Friday, November 18, 2011

வயது? சாதனை! 3

அமெரிக்க துணை ராணுவ அமைச்சர் டொனால்டு குவாகல்ஸ் என்பவரின் மனைவி ஏழு பேரன், பேத்தி களை உடையவர்.அவர் விமானம் ஓட்டக்கற்று,பைலட் லைசன்ஸ் வாங்கிக் கொண்டார்.அப்போது ஒருவர் அவரிடம் ஏன் இந்தவயதில் விமானம் ஓட்ட கற்றுக்கொண்டீர்கள்? என்று கேட்டார்.
"இளமைக்கு திரும்பிப்போய் கற்பது இனி சாத்தியமில்லை என்பதால்தான்" என்றார் அந்தப்பாட்டி. பறக்கும் பட்டு பாட்டி!

நன்றி தினமலர் சிறுவர் மலர்.[அக்டோபர் ௧,௨0௧0]

Saturday, October 29, 2011

யாதுமாய்!

பட்டம் வாங்குதற்குப் பணிசெவதில்லையிவர் [துன்பப்]
பட்டவர்க்கு உதவுகின்ற பரந்தமனப் பண்பாளர்!
கிட்டும்வண்ணம் நன்மையெலாம் கேண்மையுடன் செய்திடுவார்
தொட்டதெல்லாம் பொன்னாகும் தூயமனச் செம்மலிவர்!

வங்கியிலே போட்டுவைத்து வளர்நிதியம் போதுமென்பார்!
பொங்கிவரும் செல்வத்தில் பொருளில்லார்க் கெனக்கொஞ்சம்
கங்கையெனப் பெருகிவர களிப்போடு தந்திடுவார்!
மங்கலங்கள் சேர்கஎன மனமார வாழ்த்திடுவார்!

கோவில்திருப் பணிசெய்யக் கொண்டுவந்து தந்தவர்கள்
வாழ்வில்கருப் பனின்கையால் வல்லருள்பெற் றுய்யவென
யார்க்கெனவும் வேண்டிநிற்பார் யாதுமாய் வருகஎன்று
நார்இழையும் நன்மலராய் நலம்பெருக வேண்டிநிற்பார்!

நற்குழந்தை கல்விக்கும் நலிந்தவர்க்கும் சிறிதுதவி
பெற்றவர்கள் மனம்மகிழப் பிரியமுடன் பேசிடுவார்!
தற்புகழ்ச்சி கொள்ளாத தனிப்பெருந் தகையாளர்!
சொற்புகழ்ச்சி வேண்டாத சொக்கத் தங்கமிவர்!

பெற்றவர்க்குப் பெருமகனாய்ப் பெருமையுறப் பேணியிட்டார்!
உற்றவர்க்கு உறுதுணையாய் உளமகிழப் பணிசெய்தார்!
நற்றவத்தால் பெற்றமகன் நலமுறவே வாழவேண்டி
பெற்றவர்கள் வாழ்த்திடவே பிறந்திட்டார் வாழியவே!


Wednesday, October 26, 2011

தீபாவளி.

அதிகாலை இரண்டுமணி
அவசரமாய் எழுந்துவந்து
அரிசிபருப்பு ஊறவச்சு
வெரசாப் பல்லுவெளக்கி
வெறகடுப்பப் பத்தவச்சு
வேகமாப் பருப்பெடுத்து
வெஞ்சனச்சட்டியில
வேகவச்சுட்டு
வெங்காயம் உரிச்சுவச்சுட்டு
வரமொளகா தொவையலறச்சு
பணியார மாவறச்சு [அந்தக்காலத்துல கையால
                                                                         ஆட்டுக்கல்லுலஅறைக்கிறது]
பக்குவமா ஊத்திப்புட்டு
கல்கண்டு வடைக்கும்அறைச்சுக்கிட்டு
சாம்பாரையும் வச்சுக்கிட்டு
பாலுக்காரர் வந்ததும்
காப்பிபோட்டுக் குடிச்சுப்பிட்டு
வென்னீரப் போட்டுவச்சு
பிள்ளைகள உசுப்பிவிட்டு
எண்ணதேச்சுக் குளிக்கறதுக்குள்ள
ஆத்தா ஒண்ணு -------[அம்மா]
ஒண்ணே ஒண்ணு தாங்கஆத்தா
தந்தியண்ணா சீக்கிரமா
குளிச்சுப்பிட்டு வாரனாத்தா.
ஆத்தா ஆத்தான்னு
குளிக்கவைக்க ரொம்பப்பாடு!
புதுத்துணியப் போட்டுக்கிட்டு
சமிகும்பிட்டு கோவில்போறதுக்குள்ள
பக்கத்துவீட்டுப் பசங்களோட
உடையழகப் பகுந்துக்கிட்டுக்
கோவில்போயிவந்த ஒடன
பலகாரஞ்சாப்பிட்டதும்
வெடியவெடிக்க ஓடிப்போயி
அங்கஒரு சின்னச்சண்டைபோடுக்கிட்டு
சண்டைபோடாம வெடிங்கப்பான்னு
சொன்னவார்த்தைக்கு கட்டுப்பட்டு
எப்போதும் எங்களுக்கு
தொந்தரவே கொடுக்காமல்
வளந்தபிறகு வருசத்துக்கு
ஒவ்வொரு பிள்ளையா
கல்லூரிக்கு போயிவந்து
வேலைக்கும்போன பிறகு
கலியாணம் முடிஞ்சகையோட
தனிக்குடித்தனமும் வச்சுப்பிட்டு
ஐயாவைப் பாத்துக்கிட்டு
ஆபீசுக்கு போயிவந்துக்கிட்டு இருக்கயில
ஐயாவின் காலம்முடிஞ்சு
அவுகளும் போனபின்னால
அப்பாவுக்கும் பணிஓய்வு!
இனிமேல என்னபண்ண?
ஒண்ணுமே புரியலயேனு
சோந்துபோயி இருக்கயில
ஐயனாரு கோயில
கும்பாபிசேகம்பண்ண
வேலபோட்டுக் குடுத்தாரு ஐயனாரு!
வெறும்பொழுதாப் போக்காம
வெலையில்லாப் பணியாச்சு!
கும்பபிசேகம் முடிஞ்சதும்.
புரவியெடுப்பு வேலஒண்ணப்
புதுசாகக் கொடுத்தாரு!
அதுமுடிஞ்சு வாரதுக்குள்ள
நகரச் சிவன்கோவில்
மேல்பார்க்கும்நற்பணியை
நம்சிவனார் தந்துவிட்டார்!
இடையிடையே பஞ்சாயத்தும்
முடிஞ்சவரை மற்றவர்க்கு
முகங்கோணா உதவிகளும்!
இனியென்ன வாழ்க்கையிலே?
இப்படியே இருந்துவிட்டு சிவன்
பொற்பாதம் தனைக்காண
முற்றோதல் செய்திடுவோம்!

ஒவொரு தீபாவளியும்
குழந்தைகளுடன் கொண்டாடிய
நினைவின் பேரலைகள்!
முகிழ்க்கும் போதெல்லாம்
முன்நின்று மகிழ்விக்கும்!!

Tuesday, October 11, 2011

வயது? சாதனை! 2

வகுப்புத் தோழர்களும்
தோழியரும் மும்முரமாகத்
தேர்வு எழுதுகிறார்கள்
தேர்ச்சிபெற்றால்
வாங்கும் பட்டம்
சித்தாந்த நன்மணி!
சித்தாந்த ரத்தினம்!

 மாணவர்கள் வயது
எழுபது
எண்பதுக்குமேல்!

Tuesday, September 27, 2011

வயது? சாதனை! 1

பறக்கும் கார்!
விண்ணைத்தொட்டுவர
தயாராகும் விண்கலங்கள்!
பர்ட் ரடன்
வயது எழுபது!

Thursday, September 22, 2011

தாலாட்டு.

சூதறியாச் சுடர்மணியே!
சூரியன்போல் சுந்தரமே!
வாதறியா வளர்மணியே!
வண்டாடும் கண்ணழகே!
போதறியாப் பொன்மணியே!
புலர்காலை போல்தமிழே!
நாதமணிக் குரலழகே!
நலம்சேர வந்துதித்தாய்!!

வந்துதித்த நல்லவேளை
வாசமலர் மருக்கொழுந்தே
நந்தா மணிவிளக்காய்
நலம்சேர ஒளிகூட்டி
சிந்தா மணிபோலச்
சிரிப்பாலே எமைமயக்கும்
கந்தன் காற்சலங்கை
காதில் ஒலிக்குதையா!

ஒலிகேட்ட வேளையிலே
உள்ளம் குளிருதையா!
சலியாத மனதினிலே
சந்தம் இசைக்குதையா!
கலிதீர்க்க வந்துதித்த
கண்மணியே கண்ணுறங்காய்!
களிப்பாக்கே கற்கண்டே!
கண்ணுறங்கி முன்னெழுவாய்!

Sunday, September 18, 2011

மானகிரி முருகன்!

ஆனைமுகன் தம்பியே மானகிரி சிறக்கவே
               மகிழ்வுடன் வந்தமர்ந்தாய்!
ஆனதொழில் அனைத்துமே ஆல்போல் தழைத்திட
              அருள்செய்த ஆறுமுகமே!
மன்புகழ் வாழ்வமைய மகிழ்மனை வேண்டியே
             மக்களும் நாடிவருவார்!
ஒன்பது கோள்களும் ஒன்றாகத் துணையுடன்
             உல்லாசக் காட்சிதருவார்!
நன்றாக மயில்மீது நங்கைதெய்வானையும்
           வள்ளியுடன் கோவில்கொண்டாய்!
மன்றாடும் உன்னப்பன் மகிழ்வோடு வந்துனது
           பக்கத்தில் அமரவைத்தாய்!
ஊரோடும் உறவோடும் உன்தேரை வடம்பிடிக்க
           ஊராரை ஒன்றுசேர்த்தாய்!
பேரோடு புள்ளிகள் பெருகியே வளர்ந்திட
          பிரியமுடன் அருள்புரிவாய்!    
மானகிரி நகரத்தார் மகிழ்வோடு பணிசெய்ய
          மாபெரும் சக்திதந்தாய்!
வானுயர் புகழோடு வளர்கல்வி செல்வங்கள்
          வாரியே வழங்கிடவா!

