ
            துரியநிலை காட்டுகின்றாய்!
நாளும்உன் புகழ்பாடி நல்லறம் செய்துமே
            நம்குலம் தழைக்கவேண்டும்
ஆளும்அருள் வேண்டினோம் ஆசிதர வேண்டும்நீ
            அக்கினி ஆத்தா உமையே!

மணமாலை கேட்டவர்க்கு மணவாழ்வு அமைந்திட
            மாலை எடுத்துத் தந்தாய்!
மழலை வரம் கேட்டவர்க்கு மங்காத புகழ்தரும்
             மழலையும் தான் கொடுத்தாய்!
வேலையென்றும் வீடென்றும் வேண்டிவரம் கேட்டவர்க்கு
             விரைவிலே தான் தருகுவாய்!
விலையொன்றும் கேட்காமல் மலைபோன்ற நன்மைதரும்
             விந்தையை என்ன சொல்வேன்!
மாசியில் படைப்புவரும் மறுபடியும் நல்லபல
              மாற்றங்கள் வந்துசேரும்!
பேசிமகிழ் பேரன்கள் பேத்தியுடன் பெண்மக்கள்
              பிரியமுடன் நாடிவருவார்!
நேசிக்கும் உன்படைப்பில் நெருங்கிவரும் உறவுகள்
              நெஞ்சுருக நினைத்திருக்கும்!-உன்
ஆசியில் புள்ளிகள் ஆனந்தம் பெருகட்டும்
               அக்கினி ஆத்தா உமையே!

தேர்போல குடும்பங்கள் சேர்த்துமே வைத்துநீ
              செகம்போற்ற வாழவைப்பாய்!
ஊர்போற்றி மெச்சவே ஒற்றுமை ஆக்கிநீ
             உள்ளங்கள் நெகிழவைப்பாய்!
மனதிலே நினைப்பவர் மாபெரும் சக்திபெற
            மாயங்கள் செய்திடுவாய்!
தனதென நினையாமல் தருகின்ற நல்லவரை 
          தழைத்தோங்கச் செய்திடுவாய்!
உன்னரும் கருணையால் உள்ளம் நனைந்துமே
           உருகியே நிற்கிறோமே
என்னரும் தாயேநீ எழிற்கோலம் காட்டியே
        எங்களை ஆட்கொள்ளுவாய்!
இன்றுபோல் என்றுமே இல்லங்கள் செழித்திட
           இன்னருள் புரிந்திடுவாய்!
கன்றுபோல் எங்களைக் காக்கின்ற தெய்வமே
            அக்கினி ஆத்தாஉமையே!

     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
     ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்.

Monday, November 15, 2010

வனதேவதை.

இந்த மரங்கள்
நமக்காக
வானம்பார்த்து வரம்கேட்கும்
பச்சை ஆடை உடுத்த
வன தேவதைகள்!
நட்டுவைத்து
வளர்த்து வந்தால்
இந்த உலகில்
நாம் வாழ்ந்ததைக்காட்டும்
அற்புத அடையாளம்!

Sunday, November 14, 2010

வாழ்வின் வசந்தகாலங்களில்.....தேதி இட்டும் இடாமலும் சேர்த்துவைத்தநினைவுகள்

இதயங்களின் சங்கமத்தை
இதயங்கள் உணருமுன்னே
இல்லறமும் நல்லறமும்
புரியாத வயதினிலே
இணைத்துவிட்டார் நம்மை!
அன்பே......
அப்போது புரியாத
அன்பின் வேகமெல்லாம்
இப்போது உணர்கின்றேன்!
இதயத்தில் பதிக்கின்றேன்:
அன்று நீ....
கன்னிப் பூக்களின்
கனவு மாளிகையில்
எண்ணற்ற தீபம்
ஏற்றிவைத்த இளவரசு!
புதுமைப் பூக்கள்மலரும்
பொன்மணி மண்டபத்தின்
நிகரிலாத் திருவிளக்கு!
நீ என்இதயத்துக்கு!!
வண்ண நிலவுகளின்
வானுயர்ந்த ஆசைகளில்
மன்னன் நீ...
ஆனாலும்
என் இதயமாளிகையின்
இந்திரக் கனவுகளில் மட்டுமே
நிசமானாய்!
நித்தியத்தாமரை போலும்
நின் இரு கைமலர்கள்
சித்திப்பதில்லை யார்க்கும்!
சித்தம் கிறங்க வைத்தாய்!!
நித்தம் என் நினைவை
விட்டகல மறுக்கின்றாய்!
ஏன்?...
வரம்வேண்டி உந்தன்
வாழ்க்கைத்துணை ஆகினேனோ?!
இரக்கமற்ற இரவுகள்
உறக்கமற்றுப் போய்...
நெஞ்சை அடைக்கிறது
நினைவின் பேரலையில்
மூச்சுத் திணறுகிறேன்...
ஓ....அந்த நாட்கள்
சுகமான ராகங்கள்
சொந்தமுடன் இசைத்துவரும்
இளமைப் பூங்காவின்
இனிய சங்கீதம்
தனிமை கிடைக்கையிலோ
பனிமலர்போல் உல்லாசம்!
எப்போதும் நீ
உதயச் சூரியனின்
இதமான ஒளியாகி
இல்லத்தை நிறைக்கின்றாய்!
இன்னும் தொடர்கின்றாய்!!
தொடரட்டும் உன்னைப்பற்றிய
தூய அன்பின் நினைவுகள்!

