கொஞ்சுமொழி தனைமறந்து கொட்டுகின்ற கண்ணீரில்
பிஞ்சுமதி முகங்களெல்லாம் பேச்சின்றித் தவிக்கவைத்து
நெஞ்சை உருக்குகின்ற நீண்டவான் பயணத்தை
அஞ்சு நொடிகளிலே ஆக்கிவைத்த பூகம்பம்!
தாய்க்குக் கோபமென்றால் தன்குழந்தை என்செய்யும்?
பேய்க்கும் இரக்கம்தரும் பேரழிவு வந்ததனால்
பாய்க்கும் பருகுதற்கும் பசியேற்கும் உணவுக்கும்
போய்க்கெஞ்சும் நிலைமைக்குப் போய்விட்ட மனிதர்கள்!
பூகம்பத்தின் பாதிப்புகளைப் பார்த்து
என்மனதில் ஏற்பட்டவடுக்கள்
இன்னும் ஆறவேஇல்லை!
மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை
எல்லோரும் உணரவேண்டும்.மானிடப்பிறவி
கிடைத்தற்கரியதல்லவா!
தம்மால் முடியுமென்று தந்தவள்ளல் அழகப்ப
எம்மான் பேர்விளங்கும் எழில்காரை மாநகரம்!
நம்பிக்கை கொண்டவர்கள் நலமுயர்த்தும் காரையிலே
செம்மாந்து நிற்கின்ற செல்வநிறை மக்களெல்லாம்
அம்மாவாய் அப்பாவாய் அருமையுள்ள சோதரராய்
தம்பியராய்த் தங்கையராய்த் தாமாக உதவிநின்றோம்!
குஜராத் பூகம்பத்தின்போது எழுதியது
3 comments:
பூகம்பத்தின் பாதிப்புகளைப் பார்த்து
என்மனதில் ஏற்பட்டவடுக்கள்
இன்னும் ஆறவேஇல்லை!
மனித வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை
எல்லோரும் உணரவேண்டும்.மானிடப்பிறவி
கிடைத்தற்கரியதல்லவா!
......மனதை உலுக்கும் சம்பவங்கள் கேட்கும் போதெல்லாம், தோன்றும் எண்ணங்கள் ....ம்ம்ம்ம்.... நன்றாக கவிதையில் படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள்.
அம்மாவுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!!
கவிஞர் தேனம்மையின் கவிதைகளைப் பார்த்து அசந்து போயுள்ளேன்..உங்கள் கருவறையில் குடிகொண்டவர் அல்லவா.. அம்மாவின் ஞானமே இவ்வளவு இருக்கும் போது..அதான் அவருக்கும் இவ்வளவு பெரிய ஞானம்..தாய்வழிச் சொத்து என் நினைக்கிறேன்..அற்புதமான கவிதைகள்.. தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி..அன்புடன் வெற்றி
Post a Comment