Thursday, September 15, 2011

ஐயா பத்திரம்!

ஐயாவின் தலையினிலே
ஆயிரமாய் வெள்ளிமுடி
கையாலே எடுத்ததனில்
கடகாமும் பண்ணிடலாம்
பையவே கொஞ்சம்
பாத்திரமும் பண்ணிடலாம்!
பையா பேராண்டி
பத்திரமாப் பாத்துக்க![ஐயாவை!!]


Friday, September 2, 2011

ஆடியில தள்ள்ளுபடி

ஆடியில தள்ளுபடி
ஆடையெல்லாம் பறக்குதுன்னு
ஓடிவந்து வாங்கச்சொல்லி
ஒலிபெருக்கி வச்சாங்க
தேடிப்போயித் தெனாவட்டா
தெளிஞ்சு எடுக்கமுடியல!
தள்ளிமுள்ளி உள்ளபோயி
தரம்பாக்க முடியல
அள்ளிக்கிட்டுப் போறசனம்
அடிபுடியா இருக்குது!
உள்ளபிரிச்சுப் பாத்தாக்க...

கோடிச்சேலைக் குள்ளஒரு
கோடுபோல அழுக்கிருக்கு!
மடிப்புக்குள்ள பொட்டுப்போல
குட்டிக்குட்டி ஓட்டை இருக்கு!!

தள்ளுபடி தள்ளுபடின்னு
தள்ளாத வயசுலநாம
தள்ளாடி வாங்கப்போனா..
தள்ளியே விட்டுட்டாங்க!

தள்ளுபடியே வேணாமுங்க
தள்ள்ளியே இருப்போமுங்க!
வழக்கம்போல புதுச்சேலய
தறிக்கிப்போயி வாங்கலாங்க.

என்னநாஞ் சொல்லுறது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!

நான் பிறந்து இத்தனை ஆண்டுகளில்
ஒருமுறைகூட தள்ளுபடியில்
எந்தசாமானும் வாங்கியதில்லை
இப்போதுதான் முதல்முறையாக
சேலைவாங்கிவந்த அனுபவம் இது!

Tuesday, August 23, 2011

தாமரையில நூலெடுத்து

தாமரையில நூலெடுத்து
தனிப்பசுவின் நெய்யுருக்கி
வாழிலையில் மாவிளக்கு
வைத்தாரோ என்கண்ணே!

மாவிளக்குவைத்து அந்த
மகராசி கொப்பாத்தா
மலரடியக் கும்பிட்டால்
மகிமையெல்லாந் தந்திருவா!

தந்திருவா என்கண்ணே
தங்கமும் வயிரமுமாத்
தரித்தவளின் தாள்பணிஞ்சா
சிரிச்சமுகம் காட்டிருவா!
திருவெல்லாம் வந்துசேரும்!!

மாமன்வந்து பாத்திருவார்
மனம்நெறஞ்சு வாழ்த்திடுவார்!
மனம்போல என்கண்ணே
தனம்பெருக்கித் தந்திருவார்!

பாட்டிவந்து பாத்திருவா
என்கண்ணே உனக்குநகை
பூட்டியழகு பாத்திடுவா
புன்னகையில் மகிழ்ந்திடுவா!

தாத்தன்வந்தால் என்கண்ணே
தனிப்பெருமை சேர்ந்துவரும்!
பூத்தமலர் போலஉன்னைப்
பொத்தி வளத்திடுவார்

மாமிவந்து பாத்திருவா
என்கண்ணே உன்னை
மடியில்வைத்துக் கொஞ்சிடுவா!

வைகையில் பெருகிவந்த
வாழைத்தார் தன்னோடு
மதுரை மல்லிகையும்
மணக்கும் பலகாரம்
களனியில வெளஞ்சதெல்லாம்
கண்கொள்ளாச் சீர்வரிசை
களிப்போடு கொண்டுவந்து
கண்மணியே உன்னைக்
காணவந்து காத்திருக்கார்!

கண்ணேஎன் கண்மணியே
கண்ணுறங்கி முன்னெழுவாய்
பொன்னேஎன் பொன்மணியே
புதுயுகமே தாலேலோ!





















Tuesday, August 9, 2011

காரைக்குடி செக்காலைச்சிவன்கோவில் தையல்நாயகி.

அஞ்செழுத் தானவன் அருகமர் தேவியே
             அன்னைதை யல்நாயகி!
நெஞ்சிலே வைத்துனை நித்தமும் துதித்திட
                நிம்மதி தரும்நாயகி!
மஞ்சளும் குங்குமம் மனையிலே நிலைத்திட
               மகிழ்வரம் தருவாயம்மா!
தஞ்சமென வந்தவர் தடையெலாம் விலகிட
              தண்ணருள் புரிவாயம்மா!
நூபுரப் பாதங்கள் நொடியிலே காட்டியே
             நொந்தவர் மகிழவைப்பாய்!
கோபுரம் சமைத்துஉன் கோவில் சிறக்கவே
              குடும்பங்கள் கூட்டிவைத்தாய்!
மனையிலுள் லோரெலாம் மகிழ்ந்துஉன்கோவிலில்
            ‘மா’ பணி செய்யவைத்தாய்
நனைகின்ற அன்பாலே நல்லருள் செய்துநீ
            ‘மா’பலம் பெருகவைப்பாய்!
நன்றாக நன்றாக நாநிலம் போற்றவே
           நல்லுயர்[வு] எய்தவைப்பாய்!
மன்றினில் ஆடுசிவன் மகிழ்மனை யாட்டியே
                அம்மைதை யல்நாயகி!




Tuesday, July 26, 2011

காரைக்குடி செக்காலைச் சிவன்கோவில் வைத்தீசுவரன்.

பையவே வந்துநீ பண்டியற்காகவே
பழவினை ஓட்டியவா!
ஐயனே உன்னடி அகத்தினில் ஏந்தினோம்
அன்பினைக்காட்டிடுவாய்!

தையலின் பாதியே தாங்கிடும் மதியொடு
கங்கையும் சூடிடுவாய்!
மெய்யெலாம் நீறணி மேலான தேவனே
மெய்சிலிர்த் துனைநாடினோம்!

உனைநாடி உனைநாடி ஒடோடி வருபவர்
உள்ளம்மகிழ வைப்பாய்!
நினைவெலாம் நீயாகி நித்தம்து தித்திட
நெஞ்சினை நெகிழவைப்பாய்!

கன்றோடு பசுவுமே காலையில் எழுந்ததும்
காண ‘கோ’ பூஜைசெய்வார்
நன்றாகச் செக்காலை நகரத்தார் கூடியே
திருப்பணி செய்யவைத்தாய்!

நன்றியில் மிதக்கிறோம் நானிலம் புகழவே
நல்லருள் தந்தாயப்பா!
மன்றினில் ஆனந்த நடனமே ஆடிடும்
மன்னனேவைத்தீஸ்வரா!

Sunday, July 17, 2011

.சிவாய நம.

நமச்சிவாய என்று
நாவினிக்கத் தினம்சொல்லி

நகரச் சிவன்கோவில்
நற்பணியை யாம்பார்க்க

அள்ளிக் கொடுக்கின்ற
அன்னை மீனாட்சி
அருகிருந்து அணிசெய்யும்
பெருமருந்தாம் சுந்தரேசர்

பெருமையுடன் எமக்களித்தார்
பேறுபெற்றோம் வாழ்க்கையிலே

சித்திரையின் முதல்நாளில்
நகரத்தார் ஒன்றுகூடி

பஞ்சாங்கம் படித்து
பஞ்சமூர்த்தி உலாவைத்து

கரைக்குஒரு மக்களென்று
கணக்குப்பாக்க ஒருவரும்
நகைப்பொறுப்பு ஒருவரும்
சுற்றுப்புறச் சூழலை
மேப்பாக்க ஒருவரும்

தேர்ந்தெடுத்துக் கோவிலுக்குத்
தொண்டுசெய்யப் பொறுப்பேற்று

தினந்தோறும் கோவில்வந்து
திறம்படவே நடத்திடுவார்!

நகரத்தார் இளஞரெல்லாம்
நற்பணிமன்றம் வைத்து
ஊழியங்கள் செய்வதுமே
உற்சாகமாய்ச் செய்வார்!

சித்திரைத் திருவிழாவும்
வைகாசி விசாகமும்
ஆனித்திரு மஞ்சனமும்
ஆடிப்பூரமுடன்
ஆவணி அவிட்டமும்
புரட்டாசி நவராத்திரி
ஐப்பசியில் அன்னாபிஷேகம்
கார்த்திகையில் தீபமும்
மார்கழியில் திருவாதிரை,
தைப்பூசக் காவடிகள்
தங்கிப் பிறப்பிடுதல்
மாசியில் வரும்மகமும்
மகாசிவ ராத்திரியும்
பங்குனியில் உத்திரமும்

இடயிடையே வேண்டுதல்
செய்து கொண்டவர்க்காக
ஒவ்வொரு மாதத்திலும்
ஒவ்வொரு நாளும்
தினம்வந்து சிவன்தாள்கள்
மனங்கொள்ள வணங்கி

அங்கியினைச் சாற்றி
அழகு நகைபூட்டி
எங்கும்நிறை பரம்பொருளின்
எழிற்கோலம் கண்பூட்டி
சிக்கெனப் பிடித்து
சிந்தையிலே தான்கூட்டி.....

பூமியிலே பிறந்ததற்கு
சாமிக்குப் பணிசெய்ய
நாமெல்லாம் செய்ததவம்!
நல்வினைப் பயனன்றோ!!