இந்த எண்ண வெளிப்பாடுகள்
எழுதப்பட்ட ஆண்டு ஆயிரத்து
தொள்ளாயிரத்து எண்பத்து இரண்டு!
என்ன குழந்தைகளே வியப்பாக இருக்கிறதா!?
இப்போதுதானே புதுயுகப்புத்தகம் கொஞ்சம்
புரிய ஆரம்பித்திருக்கிறது
அதனை உங்களுடன்
பகிர்ந்துகொள்ளத் தோன்றியதால்
எழுதினேன்! எப்படி இருக்கிறது?

.

Monday, November 8, 2010

காரைக்குடி நாகநாதபுரம் தெட்சிணாமூர்த்தி

ஆலிலைக் கண்ணன்முன்னே
ஆலயம் கண்டாய் போற்றி!
ஆலமர் கடவுள் போற்றி
ஆலமர் கடவுள் போற்றி!

மால் அயன் கோவில்முன்னே
மகிழ்வுடன் அமர்ந்தாய் போற்றி
மகிழ்வினைத் தாராய் போற்றி
மகிழ்வினைத் தாராய் போற்றி

காரையின் நாகநாத
ஊரினில் உவந்தாய் போற்றி!
பாரினில் உயர்ந்தாய் போற்றி!
பாரினில் உயர்ந்தாய் போற்றி!

ஊரணிக் கரையில் அமர்ந்து
ஊரினைக் காப்பாய் போற்றி!
ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி!
ஊழ்வினை தீர்ப்பாய்போற்றி!

சனகாதி முனிவர் போற்றும்
சற்குரு நாதா போற்றி!
சங்கடம் தீர்ப்பாய் போற்றி!
சங்கடம் தீர்ப்பாய் போற்றி!

பாறையில் நீர்சுரக்கும்
ஓரைந்து எழுத்தேபோற்றி!{குருவே நம}
காரையின் கவினே போற்றி!
காரையின் கவினே போற்றி!

கிழமையில் வியாழனன்று
தொழுக நற்பலனே போற்றி!
வளமெலாம் தருவாய் போற்றி!
வளமெலாம் தருவாய் போற்றி!

நெய்யினால் தீபம் ஏற்றி
நின்கழல் பணிவோம் போற்றி!
இன்னலைக் களைவாய் போற்றி!
இன்னலைக் களைவாய் போற்றி!

கொண்டைக் கடலை மாலை
கொண்டணி குருவே போற்றி!
தண்டமிழ் தருவாய் போற்றி !
தண்டமிழ் தருவாய் போற்றி!

மஞ்சளில் பட்டணிவித்தால்
மங்கலம் தருவாய் போற்றி!
பொங்கிடும் அருளே போற்றி!
பொங்கிடும் அருளே போற்றி!

மலரினில் முல்லைப்பூவை
மகிழ்வுடன் ஏற்பாய் போற்றி!
நெகிழவைத் திடுவாய் போற்றி!
நெகிழவைத் திடுவாய் போற்றி!

கன்னியர் மணவாழ் வமைய
எண்ணிய[து] அருள்வாய் போற்றி
தன்னிக ரில்லாய் போற்றி!
தன்னிக ரில்லாய்போற்றி!

கலைகளைக் கைவரக் கற்க
தருநிதிச் செம்மால் போற்றி!
கருணைசெய் கடலே போற்றி!
கருணைசெய் கடலே போற்றி!

வலம்வந்து வணங்கி நின்றால்
வல்வினை தீர்ப்பாய் போற்றி!
வல்லமை தருவாய் போற்றி!
வல்லமை தருவாய் போற்றி!

அரும்பணி ஆற்றத் துணையாய்
விரும்பியே அருள்வாய் போற்றி!
பெரும்புகழ் தருவாய் போற்றி!
பெரும்புகழ் தருவாய் போற்றி!

நினைத்ததை நடத்தி நன்மை
பயக்கவைக் கின்றாய் போற்றி!
வியக்கவைக் கின்றாய் போற்றி
வியக்கவைக் கின்றாய் போற்றி!