Friday, July 15, 2011

பிச்சை

மனிதன் மனிதனுக்குச் செய்யும் உதவி
மனிதாபிமானம்

இறைவன் மனிதனுக்குச் செய்யும் உதவி
கருணை

இயலாதவன் வேண்டிப்பெறுவது
தர்மம்

இறவனுக்குத் திருப்பணிசெய்ய
எப்பேர்ப்பட்ட பணம்படைத்தவரும்
மற்றவரிடம் பணம்வேண்டிப்பெறுவது
கௌரவப்பிச்சை!

அன்புப் பிச்சை
அருட்பிச்சை
ஆகமப் பிச்சை---- [ஆகமம்=வேதம்]
இளங்கிளைப் பிச்சை---[இளங்கிளை=பிள்ளை]
ஈவிரக்கப் பிச்சை
உரிமைப் பிச்சை
ஊக்கப் பி ச்சை
எண்ணப் பிச்சை
ஏடணைப் பிச்சை----[ஏடணை=விருப்பம்]
ஐக்கியப் பிச்சை--ஐக்கியம்=ஒற்றுமை]
ஒழுக்கப் பிச்சை
ஓதனப் பிச்சை---ஓதனம்=அன்னம்]
ஔசித்தியப் பிச்சை----[ஔசித்தியம்=தகுதி]

இறைவன்கொடுத்த
அறிவுப்பிச்சை!

இப்படி பிச்சைக்குப்
பொருள்சொல்லிகொண்டே
வளர்க்கலாம்!

இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லையென்று சொல்வதேயில்லை.

என்பது அனுபவமிக்கவர்கள்சொன்ன
அறிவுரை.
                                              வணக்கம்!

Tuesday, July 5, 2011

வேப்பமர நெழலில.

வேப்பமர நெழலில வெள்ளக்கல்லுல குந்திக்கிட்டு
கேப்பக்கூளு மோருஊத்தி உப்புப்போட்டுக் கரைச்சுக்கிட்டு
ஏப்பம்வார வரைக்கும்அத ஊத்திஊத்திக் குடிச்சாக்க
சாப்பாடே வேணாங்க சந்தோசம் வருமுங்க!
உப்பொ[உ]ரப்பா ஊறுகாயும் ஒரசிவச்ச மீங்கொளம்பும்
பருப்ப[அ]றச்சுக் கொதிக்கவச்சும் பக்குவமாச்சாப்பிடலாம்!
அப்பிடியே கூடக்கொஞ்சம் அச்சுவெல்லம் நெய்யிபோட்டு
அப்புறமுஞ் சாப்பிடலாம் அலுக்காத உணவுங்க!

கேப்பக்கூளு சாப்பிடுங்க கேடில்லாத உணவுங்க!
வேப்பமரக்காத்துல விழுந்துபடுத்து தூங்கிறுங்க!
எந்திரிச்சு வந்தாக்க ஏராளமா வேலபாக்க
எந்திரம்போல சுறுசுறுப்பு எப்பவுமே இருக்குமுங்க!

கேப்பக்கூளு சாப்பிடுங்க கேட்டுவாங்கிச் சாப்பிடுங்க!

Sunday, July 3, 2011

தாலாட்டு.

பாசி படந்தமலை என்கண்ணே
பங்குனித்தேரோடும்மலை
ஊசி படந்தமலை என்கண்ணே
உத்திராச்சம் காய்க்கும்மலை
ஏறார் மலைதனிலே என்கண்ணே
ரெண்டெருது நின்னு தத்தளிக்க
பாராமல் கைகொடுப்பார் என்கண்ணே
பழனிமலை ஆண்டவராம்!
கூசாமல் கைகொடுப்பார் என்கண்ணே
குழந்தைவடி வேலவராம்!

Friday, June 24, 2011

அன்பே சிவம்

வரவுசெலவு தெரியாத
வாழ்வின் வசந்தங்கள்

வருங்காலம் அறியாது
வயிற்றுப் பசிக்குமட்டும்

வயிறுதட்டிக் கையேந்தி......
வகைதெரியா அலங்கோலம்

வயிறு நிறைந்துவிட்டால்...
வந்துதிக்கும் குதூகலம்!

வாங்காத சீட்டுக்கு
வழியில் இறக்கிவிடும்வரை

உல்லாசமான ஊர்ப்பயணம்
புகைவண்டியில் தொடரும்பயணம்

இரவுப்பசிக்கு ஈன்றபிஞ்சுகள்
இறக்கைமுளைக்காத இளம் குஞ்சுகள்

இவர்களைப்போல இன்னும்
எத்தனை பிஞ்சுகளோ?!

அத்தனை குஞ்சுகளும்
ஆனந்தக் கூடடைய

இறவனை வணங்கிநாம்
இணைந்து வேண்டுவோம்

அன்பே சிவம்
சிவானந்த மயம்

சிவாயநம. சிவாயநம.
நமச்சிவாய.


Friday, June 10, 2011

கோவிலிலே சிலை நிறுவல்.

மறுநாள் காலையிலே
மக்களெல்லாம் ஒன்றுகூடி
புரவிப் பொட்டல்வந்து

குடைபிடித்துக் கொடிபிடித்து
கொம்பூதிக் குலவையிட்டு




கொட்டு முழங்க
அதிர்வேட்டு வான்பிளக்க

மறுபடியும் தோள்களிலே
மகிழ்வோடு ஏற்றிவந்து















கோவிலுக்கு உள்ளே
கோலாகலமாய் நிறுத்தி















ஆளுயர மாலைகளும்
அற்புதமாய்ப் பட்டுகளும்

அன்புடனே அணிவித்து
ஆவலுடன் பார்த்திருந்தார்

ஊர்விருந்து வைத்து
உளமகிழ வீடுவந்தார்

வெட்டிய மின்னலுடன்
கொட்டிய மழையோ!
கோடிக்குக் கோடிபெறும்!!

ஒருவாரம் முடிந்தபின்னே
திருவிழாவும் முடிந்ததென

மாலை கழட்டுதலும்
மக்களுக்குப் பாராட்டும்!




  
இப்பிறவி எடுத்தபயன்
இனியவிழா கண்டோம்நாம்

எப்பிறவி எடுத்தாலும்
அப்போதும் துணையிருந்து

ஆதீனமிளகி ஐயன்
சோதியாய் வழிகாட்டிடுவீர்









Thursday, June 2, 2011

புரவியெடுப்பு . முதல்நாள்.

அற்புதமாய் எழுந்த
அழகுச் சிலைசெய்து

அச்சுப் பிசகாமல்
ஆர்வமுடன் வண்ணம் தீட்டிய

வேளார்க்கு மரியாதை
வளமாகச் செய்து

மக்களெல்லாம் வந்திருந்து
மகிழ்வோடு பார்த்திருக்க

வாட்டமாக மூங்கிலிலே
வைக்கோல் பிரிகட்டி

தோள்களிலே தூக்கிவைத்து
துவளாமல் தூக்கிவர


வாள்பிடித்துக் கருப்பசாமி
வழிகாட்டி அழைத்துவர

கொட்டும் அதிர்வேட்டும்
கொம்பூதிக் குடைபிடிக்க

மயிலாட்டம் பெண்இருவர்
ஒயிலாட்டம் ஆடிவர


சாமியாடி வாக்குச்சொல்ல
பூமியெல்லாம் மழைதூற

புரவிப் பொட்டலுக்குள்
பூப்போலக் கொண்டுவந்து


கூடிக் குலவையிட்டு
கொட்டகைக்குள் நிறுத்திவைத்தார்!

கோவிலிலே முன்பே
குட்டிவெட்டிப் பூசையிட்டதனை

அன்னம் பெருக்கி
அனைவருக்கும் உண்டியிட்டு

நாளை வருவதற்கு
நலமுடனே வீடுவந்தார்!

Wednesday, June 1, 2011

புரவி எடுப்புக்கு நாள்வைத்தல்.

முன்பே பேசிவைத்து
முடிவு செய்தபடி

நகரத்தார் கிராமத்தார்
கோவிலிலே ஒன்றுகூடி

நாள்வைக்க நாள்பார்த்து
முப்பலி பூசைபோட்டு

பிள்ளையார் பெருமாளுக்கு
பிரியமுடன் தளிகையிட்டு

அம்பாள், ஆஞ்சநேயர்,
முனியையா, கட்டுக்கருப்பர்

அத்தனைக்கும் மாலைசாத்தி
அருச்சனைகள் செய்துவைத்து

மட்டைகட்டிக் கொண்டுவந்து---[பனைஓலையில் செய்வது]
மக்களுக்கு அன்னமிட்டு

கட்டுக் கோப்பாக
காளாஞ்சி கொடுத்து

இன்றுமுதல் ஏழுநாளும்
ஒவ்வொரு நாளுக்கும்

ஆறு ஊர் நகரத்தார்
ஊரோடு உயர்கவென

வேளார் விருப்பமுடன்
அருச்சனைகள் செய்வித்து

நகரத்தார் படித்திறத்தை
நன்றாகச் செய்துவைத்து

ஒவ்வொரு நாளுக்கும்
உடன்வந்து பிரசாதம்
உவப்புடனே தந்திடுவார்!!

ஊர்மக்கள் எல்லோரும்
ஊழியங்கள் செய்திடுவார்

எட்டாவது நாளில்
எழில்மிகு புரவியெடுப்பு!

[பனை ஓலையில் செய்து கொண்டுவரும்
இந்த மட்டையை செய்து கொண்டுவராவிட்டால்
பெரிய பிரளயம் மதிரி சண்டை வந்துவிடும்.
ஆகையால் உணவிடுவதற்குமுன்
மட்டை வந்துவிட்டதா?! என்று
கவனம்செய்துகொள்ளவேண்டு]ம்



Monday, May 2, 2011

என்ன நாஞ்சொல்லுறது?! 1

மாத்து உலக்கை மாத்திப்போட்டு
மாவிடிக்கிற காலமெல்லாம்
மலையேறிப் போச்சுதுங்க
மறந்தேதான் போச்சுதுங்க!

மாவிடிக்கிற மிசினுவந்து
மளமளன்னு இடிச்சுருது!!

நெல்லுக்குத்தி அரிசிஎடுத்து
அள்ளிப்போட்டு வெறகடுப்புல
சுள்ளிபோட்டுத் தீஎரிச்சு
வெள்ளை அன்னம்
வெஞ்சனமெல்லாம்
வேகவச்ச காலம்போச்சு

காசுபணத்தப் பாக்காம
காத்து [ Gas ]  அடுப்பு ஒண்ணுவந்து
காலத்தையே மாத்திப்புடுச்சு

குக்கருஒண்ணு குறுக்கவந்து
மக்களமாத்திப் போட்டுருச்சு

வழக்கம்போல பாத்திரத்த
வெளக்கறதுக்கு கரியில்லாம
சோப்புஆயிலு வந்திருச்சு
 பாக்கநல்லாத்தானிருக்கு

அம்மிஅறைக்கிற காலம்போயி
அளவுக்கேத்த சின்னம்பெரிசா
அரைகிறதுக்கு மிக்சி ஒண்ணு

கும்மிஅடிக்கிற துணிக்கெல்லாம்
கும்மிப்புழியற மிசுனுவந்து
கம்மியாச்சு வேலையெல்லாம்!
பொம்மையாட்டம் ஆக்கிருச்சு

வாரத்துக்கு ஒருதடவ
வாரிப்போட்டுத் துவைக்கிறாங்க
நாறப்போட்டுத் தொலைக்கிறாங்க!

துணிய
காயப்போடக்கூட ஒரு
மாயமிசுனு வந்திருமோ?!

மாடுகன்னு வளத்தவங்க
மாவு தென்னை வளத்தவங்க
நஞ்சை புஞ்சை வளத்தவங்க
பஞ்சமின்றி வாழ்ந்தவங்க
பாடுபட்ட எடத்தயெல்லாம்
பங்குபோட்டு விக்கிறாங்க

காடுகரை எல்லாமே
மேடுபள்ளஞ் சமப்படுத்தி
மாடிமேல மாடிகட்டி
ஓடிவார தண்ணியெல்லாம்
ஒருஎடத்தில மறிச்சுப்போட்டு
போரு ஒண்ணப் போட்டுட்டாங்க!

கெணத்துல
தூருவாரித் தூருவாரி
தொவண்டுபோச்சு சனமெல்லாம்
பெருவாரித் தண்ணியெல்லாம்
போருக்குள்ள போச்சுதுங்க!

நூறுஅடிக்கி மேலதோண்டி
போருபோட்டுத் தண்ணிய
பூராவும் எடுத்ததால
பூமிஎறங்கிப் போச்சுதுங்க
பூகம்பமே வந்துருச்சுங்க

கம்பியூட்டரு ஐசுப்பொட்டி
கரண்டுச் சமான் எல்லாத்தாலயும்
[ எனக்குச்சொல்லத் தெரியலைய்ங்க ]
ஓசோனுக் குள்ளயெல்லாம்
ஓட்டையாகிப் போச்சாமுல்ல?!


ஒலக்கபுடுச்சு நெல்லுக்குத்தி
சுள்ளிவெறகு எரிச்சகையும்
துணிதொவச்சு, அறச்சகையும்
கம்பியூட்டரு பாக்குதுங்க

முதுகுவலிக்குப் பாத்திங்கன்னா
முதுகுமேல மரத்தால
நாலுசக்கரம் வச்சவண்டி
மேலுங்கீழும் ஓட்டுராங்க!

கையிவலியப் போக்குறதுக்கு
முள்ளுவச்ச உருண்டைஒண்ண
கையிலபுடிச்சு வெச்சுக்கிட்டு
மெள்ளமெள்ள உருட்டுராங்க

காத்தடுப்ப விட்டுப்பிட்டு
கரியடுப்புக்கு வரலாமே?

கம்பியூட்டரு டிவியெல்லாம் [பாக்குற]
காலம் முடிஞ்சதும் நிறுத்தலாமே?

காலத்த நாமளாவே
கணக்குப்பண்ணி மாத்தலாமே?

ஒலகத்துக்கு நம்மளால
முடிஞ்ச ஒதவி செய்யலாமே?

மண்ணுலபுரண்டு அணிப்புள்ள
கடல ரொப்ப நெனச்சதுல்ல? [ராமருக்காக]
நம்மளால முடியுமுங்க!
நல்லாநெனச்சுப் பாருங்கநீங்க!!

என்ன நாஞ்சொல்லுறது?
எல்லாருக்கும் நல்லாருக்கா?

Saturday, April 23, 2011

எங்கள் ஊர் காரைக்குடி.

காரைக்குடி
மிகநல்ல ஊர்.
வாழ்வின் தேவைகள்
அனைத்தும்
ஒரே இடத்தில்!
கல்லுக்கட்டியைச் சுற்றி!
கொப்புடைய அம்மனை
ஒரு பெரிய
பிரகாரம்வந்தால் போதும்!

ரொம்பதூரத்திலிருந்து
வருபவர்களுக்கு
உபயோகமான
செய்திகள்சில.

உங்கள் வயிற்றுக்கு
தொந்தரவில்லாத
பலகாரம் சாப்பாட்டுக்கு
ஆலங்குடியார் வீதியில்
ஒருஆச்சிவீடு,
காலை பலகாரம் மட்டுமென்றால்
அரு.அ.வீதியில்
காந்தி நெய்ஸ்டோர் அருகில்
மல்லிகை உணவகம்.

உங்கள்வீட்டு விருந்துகளுக்கு
முன்கூட்டியே சொல்லி
செட்டிநாட்டு உணவுவகைகள்
ஏற்பாடு செய்துகொள்ள
செந்தில் மெஸ்
கீழ்வரும் எண்ணில்
கூப்பிட்டு விவரம் அறியலாம்
9444816708.

தங்கும் இடத்துக்கு
செக்காலை ரோட்டில்
உதயம் லாட்ஜ்.

பெரியார்சிலை அருகில்
வசதியான தங்கும் இடத்துக்கு
கோல்டன் சிங்கார்.

அதன் அருகில்
அன்னலெட்சுமி உணவகம்
விலையைப்பற்றி யோசிக்கக்கூடாது.
தரமானதும்,அலையாமல்
உங்களுக்கு
மிக அருகிலும்உள்ளது!

சுதந்திரப் போராட்ட வீரர்
கம்பன் அடிப்பொடி
சா.கணேசன் அவர்கள் பிறந்தஊர்
காரைக்குடி!

தமிழ்த்தாய்க்கு
கொயில்கட்டியஊர் 
காரைக்குடி!

கண்ணதாசன் பிறந்தது
சிறுகூடல்பட்டி என்றாலும்
பிள்ளை வளரவந்த ஊர்
காரைக்குடி!

வள்ளல்அழகப்பரின் பிறந்தஊர்
கோட்டையூர் என்றாலும்
அவர்வாழ்வின் மிகஉயர்ந்த
நிலையை அடையக்காரணமான
அழகப்பா கல்விநிறுவனங்கள்
அமைத்த ஊர்
காரைக்குடி!

திரப்படத்துறையில் மிகப்புகழ்பெற்ற
ஏ.வி.எம் மெய்யப்பசெட்டியார்

இயெக்குனர்கள்
எஸ்பி.முத்துராமன்
பஞ்சு அருணாசலம்
இராம.நாராயணன்
காரைக்குடி நாராயணன்
பிறந்த ஊர்
காரைக்குடி!

குடிநீர்க்காவலர் பழ.கருப்பையா
மெட்டிஒலி திருமுருகன்
போன்றவர்களின் சொந்தஊர்
காரைக்குடி!

ஆயிரம்ஜன்னல் வீடுமுதல்
அரண்மனைபோன்ற வீடுகள்
அமந்த ஊர்
காரைக்குடி!

செட்டிநாட்டுக்குப் பெருமைசேர்க்கும்
நூல் சேலைகளுக்கு
புகழ்பெற்ற ஆர்.எம்.ஆர்
சேலைக்கடை மெ.மெ. வீதியில்
அமைந்த ஊர்
காரைக்குடி!

நகரத்தார் குருபீடம்
கோவிலூரில் அமைந்த ஊர்
காரைக்குடி!

குன்றக்குடி பிள்ளையார்பட்டிக்கு
மிக அருகில்[சுமார் பத்து கி.மி]உள்ள ஊர்
காரைக்குடி!

ஆலமர் கடவுள்
மால[அ]யன் கோவில் முன்னே
அமர்ந்து அருள்பாலிக்கும் ஊர்
காரைக்குடி!

நூற்றிநாற்பது ஆண்டுகள்
பழமைவாய்ந்த நகரச்சிவன்கோவில்
அமைந்த ஊர்
காரைக்குடி!

நகரச் சிவன்கோவில் அருகில்
நூற்றி எட்டுப்பிள்ளையார்
அமர்ந்து அருள்பாலிக்கும் ஊர்
காரைக்குடி!

எடுக்க எடுக்கக் குறையாத
குடிநீர்ச் செம்பை ஊற்றுஉள்ள ஊர்
காரைக்குடி!

முத்துமாரி அம்மனுக்கு
தாவிவரும் வேல்போட்டு
காவடியும் பால்குடமும்
முளைப்பாரி மதுக்குடமும்
தீச்சட்டி பூமிதியும்
காணக்கிடைக்காத காட்சியில்
பங்குனியில் பொங்கிவழியும் ஊர்
காரைக்குடி!

ஏ.வி.எம்மிற்குப்பிறகு
இப்போது புதிதாக
திரப்படத் துறையினர்
முற்றுகையிடும் ஊர்
காரைக்குடி!