பாவினால் உன்னைப் பாட
நாவினில் நின்றாய் போற்றி!
காவியம் ஆனாய் போற்றி!
காவியம் ஆனாய் போற்றி!

நாரணன் முயன்று செய்ய
நல்லருள் தந்தாய் போற்றி!
நலமெலாம் தருவாய் போற்றி!
நலமெலாம் தருவாய் போற்றி!

எட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு!

பாசிப்பருப்பு மசியலுக்கு
பக்குவமாய் உப்பிட்டு
உருக்கி நெய் ஊத்தி
சீரகமும் பூண்டும் அதில
சிக்கனமாத் தட்டிப்போட்டு
கருவேப்பிலை கிள்ளிப் போட்டு
கடைஞ்சு வச்சா சாப்பாடு..ஆஹா!
முறுக்கா ஆரம்பிக்கும்!
முதல்ருசியே மூக்கை இழுக்கும்!!

அம்மியில்லாத ஆச்சிவீடு உண்டா?!

அம்மியில அரச்சுப்போட்டு
ஆச்சிவச்ச கறிக்குழம்பு
கம்மியாவே இருந்தாலும்
களிப்பூட்டும் ருசியிருக்கும்!
பலாக்காயில பருப்புப்போட்டு
கூட்டுக் கறிவச்சா....
ஆட்டுக் கறிகூட
அதுக்குஇணையில்லையப்பா!
அவரைக்காய் இளங்குழம்பு
அதுக்கு ஒரு தனி ரெசிபி{பக்குவம்}
 சீரகமும் கசகசாவும்
பூண்டும்வச்சு அம்மியில
புதுசாத்தட்டிப் போட்டு..
ஆஹா..
இதுவல்லோ இளங்குழம்பு!
புடலங்காய்த் துவட்டலுக்கு
துவரம்பருப்பு அரைவேக்காட்டில்!
அடடா! அதுவொருசுவை!
பலகாய் போட்டு ஒரு மண்டிவைப்பார்!
உலகமெலாம் விரும்புகின்ற
உருசியான மண்டியப்பா!
பறங்கிக்காய் புளிக்கறியும்
பக்குவமாய்க் கருணையிலே
படுருசியாய் மசியலும்
இங்கிலீசு கய்கறியில்
இதமாகக் காரமிட்டு
பிரட்டல் வைப்பார்கள்
பிடித்தபடி சாப்பிடலாம்!
அமிர்தத்தைப் போல
அரிசிப் பரமான்னம்!
அப்பளமும் பொரிச்சுவைப்பார்
அதுவல்லோ ஆனந்தம்!

வத்தல் வகை

வத்தலிலே வகைவகையாய்
வறுத்து வைப்பார்கள்!
கிள்ளிக்கிள்ளிக் காயவைத்த
கிள்ளுவத்தல்!
வத்தக்குழலில் பிழிஞ்சுவச்ச
தேங்குழ வத்தல்
வண்ணம்கலந்து காயவைத்த
ரொசாப்பூ வத்தல்!
துணியில் ஊத்திக் காயவைத்த
கேப்பை வத்தல்!
மோருக்குள்ள போட்டுவச்ச
மொளகாவத்தல்! சுண்டவத்தல்!
பலகாயும் மோருக்குள்ள
பக்குவமாப் போட்டுவச்ச
காய்கறிவத்தல்!

பலகார வகையும் தொட்டுக்கொள்ளுவதும்!
வெள்ளைப் பணியாரத்துக்கு
வரமிளகாய்த் துவையல்!
மசாலைப் பணியாரத்துக்கு
கதம்பத் துவையல்!
உளுந்தவடை சுட்டாக்க
தேங்காய்ச் சட்டினி!
மசால்வடை சுட்டாக்க
இஞ்சி சேத்த சட்டினி!
பொங்கல் போட்டாக்க
முருங்கைக்காய் சாம்பார்!
இடியாப்பம் செஞ்சாக்க
கத்தரிக்காய் கோசமல்லி!
ரவா உப்புமாவுக்கு
பாசிப்பருப்பு பச்சடி!
அடைத்தோசை சுட்டாக்க
பொரிச்சுக்கொட்டித் துவையல்!
இளந்தோசை சுட்டாக்க
வெங்காயக் கோசு!
அஞ்சரிசித் தோசைக்கு
வெங்காயம் பூண்டுவச்சு
தேங்காய்த் துவையல்
ஊத்தப்பம் தொட்டுக்க
துவரம்பருப்பு சட்டினி!
அரிசி உப்புமாவுக்கு
அரைச்ச மல்லித்துவையல்!
பூரிக்கு கிழங்கு!
சப்பாத்திக்கு குருமா!
இட்டலிக்கு டாங்கரு!
சும்மா குளம்பும் வைக்கலாம்!
புளிமிளகாய் கரைக்கலாம்!!