Tuesday, April 5, 2011

என்ன வேண்டும்? எழுந்துவா...

என்னவேண்டும்?
எழுந்துவா..

மற்றவர் மனம்
பாதிக் காத

மாற்றம் உள்ளதில்
மனதைச் செலுத்து

ஏற்றம் உள்ளதாய்
எடுத்து யோசி

கொஞ்சம் கொஞ்சமாய்
முயன்று யோசி

நெஞ்சில் உறுதியாய்
நின்று யாசி

நினைவின் வழியில்
நீயும் உழைத்தால்

அனத்தும் நன்றாய்
நினைத்தது நடக்கும்!

வானும் மண்ணும்
வளமாய் வசப்படும்!!

என்ன வேண்டும்?
எழுந்துவா
எல்லாம் கிடைக்கும்!

Sunday, April 3, 2011

ஐயனார் கோவில் புரவி.

பார்த்துப் பிடிமண் எடுத்து
பக்குவமாய்க் குழைத்துவைத்து

சேர்ந்து குடும்பமெல்லாம்
செய்யஒரு இடம் அமைத்து

சேமக் குதிரையுடன்
செய்யும் பெரும்பூதம்

வார்ப்புருவம் இல்லாமல்
வடிவாகச் செய்ய

கடும் விரதம்
மனத்தூய்மை!

கற்பனையும் கற்றவையும்
கைவினையில் உருவாகி

சொற்பதங் கடந்திங்கே
அற்புதமாய் எழுந்ததுவோ!!



Tuesday, March 22, 2011

பிடிமண் எடுத்தல்.

கருத்த மீசை
கையில் வீச்சரிவாள்

சிரித்த முகத்தில்
சீறும் விழிகள்!

குட்டிவெட்டிப் பூசைபோட்டு
குலசாமி கும்பிட்டு

வீறுகொண்ட வேங்கைபோல்
வீச்சரிவள் மின்னலிட

கால்சலங்கை கலகலக்க
வேல்போட்டு ஆடிவர

குடையும் கொடியும் ராச
நடைபோட்டு அழைத்துவர















குலவையிடும் கிராமத்தார்
அலையலையாய் அடுத்துவர

கொட்டும் அதிர்வேட்டும்
 கூடி முழக்கிவர

புரவி எடுப்புக்கு
பிடிமண்ணு எடுத்துவர

சாப்பாடு கோயிலிலே
சகலருக்கும் அன்னமிட்டு

காளாஞ்சி கொடுத்து
களிப்பில் மிதக்கவிட்டு

பாக்கவந்த பேருக்கெல்லாம்
பாக்கும் வெத்திலையும்

புலவர் பாட்டிசைக்க
புவியெல்லாம் ஆனந்தம்

வேளார்க்கு மரியாதை
வளமாகச் செய்து
வீட்டில் அழைத்துவிடல்.

         புரவிஎடுப்புக்குப் புரவிசெய்ய மண் எடுப்பது
ஊர்கூடிப் பெரிய விழாவாக நடத்தப்பெறுகிறது.
இது எங்கள் குலதெய்வம் ஆதீனமிளகி ஐயனார்
கோவிலில் நான்கண்ட முதல் பிடிமண்எடுக்கும்
விழா.பிடிமண் எடுக்கும் இடத்திற்கு பெண்கள்
செல்லக்கூடாது என்றுசொன்னதால் நான்போய்
பார்க்கவில்லை.இரவு எட்டுமணிமுதல் பதினொரு
மணிவரை இந்தவிழா நடந்தது.

Thursday, March 17, 2011

மனசு மறந்துருச்சா?

வணக்கம்
எங்கபோயிருந்தாப்பில இவ்வளவுநாளா?
வெளிநாடா?
அதுஒண்ணும் ரொம்ப
தூரமில்லையே கணினிக்கு?
மறந்து போச்சா?இல்ல
அவ்வளவுதான்னு இருந்துட்டாப்லயா?
 மனசு மறந்துருச்சா?
கணத்துல கவனம்வந்துச்சா?
கொஞ்சங்கொஞ்சமா அப்பாசெய்யிற
பஞ்சாயத்துல மறந்துபோச்சா?
கற்றதெல்லாம் மறக்காம
முற்றோதல்ல மனம் லயிச்சிருச்சா?
தூசிபடிஞ்சு போச்சே?
காசுமிச்சம் பார்த்தா?[கரண்டுக்கு]
பணத்துல ஷேருவாங்கி
பாதியா வெலையிறங்கிப்போச்சா?
வேலைக்கு ஆள்வராம
வேலப்பளு ரொம்பவா?
என்னதான் ஆனாலும்
எழுந்து வந்திருவிங்களே?!
என்னாச்சு சொல்லுங்க
என்னவேணா செஞ்சிருவோம்.
தானா மனசுக்குள்ள
தானெழுந்த கேள்விகளுக்கு
நானெழுந்துவந்துவிட்டேன்
நலமுடனே எழுதுதற்கு!!!

Sunday, February 20, 2011

சொல்லு மயிலே சொல்லு!

வெற்றிவடி வேலனிடம்சொல்லுமயிலே--நாங்க
வேகமாக நடந்துவாரோம் சொல்லுமயிலே
சக்திஉமை பாலனிடம் சொல்லுமயிலே---நாங்க
சந்தோஷமா வாரோமின்னு சொல்லுமயிலே
வேழமுகன் தம்பியிடம் சொல்லுமயிலே--எங்க
வேகநடை வெற்றிநடை சொல்லுமயிலே
வாழவைக்கும் தெய்வத்திடம் சொல்லுமயிலே-நாங்க
வழிவழியாய் வந்தகதை சொல்லுமயிலே
ஆறுமுக சாமியிடம் சொல்லுமயிலே-------நாங்க
அன்புகொண்டு வாரோமின்னு சொல்லுமயிலே
சீரும்சிறப்பும் காணவேண்டிச் சொல்லுமயிலே---நாங்க
செட்டிமக்கள் வாரோமின்னு சொல்லுமயிலே
ஊரும்வீடும் காவடிப்பூசை சொல்லுமயிலே----உந்தன்
சேவடியில் சேக்கவாரோம் சொல்லுமயிலே
பேரும்புகழும் பெறவேண்டி சொல்லுமயிலே---எங்க
பிள்ளையெல்லாம் அழைத்துவாரோம் சொல்லுமயிலே
குமரப்பையா கோவில்வீட்டில் திருநீறுபூசி-----நாங்க
கூடிஒன்றாய் நடைதொடர்ந்தோம் சொல்லுமயிலே
கொப்பாத்தா சன்னதியில தேங்காஒடைச்சு---எங்க
தப்புத்தவற சிதரடிச்சோம் சொல்லுமயிலே
கோவிலூரு சாலையில கோலமயிலே------நாங்க
குமரன்கவசம் பாடிவாரோம் சொல்லுமயிலே
குன்னக்குடி தங்கிவாரோம் சொல்லுமயிலே---எங்க
குலம்தழைக்க வேண்டிவந்தோம் சொல்லுமயிலே
பிள்ளையார்பட்டி வணங்கிவந்தோம் சொல்லுமயிலே-எங்கள்
பிஞ்சுமனம் தஞ்சமென்று சொல்லுமயிலே
கண்டவராயன் பட்டிவந்தோம் சொல்லுமயிலே------நாங்க
கடினபாதை வென்றுவந்தோம் சொல்லுமயிலே
மருதுபட்டித் தோப்புவந்தோம் சொல்லுமயிலே----அங்கு
மயில்அழகன் பூஜைகண்டோம் சொல்லுமயிலே
சிங்கம்புணரி ஊருவந்தோம் சொல்லுமயிலே ---மாலன்
சேவுகனை வணங்கிவந்தோம் சொல்லுமயிலே
சமுத்திரா பட்டிவந்தோம் சொல்லுமயிலே-----மக்க
சமுத்திரம்போல் வாரகாட்சி சொல்லுமயிலே
நத்தம்நோக்கி வந்துவிட்டோம் சொல்லுமயிலே--அரஹர
சத்தம்விண்ணைப் பிளப்பதையும் சொல்லுமயிலே
உப்பாறு பாலம்வந்தோம் சொல்லுமயிலே-----எங்கும்
ஓம்முருகா ஒலியைக்கேட்டோம் சொல்லுமயிலே
இடைச்சிமடம் வந்துவிட்டோம் சொல்லுமயிலே----எங்க
இன்னலெல்லாம் மறைஞ்சுபோச்சு சொல்லுமயிலே
திண்டுக்கல்லு வந்துவிட்டோம் சொல்லுமயிலே---இடையில்
குண்டுக்கல்லும் மறைஞ்சுபோச்சு சொல்லுமயிலே
செம்மடைப்பட்டி வந்துவிட்டோம்சொல்லுமயிலே---தெய்வம்
செந்தில்வேலன் ஊஞ்சல்கண்டோம் சொல்லுமயிலே
வெள்ளிஊஞ்சல் ஆட்டம்கண்டோம் சொல்லுமயிலே--எங்க
வெம்மையெல்லாம் மறைஞ்சுபோச்சு சொல்லுமயிலே
குழந்தைவேலன் சன்னதிவந்தோம் சொல்லுமயிலே---எங்க
குறைகளெல்லாம் நீங்கவேணுஞ் சொல்லுமயிலே
விருப்பாச்சி மேடுபள்ளம் சொல்லுமயிலே------முருகன்
விளக்கஞ்சொன்ன வாழ்க்கைவழி சொல்லுமயிலே
அடையாளவேல் வந்துவிட்டோம் சொல்லுமயிலே-----நாங்க
அளவுகடந்த மகிழ்ச்சி கொண்டோம் சொல்லுமயிலே
தடைகள்யாவும் நீங்கிவந்தோம் சொல்லுமயிலே------அந்த
தண்டபாணி காணவந்தோம் சொல்லுமயிலே
கலிங்கப்பையா ஊருணிகண்டோம் சொல்லுமயிலே----அங்கே
கருணையுள்ளம் பெருக்கக்கண்டோம் சொல்லுமயிலே
இடும்பன்குளம் வந்தடைந்தோம் சொல்லுமயிலே---பழனி
இறவன்மலை வந்தடைந்தோம் சொல்லுமயிலே
வலம்வந்தோம் வலம்வந்தோம் சொல்லுமயிலே----எமக்கு
நலம்தந்து வரம்தரணும் சொல்லுமயிலே
தங்கரதம் காணவேண்டும் சொல்லுமயிலே-----மகிழ்ச்சி
பொங்கவேணும் வாழ்க்கையிலே சொல்லுமயிலே!



Tuesday, February 8, 2011

கொப்புடையம்மன் நூற்றிஎட்டுப் போற்றி.

கொப்பை உடைய அம்மையே -              போற்றி
ஒப்பில் லாத உயர்வே-                               போற்றி
செப்பரிய அழகு உருவே -                          போற்றி
தப்பில்லா வாழ்வு தருவாய்-                    போற்றி
அப்பழுக் கில்லா அருளே -                        போற்றி
எப்பொழுதும் என்னகம் உறைவாய் -   போற்றி
வெப்பொழி வேத வல்லியே -                  போற்றி
அப்பனும் அம்மையும் ஆனாய் -             போற்றி
நகரின் நடுநிலை நாயகி -                          போற்றி
நிகரில் லாதவள் நீயே -                              போற்றி
நிகழும் நல்லதில் நிற்பாய் -                     போற்றி
நெகிழும் உள்ளம் நிறைப்பாய் -              போற்றி
வளரும் பயிரின் வளனே -                        போற்றி
உலவும் காற்றின் உயிரே -                        போற்றி
உயிரே உயிரின் உணர்வே -                     போற்றி
உயரிய சிந்தனை உவப்பாய் -                  போற்றி
வயிரம் இழைத்த வடிவே -                       போற்றி
பயிர்கள் காக்கும் பகவதி -                        போற்றி
கண்ணில் மின்னும் கனிவே -                 போற்றி
பெண்ணில் நல்ல பெருந்தகை -            போற்றி
எண்குணன் துணைவி எந்தாய் -            போற்றி
திண்ணம் தருவாய் திரிபுரை -               போற்றி -----[வலிமை]
எண்ணம் நல்லன ஏற்பாய் -                     போற்றி
தன்னம் பிக்கை தருவாய் -                       போற்றி
பொன்னே மணியே புகழே -                     போற்றி
என்னை இயக்கும் எழிலே -                      போற்றி
அன்னை என்பார்[க்கு] அன்ன -               போற்றி------[அவ்வண்ணமே]
முன்னைத் தவத்தின் முகிழ்வே -          போற்றி
தன்னை உணர்த்தும் தண்ணருள் -        போற்றி
உன்னை அறிய உவந்தாய் -                      போற்றி
புன்னகை மலர்ந்த புவனி -                        போற்றி
பொன்நகை புனைந்த பூரணி -                  போற்றி
தன்னே ரில்லாத் தமிழே -                          போற்றி
தென்னா டுடைய சிவனதுணை -           போற்றி
நிலையாம் நட்பைத் தருவாய் -              போற்றி
கலைகள் அருளும் கலைமகள் -            போற்றி
வைகறை அழகே வாக்கியை -              போற்றி.-             [பார்வதி]
பொய்கை நிறைந்த பூவே -                        போற்றி
முந்தை வினைகள் முடிப்பாய் -             போற்றி
சிந்தை மகிழும் சீதம் -                                 போற்றி -             [குளிர்ச்சி]
செந்தா மரையின் செல்வி -                       போற்றி
நந்தா விளக்கே நாரணி -                            போற்றி
சொந்தம் பெருக்கும்சுரபி -                         போற்றி
பந்தம் அகற்றும் பாரதி -                             போற்றி
சங்கம் முழங்கவரும் சங்கரி -                போற்றி
செங்கை நிறைந்த செறுவே -                  போற்றி -                [வயல்]
சங்கத் தமிழே சரஸ்வதி -                          போற்றி
சிங்கத் தமர்ந்த சிகரம் -                               போற்றி
காரை நகரின் கண்ணே -                            போற்றி
பேரருள் பிறங்கும் பிராட்டி -                    போற்றி
ஊரின் நலமே உயர்வே -                           போற்றி
வாரி வழங்கும் வைஷ்ணவி -                போற்றி
தேரில் அமர்ந்த திருவே -                          போற்றி
பாரில் உயர்ந்த பண்பே -                            போற்றி
போர்க்குணம் ஒழிக்கும் பொன்னே -   போற்றி
பேர்க்கும் அன்பில் பிணைந்தாய் -        போற்றி
ஆர்க்கும் மனதை அடக்குவாய் -           போற்றி
சேர்க்கும் இடத்தில் சேர்ப்பாய் -            போற்றி
பூக்கும் புதினத் தமிழே -                            போற்றி
வாக்கில் வண்மை தருவாய் -                போற்றி
வைகசி விழாவின் வராகி -                     போற்றி
கைராசி அருளும் கற்பகம் -                    போற்றி
அம்பாரி அமர்ந்த அகிலம் -                      போற்றி
மும்மாரி பொழியும் முகிலே -               போற்றி
கற்பூர வல்லி கல்யாணி -                        போற்றி
சிற்பர மான ஸ்ரீதேவி -                                போற்றி
நற்பதம் அருள்வாய் நந்தினி -                போற்றி
சொற்பதங் கடந்தசொரூபி -                    போற்றி
பொற்றா மரையின் புலனே -                  போற்றி -             [காட்சி]
கற்றார் காமுறும் கழலே -                       போற்றி
துணிவே துணிவின் துணையே -          போற்றி
பிணிகள் அகற்றும் பிங்கலை -             போற்றி -             [பார்வதி]
அணியே அணியின் அழகே -                  போற்றி
மணியே மணியின் ஒலியே -                 போற்றி
வணிகர் போற்றும் வரவே -                    போற்றி
பணிகள் சிறக்கப் பரவுவாய் -                 போற்றி
பிறைசூ டியவன் பெருந்துணை -          போற்றி
நரைதிரை காணா நல்லறம் -                 போற்றி
கொட்டிக் கொடுக்கும் கோமதி -            போற்றி
கட்டும் அன்பில் கனிவாய் -                    போற்றி
சுட்டியில் ஒளிரும்சுந்தரி -                      போற்றி
மெட்டி ஒலியில் மிளிர்வாய் -                போற்றி
முத்தமிழ்ச் சுடரே முழுமதி -                  போற்றி
சக்தி உபாசகர் சரணே -                             போற்றி
கானக் குயிலின் கவியே -                        போற்றி
ஞானக் குழலின் நாதம் -                           போற்றி
நெஞ்சம் நிறைந்த நீயம் -                        போற்றி-------[ஒளி]
அஞ்செழுத் தமர்ந்த அஞ்சுகம் -             போற்றி
விஞ்சும் புகழின் விளக்கம் -                   போற்றி
கொஞ்சும் தமிழில் குழைவாய் -           போற்றி
சிலம்பணி பாதம் சீந்தினம் -                  போற்றி--------[ஏந்தினோம்]
நலம்பல நல்கும் நாமகள் -                      போற்றி
வெள்ளி முளைத்த விடியல் -                 போற்றி
அள்ளிக் குவிக்கும் அடிசில் -                  போற்றி
விளையும் பயிரின் வித்தே -                   போற்றி
வளைக்கரம் வாழ்த்த வருவாய் -         போற்றி
ஆதி மூலன் அன்னை -                              போற்றி
சோதி நிறைந்த சுடரே -                             போற்றி
தேசம் போற்றும் தென்றல் -                   போற்றி
பாசுரம் பாடப் பணித்தாய் -                      போற்றி
வாசித் தவர்க்கு வரமே -                           போற்றி
பூசித் தவர்க்குப் பூணே -                            போற்றி
இல்லை யென்னா இயற்கை -               போற்றி
கல்லும் கனியும் கருணை -                   போற்றி
துதிப்போர்க் கருளும் துணையே -      போற்றி
கதிநலம் காட்டுவாய் போற்றி -           போற்றி
வாழும் வாழ்வின் வளனே -                  போற்றி
நாளும் காப்பாய் போற்றி -                     போற்றி




















Sunday, February 6, 2011

காரைக்குடி நகரச்சிவன்கோவில் மீனாட்சி அம்மன்.

           ஒம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
           ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

தேனாட்சி செய்கின்ற தென்தமிழ்ப் பாட்டினால்
                   தேவியுனைப் பாடிவரவே
மானாட்சி செய்கின்ற மைவிழிக் கருணையே
                 மகிழ்வோடு வரம்தருவாய்!
மீனட்சி உன்முகம் மின்னுகிற அழகிலே
               மெய்மறந்து உருகிநின்றோம்!
தேனோடு பாலுமே தினம்சிவனுக்[கு] அபிஷேகம்
                தித்திக்கும் காட்சியம்மா!
மீனாட்சி மீனாட்சி மீனாட்சி என்றுன்னை
              மிகவேண்டி வந்துநின்றால்
நானாச்சு என்றுநீ நன்மைகள் செய்கிறாய்
             நற்பேறு பெறுகிறோமே!
ஆனைமுகன் உன்மகன் அழகான முகம்பார்த்து
             அமைதியே வடிவாகினாய்!
தேனான திருப்புகழ்த் திருமுருகன் தனைக்கண்டு
              அன்பிலே மகிழ்வாகினாய்!
வானோங்கு புகழ்மிக்க வளர்காரை நகரத்தார்
            வடித்திட்ட கோவிலழகே!
தானோங்கு தமிழ்தந்து தரணியில் உயர்த்தினாய்
             தாயேமீ னாட்சிஉமையே!