இனிப்பு வகை

கருப்பட்டியும் நெய்யும்சேத்த
ஆடிக்கூழு கும்மாயம்!
தேடிவாங்கிச்சாப்பிடலாம்
திகட்டாத பலகாரம்


வெல்லம்போட்டு ஏலம்சேத்து
ஆட்டிச்சுட்ட கந்தரப்பம்
இனிப்புச்சீயம்!
தேங்காய்திருவி நெய்போட்டு
வேகவச்ச கவுனரிசி!
பசங்கவிரும்பிச் சாப்பிடுற
பால்பணியார மாவு
பக்குவமா அரைக்கலைன்னா
படபடன்னு வெடிச்சிரும்!
ரெங்கூன்புட்டு சாப்பிட்டதும்[மனசு]
ரெக்கை கட்டிப்பறக்கும்!
உக்காரை ருசியில
ஒலகமே மறந்துரும்!
கருப்பட்டிப் பணியாரம்
விருப்பம்போல சாப்பிடலாம்!
குருவை அரிசிப் பணியாரம்
குசியாகச் சாப்பிடலாம்!
முகம் மலர வரவேற்று
மூச்சுமுட்ட அன்னமிடும்
நகரத்தார் பண்பாட்டை
நாடே வியந்தறியும்!

Tuesday, November 2, 2010

தேவகோட்டை வெள்ளிக்கிழமை சாமிவீட்டு லெட்சுமிஆத்தா

          ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
          ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
வெள்ளிக் கிழமையுன் வீடுதனை மெழுகியே
        விளக்கேற்றி வைத்து வருவார்
துள்ளிவரும் வேல்போல துயர்துடைக்க வந்திடும்
          துணையாக நீ இருப்பாய்!
மல்லிகை முல்லையுடன் மலரெல்லாம் சூட்டியுன்
         மலர்ப்பாதம் பணிந்துநிற்பார்
கல்லிதயம் கொண்டாரைக் கனிவாக மனம்மாற்றிக்
             காவலாய் நீ இருப்பாய்!
கள்ளிருக்கும் பூவிலே கண்மயங்கும் வண்டாக
            களிப்போடு பார்த்திருப்போம்
அள்ளிக்கொடுக்கின்ற அன்பாலே உனைநாங்கள்
             ஆசையுடன் நாடிவந்தோம்
உள்ளத்தில் இருத்தியே உறவுகள் மேம்பட
            உன்னருள் வேண்டிநின்றோம்
வெள்ளமென அருள்பொழிந்து வியக்கவே வைக்கிறாய்
             லெட்சுமி ஆத்தாஉமையே!
      ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
      ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

இறையருளால் ஆக்கம்
திருமதி முத்துக்கருப்பாயி சபாரெத்தினம்
                                                  காரைக்குடி

Monday, November 1, 2010

நெஞ்சை உருக்கிய அஞ்சுநொடி!

கொஞ்சுமொழி தனைமறந்து கொட்டுகின்ற கண்ணீரில்
பிஞ்சுமதி முகங்களெல்லாம் பேச்சின்றித் தவிக்கவைத்து
நெஞ்சை உருக்குகின்ற நீண்டவான் பயணத்தை
அஞ்சு நொடிகளிலே ஆக்கிவைத்த பூகம்பம்!
தாய்க்குக் கோபமென்றால் தன்குழந்தை என்செய்யும்?
பேய்க்கும் இரக்கம்தரும் பேரழிவு வந்ததனால்
பாய்க்கும் பருகுதற்கும் பசியேற்கும் உணவுக்கும்
போய்க்கெஞ்சும் நிலைமைக்குப் போய்விட்ட மனிதர்கள்!

பூகம்பத்தின் பாதிப்புகளைப் பார்த்து
என்மனதில் ஏற்பட்டவடுக்கள்
இன்னும் ஆறவேஇல்லை!
மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை
எல்லோரும் உணரவேண்டும்.மானிடப்பிறவி
கிடைத்தற்கரியதல்லவா!


தம்மால் முடியுமென்று தந்தவள்ளல் அழகப்ப
எம்மான் பேர்விளங்கும் எழில்காரை மாநகரம்!
நம்பிக்கை கொண்டவர்கள் நலமுயர்த்தும் காரையிலே
செம்மாந்து நிற்கின்ற செல்வநிறை மக்களெல்லாம்
அம்மாவாய் அப்பாவாய் அருமையுள்ள சோதரராய்
தம்பியராய்த் தங்கையராய்த் தாமாக உதவிநின்றோம்!

குஜராத் பூகம்பத்தின்போது எழுதியது
Related Posts Plugin for WordPress, Blogger...