     ஒம்சக்தி ஒம்சக்தி ஒம்சக்தி ஓம்
     ஒம்சக்தி ஒம்சக்தி ஒம்சக்தி ஓம்

Wednesday, February 2, 2011

வலையெடுத்துப் போனவரே

காலையில வலையெடுத்து
கட்டுமரங் கட்டிகிட்டு
காத்துவழி அலையெதுத்து
கடலுமேல போனவரே..
கடலலைய எதுத்துநீங்க
மீனத்தேடிப் போனியளே
மின்னலாப் போனியளோ?
மானங்கெட்ட மனுசனுவ
மறைஞ்சிருந்து சுட்டானோ?
காணங் காணமின்னு
கருக்கடையாக் கடலோரம்
காத்திருந்து பூத்துப்போன
கண்ணெல்லாங் கலங்கவச்சு
எண்ணமெல்லாஞ் செதறவச்சு
எங்கொலத்தப் பதறவச்ச
மண்ணாப்போற பாவியள
கண்ணால பாத்துக்கிட்டு
கடவுளுந்தேன் இருக்காரோ?
ஆருக்கு நாங்கஎன்ன
அடுக்காத தீங்குசெஞ்சம்?
மீனத்தான புடிச்சுவந்து
மெனக்கெட்டு வித்துவந்தம்
வலையெடுத்துப் போனவுக
வலையவீசு முன்னால
வதவதன்னு சுட்டுப்போட்டான்
அதகளமா ஆக்கிப்பிட்டான்
சின்னப் புள்ளையெல்லாந்
தெகச்சுப்போயி நிக்கிதையா
வாழ்க்கைக்கென்ன பாதுகாப்பு?
கேக்கதுக்கு ஆளில்லையா?
வாக்குக்கேக்க வந்தவுக
சீக்கிரமாச் சொல்லுங்கையா
ஆக்குசன எடுங்கைய்யா





 

Tuesday, January 25, 2011

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ என்கண்ணே
ஆரிரரோ ஆராரோ
மானோடும் வீதியெல்லம்
தம்பி தானோடி வந்தானோ
ஓடுமா மேகம் கண்ணே
ஒளிவிடுமா ராணிமேகம்
கண்ணோ என்கவரிமான்
பெற்ற பெண்ணோ
கண்ணான மீனாளாம்
எம் மதுரை மண்ணாளாம்
மதுரை மண்ணாள வாராகன்னு
என்கண்ணே
பொன்னால தாமரையும்
பூக்கும்அந்தப் பொய்கையில
பொய்கையாம் வைகை என்கண்ணே
வைகையாத்துத் தண்ணிவர
பாலாத்துத் தண்ணிவர என்கண்ணே
பாக்கவந்த பாலகனே
பாலகனை ஆரடிச்சா
ஆரடிச்சா ஏனழுதா யென்கண்ணே
அடிச்சாரச் சொல்லியழு
தாத்தா அடிச்சாரோ என்கண்ணே
தமரைப்பூச் செண்டாலே!
பாட்டி அடிச்சாரோ என்கண்ணே
பஞ்சுப் பூச்செண்டாலே!
மாமன் அடிச்சாரோ என்கண்ணே
மகிழம்பூச் செண்டாலே!
அத்தை அடிச்சாரோ என்கண்ணே
அல்லிப்பூச் செண்டாலே
அடிச்சாரச் சொல்லியழு என்கண்ணே
ஆவதென்ன பாத்துருவோம்!
தொட்டாரச் சொல்லியழு என்கண்ணே
தோள்விலங்கு போட்டுருவோம்
ஆரும் அடிக்கலையே என்கண்ணே
ஐவிரலும் தீண்டலையே!
தம்பி தானாயழுகிறானே
தாயாரைத் தேடுகிறான்!

பரட்டைப் புளியமரம் என்கண்ணே
பந்தடிக்க ஒருநந்தவனம்
நந்தவனம் கண்திறந்து என்கண்ணே
நாலுவகைப் பூஎடுத்து
பூஎடுத்துப் பூசைசெய்யும்
புண்ணியனார் பெயரனோ என்கண்ணே
மலரெடுத்துப் பூசைசெய்யும்
மகராசர் பெயரனோ
கண்ணே என்கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ என்கண்ணே
ஆரிரரோ ஆராரோ




















Thursday, January 20, 2011

ஒயிலாட்டம் மயிலாட்டம்

பழம்வேண்டி புவிசுற்றி
பழம்நீயாய் ஆனவனே
வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம்
ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம்

கற்பனையில் பாருங்களே
கண்டுமனம் மகிழுங்களே
வேல்போட்டு ஆடுகிறான்-----ஒயிலாட்டம்
பால்வடியும் பூமுகத்தான்-----மயிலாட்டம்

வேலுக்கொரு வேகமுண்டு
வேதனைகள் தீர்த்துவைக்கும்
வித்தகனாம் முருகனுக்கு------ஒயிலாட்டம்
பித்தந்தனைத் தீர்த்துவைக்கும்--மயிலாட்டம்

நாவல்பழம் தனைக்கொடுத்து
நாவன்மை சோதித்த
சேவற்கொடி அழகனுக்கு------ஒயிலாட்டம்
சேர்ந்துபாடி ஆடுங்களே ------மயிலாட்டம்

காவடிக்குத் துணைவருவான்
பூவடிகள் போற்றிநிதம்
பாவடிகள் புனைந்து ஆடும் ---ஒயிலாட்டம்
சேவடிகள் ஆடிவரும் --------- மயிலாட்டம்

உயிரெல்லாம் அவனாக
உள்ளமெல்லாம் தேனாக
மயிலோடு ஆடிவரும் ------- ஒயிலாட்டம்
ஒயிலாக ஆடிவரும் --------- மயிலாட்டம்

பாசமுடன் தேடிவந்தால்
நேசமுடன் வாழவைக்கும்
ராசஅலங் காரனுக்கு --------ஒயிலாட்டம்
தேசமல்லாம் ஆடிவரும்---மயிலாட்டம்

சங்கம் முழங்குதம்மா
அங்கம் சிலிர்க்குதம்மா
தங்கரத முருகனுக்கு ---- --- ஒயிலாட்டம்
தரணியெங்கும் ஆடிவரும்--மயிலாட்டம்

முத்தமிழின் சொல்லெடுத்து
முருகனவன் பேரிசைத்து
பக்தரெல்லாம் ஆடுகிறார் ------ ஒயிலாட்டம்
சித்தரையும் மயங்கவைக்கும்--மயிலாட்டம்

வள்ளிமயில் தேவயானை
உள்ளமகிழ் மன்னவனாம்
செல்வமுத்துக் குமரனுக்கு------ஒயிலாட்டம்
செல்வங்களை அள்ளித்தரும்---மயிலாட்டம்

அப்பனுக்குப் பாடஞ்சொன்ன
ஒப்பில்லாப் பிள்ளையவன்
சுப்ரமணியக் கடவுளுக்கு ------ ஒயிலாட்டம்
சுவாமிமலை சண்முகனின்-----மயிலாட்டம்

செட்டிமக்கள் சேர்ந்துஒன்றாய்
சித்திரையின் பௌர்ணமியில்
எட்டுக்குடி ஆடிவரும் --------- ஒயிலாட்டம்
கட்டழகுக் குமரனுக்கு---------மயிலாட்ட்ம்

பக்தியெல்லாம் மிகுந்துவரப்
பெற்றுவரும் நன்மையினால்
பாடிப்பாடி ஆடுகிறார் --------- ஒயிலாட்டம்
பார்க்கப் பார்க்கப் பரவசமாம்-மயிலாட்டம்





Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்!

மங்கலமாய்க் கோலமிட்டுச்
சங்கொலித்துத் தமிழெடுத்துப்
பொங்கலோ பொங்கலென்று
பூவையர்கள் பொங்கிடுவார்!
மஞ்சுவிரட்டுக் களத்தினிலே
மதர்த்துநிற்கும் காளகளை
சிங்கமெனச் சிலிர்த்தெழுந்து
கொம்புபிடித்து திமிலடக்கி
கட்டிப் பிடித்துவந்து
கழுத்தினிலே கட்டியுள்ள
பட்டுத்துணிபிரித்துக்
களியாட்டம் போடுகின்ற
காளையர்க்குக் கொண்டாட்டம்!
பொங்கலுக்கு மூணுநாள்
பூராவும் விடுப்பு என
பொங்கும் மகிழ்ச்சியிலே
பூத்திருக்கும் சிறார் கூட்டம்!
காணும் பொங்கலன்று
கன்னியரும் காளையரும்
வானம் தொட்டுவிடும்
வைபோக மகிழ்ச்சியிலே!
ஆற்றங் கரையினிலே
அடுத்தூரும் ஊற்றினைப்போல்
உற்றாரும் உறவுகளும்
உயர்ந்திருக்கப் பார்த்திடலாம்!
காணும் பொங்கலிது
கண்துஞ்சாப் பொங்கலிது!
கடல்கடந்து சென்றாலும்
கதிரவனின் ஆற்றல்பெற்று
களைப்பின்றிச் செயலாற்ற
மறத்தமிழன் கொண்டாடும்
மகர சங்கராந்தியிது!
மண்ணின் பெருமையிது!

Sunday, January 9, 2011

சந்தனக் காட்டில் முருகன்!

செந்தமிழ் நாடெனும் போதினிலே மெட்டு


சந்தனக் காட்டிலே குளித்தெழுந்து---இங்கு
தந்தனா பாடிவரும் தென்றலைப்போல்
கந்தனின் புகழ்மணக் காட்டினிலே---மனிதர்
கவலை மறக்கிறார் நாட்டினிலே!

பழனி மலைநோக்கிப் பாடிவந்தார்---அந்தப்
பால முருகனைப் பணியவந்தார்!
வேலோடு மயில்துணை யாகுமென்றார்---அந்த
வேந்தனின் வேல்வினை களையுமென்றார்!

காவடி தூக்கியே காணவந்தார் -----கந்தன்
சேவடி நோக்கியே சேர்க்கவந்தார்!
பாவடி பாடியே பக்தியோடு ------ கடம்பன்
பூவடி கண்களில் தேக்கிவந்தார்!

நல்ல வரங்களை நாடிவந்தார் --- அதைச்
சொல்ல முடியாமல் சொக்கிநின்றார்!
கள்ளூரும் கந்தனின் காட்சியிலே ---தங்கள்
பிள்ளை முகம்கண்டு மகிழ்வடைந்தார்!!

தத்தித் தத்தியேதான் நடந்தாலும் ---அவர்
பக்தி மிகுதியால் பலமடைந்தார்!
சுத்தி நில்லாதேபோ பகையேஎன்று--விரைந்து
துரத்தி விட்டேயுன்னைச் சரணடைந்தார்!

கந்தா கந்தாவென்று கதறிவந்தார்---மனதில்
சொந்தம் நீதானென்று சொல்லிவந்தார்!
பந்த பாசம்தொட்டு ஓடிவந்தார் --- ஓடி
வந்தவர்க்கே நல்ல வரந்தருவாய்!

பஞ்சாமிர்தப் பிரியன் பாதம்கண்டார்---அங்கு
பாலோடு தேனபிஷேகம் கண்டார்!
அஞ்சாதே நில்லென்று அபயந்தரும் -அந்தப்
பிஞ்சு முகம்கண்டு பேறுபெற்றார்!!

Saturday, January 8, 2011

நல்லதே நினைப்போம்

பிறர்க்குக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லையெனில்
கனிவான வார்த்தைகளையாவது பேசுவோம்
என்பது புத்தர்வாக்கு.உலகத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய
நல்லசெய்திகள் எவ்வளவோ இருக்கின்றன.
அதுபோல் பிறர்க்குக்கொடுப்பதற்கு
நல்ல செய்திகள் கிடைக்கவில்லையெனில்
விரும்பத்தகாத செய்திகளைத் தவிர்க்கலாம்.
எல்லோரும் படிக்க வேண்டுமல்லவா?
என்னால் சில ‘ப்லாக் ’குகளில் படித்த சில
செய்திகளை சீரணிக்கவே முடியவில்லை.
அவர்கள் எண்ணங்களை மாற்ற நாம்யார்?
இனிமேல் அந்தமாதிரி ‘ப்லாக்’ குகளைப்
படிக்காமல் இருந்துவிடலாம் என்று
முடிவு செய்துவிட்டேன்.

Thursday, January 6, 2011

கண்ணாத்தாள்

      ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
      ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

கருவிலே உருவான கனிதமிழ்ப் பாட்டிது
            கண்ணாத்தா உந்தனருளே!
வருவாய்நீ வாழ்க்கையில் வசந்தங்கள் பெருகிட
            வாழ்த்தியே அருள்புரிவாய்!
கண்மலர் சாத்தினால் கனிவோடு பார்த்துநீ
            கண்நோயைத் தீர்த்தருள்வாய்!
கண்மணியைக் காத்தருள் புரிவதால் தான்உனை
           கண்ணாத்தா என்றுசொல்வார்!
கண்ணிலே மாவிளக்கு வைத்துனை வணங்கிட
           கவலையைத் தீர்த்தருள்வாய்!
கண்ணுக்குக் கண்ணாகக் கருவிலே குழந்தையைக்
           களிப்போடு தந்தருள்வாய்!
பாட்டரசன் பாட்டுக்குப் படியெடுத்துக் கொடுத்துநீ
           பாரெல்லாம் புகழவைத்தாய்
நாட்டரசன் கோட்டைவளர் நாயகியே உன்புகழ்
           நாவினால் சொல்லலரிதே!                             ----ஓம்சக்தி

Tuesday, January 4, 2011

ஊஞ்சலாடும் பேரானந்தம்!

ஊஞ்சலிலே ஆடிவரும் ஓங்கார முருகையா
உன்னூஞ்சல் ஆடுகையில் உள்ளமெல்லாம் மகிழுதையா!
ஓடோடிக் காணவந்தோம் உன்னூஞ்சல் ஆட்டத்தையே
தேடிவந்த செல்வமெல்லாம் தென்பழனி நீதந்தது!
காடுமேடு பள்ளமெல்லாம் கடிதாகக் கடந்துவந்து
களிகூரும் உன்னூஞ்சல் கண்குளிரக் காணவந்தோம்!
வெள்ளியினால் ஊஞ்சலிலே புள்ளிமயில் முருகையா
உள்ளம்மகிழ்ந் தாடிடுவாய் உற்றதுன்பம் மறக்கச்செய்வாய்!
செம்மடைப் பட்டியிலே செகம்போற்ற வெள்ளிஊஞ்சல்
செம்மையாக ஆடுதல்போல் செகம்போற்றும் வாழ்வுதருவாய்!
கல்லும்முள்ளும் மெத்தையிட்டு காவலுக்கு உன்பாட்டு
கால்சிவக்க நடந்துவந்தோம் கண்திறந்து பாருமையா!
கண்களிலே உன்னைவைத்து கற்பனையில் கவியமைத்து
பண்ணிசைத்துப் பாடிவந்தோம் பரவசமாய் ஆடுமையா!
எல்லார்க்கும் செல்வமுண்டு எமக்குள்ள செல்வங்களோ
வள்ளலுந்தன் கருணைக்கடல் வற்றாத செல்வமன்றோ!

ஊஞ்சலிலே ஆடிவரும் ஓங்கார முருகையா
உன்னூஞ்சல் ஆடுகையில் உள்ளமெல்லாம் மகிழுதையா!

Sunday, January 2, 2011

வயதானால் இப்படித்தான்!

எழுதிக் குவித்திடத் தோன்றும்
எண்ணற்ற கற்பனைகள்.
புழுதிதட்டிக் கொண்டுவந்து
புதுயுகப் புத்தகத்தில்
புன்னகையாய் மலரவேண்டும்!
எண்ணங்கள் மிகநிறைய்ய்ய!
எழுதத்தான் நேரமில்லை.
காலை எழுந்ததும்
கைபார்த்துக் கடவுள்வணங்கி
பல்துலக்கிக் காலைக்கடன்முடித்து
உடற்பயிற்சி, யோகாபண்ணி
[அதைசெய்தபின்தான்கொஞ்சம் சுறுசுறுப்பே வருகிறது]
வயதாகிவிட்டதல்லவா?
பின் குளித்து, விளக்கேற்றி
சாமி கும்பிட்டு
காலை உணவு தயாரித்தல்.
உண்டுமுடித்ததும்,
மாத்திரைமருந்து, [இல்லைன்னாஒண்ணும் நடக்காது]
பதினோரு மணிக்கு
மெட்டிஒலி, பின் கஸ்தூரி
பின் சமையல்.
இருவரும் சேர்ந்துதான்
ஆளுக்கு ஒன்றாய்ச் செய்வது.
தலைவர் இளவயதில்
செய்யாத உதவியெல்லாம்
இப்போது செய்கிறார்கள்
விலைக்கு வாங்கிச்சாப்பிட்டால்
வயிறு ஏற்பதில்லை.
அல்லது வீட்டின்தலைவருக்குப்
பிடிப்பது இல்லை.
சமையலுக்கு ஆள்போட்டால்
ஒழுங்காய் வருவதில்லை.
இதில இடையிடையே
தலைவரைத் தேடிவரும்
பஞ்சாயத்துக்கள்,
சாமிவீட்டு வேலைகள்,
கோவில் வேலைகள்,
கல்யாணம் பேசிமுடித்தல்,
ஊர்வேலைகள் சம்பந்தமாக
வருகிறவர்களுக்கு உபசரிப்பு
கணினியப் போட்டு விட்டு
போகவர நாலுவரி
காப்பிபோட்டுக் குடுத்துவிட்டு
வரப்போகநாலுவரி
வேலக்கார அம்மாவந்தா
வெளக்கற பாத்திரம் எடுத்துத்தரணும்
வண்ணாத்தி வந்தாக்க
துணி சோப்பு எடுத்து குடுக்கணும்.
இம்புட்டுக்கும் இடையில
ஷேர்மர்க்கட் வியாபாரம்[அப்பச்சி கற்றுக்கொடுத்தது]
கூப்பிடுகிற இடங்களுக்கு
திருவாசக முற்றோதல்,
முடிந்தபோதெல்லாம் புத்தகவாசிப்பு,
மாலையில் விளக்கேற்றி
மங்கலமாய் நாலுபாட்டு!
சிவன்கோவில் சென்றுவந்து,
சிறிது உணவு சாப்பிட்டு,
நாதஸ்வரம் திருமதிசெல்வம்,
பின் வழைப்பழம் பால்
மாத்திரை மருந்துகள்,
இதன்பிறகு தூக்கம்வராவிட்டால்
கணினியில் கொஞ்சநேரம்,
தலைவருக்கு கோபம்வருவதற்குள்
படுக்கைவிரித்துவிட வேண்டும்.
இலாட்டி அவ்வளவுதான்
என்ன நடக்குமென்று
சொல்லமுடியாது.
அப்புறம்
மாத்திரை மருந்து டோஸ்
அதிகமானால் பாடுபடப்போவது யார்?
அதனால் கோபம்வருமுன்
படுக்கை விரிக்கவேண்டியதுதான்.

Saturday, January 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கவிதைபடித்துக் கருத்தெழுதும்
கண்மணிகளும்,
கவிதை ரசிகர்களும்
காலமெல்லாம்
களிப்போடு வாழ்ந்திருக்க
கடவுளை வேண்டுகிறேன்.
வாழிய நீடூழி!
வளர்ந்து புகழ்பெறுக!!
தமிழ்மணத்துக்கு நன்றி
Related Posts Plugin for WordPress, Blogger...