Sunday, December 16, 2012

முருகன் பூசை வீடு.

மேவுபுகழ் காரைநகர் மீதினிலே கரையமைந்த
ஆவுடையாஞ் செட்டிவகை ஆதரிக்கும் குணமுடயார்!
பூவுடைய மணமெனவே புகழ்மிக்கார் தகவுடையார்!
தாவுமயில் ஏறிவரும் தமிழ்க்குமரன் கந்தனுக்கு
பார்த்துவைத்த நன்னாளில் பங்காளி எல்லோரும்
கார்த்திகையின் திங்களிலே கருத்துடனே கூடிவந்து
முன்னோர்கள் இட்டபடி முறையாகப் பூசைவைத்து
தன்னேரில் தமிழாலே தக்கபடி அர்ச்சித்து
வருவிருந்து பார்த்திருந்து வந்தாரைஉபசரித்து
வருடத்தில் ஒருநாளில் வடிவழகாய் அலங்கரித்து
பள்ளயத்தில் அன்னமதைப் பக்குவமாய் இட்டுவைத்து
புள்ளியெலாம் பெருகிவரப் பூந்தமிழால் பாட்டிசைத்து            
கமகமக்கும் விருந்ததனைக் களிப்போடு பூசையிட்டு
சமபந்தி போசனமாய்ச் சகலருக்கும் விருந்துவைப்பார்!
மாவிளக்கு ஏற்றிவைத்து மகிழ்வோடு தந்திடுவார்!
பானகமும் பூசயிட்டுப் பாசமுடன் பகிர்ந்தளிப்பார்!
பூசயிட்டு வணங்குதற்குப் புள்ளிமயில் முருகனுக்கு
ஆசையுடன் ஒருவீடு ஆங்கே கட்டிவைத்தார்!

நல்லாராம் நம்வீட்டுப் பெண்மக்கள் குழந்தைகள்
எல்லோரும் கலந்துகொண்டு இன்புற்று மகிழ்ந்திருக்க
தன்னேரில் தமிழழகன் தண்டபாணி ஐயனவன்
பொன்னான தாள்பணிந்து புண்ணியங்கள் பெற்றிடுவோம்!

Monday, December 10, 2012

வயது சாதனை?!......7

நகரமும் இல்லாத, கிராமமும் அல்லாத
அவினாசி பகுதியில், ஒரு பழைய மொபட்
வாகனத்தின்  பின், சின்ன சின்னபொருட்களை
வைத்து விற்பனை செய்கிறார் பெரியவர் ஒருவர்.
அவரது சட்டையின் பின்பகுதியில், எனக்கு காது
கேட்காது என்று எழுதி ஒட்டியுள்ளார். காரணம்
அறிய, அவரை நிறுத்தி சைகையால் பேசியபோது
அவர், நம் கண்களையும், உதடுகளையும் பார்த்தே,
என்ன கேட்கிறோம் என்பதை புரிந்து,பதில் தருகிறார்.
            பெயர் கல்யாண சுந்தரம். வயது எழுபத்து நாலு.
திருப்பூர் பகுதியில் நன்றாக வாழ்ந்திருக்கிறார்,அவரது
மகன் ஒருவர், இன்றைக்கும் நாற்பதுபேரை வைத்து,
திருப்பூரில் தொழில் நடத்திவருகிறார் என்பது, பேச்சின்
மூலம் தெரிய வந்ததேதவிர,பழையவிஷயத்தின்
ஆதிக்கோ, ஆழத்திற்கோ போக அவர் பிரியப்படவில்லை.
யார் எங்கே இருந்தாலும், நல்லாஇருக்கட்டும்.என்கிறார்.
        மனைவியோடு அவினாசி வந்தவருக்கு கவுரவமாக,
நியாயமாக, எளிமையாக குடும்பம் நடத்த ஒரு தொழில்
தேவைப்பட்டது. ஊக்கு, ஹேர்பின்,லஞ்ச்பாக்ஸ்,விசிறி
உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மொத்தமாக வாங்கி,
மொபட்டில் வைத்து பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு
எடுத்துச் சென்று விற்பனை செய்கிறார்.இவரது
பொருட்களின் மதிப்பு இரண்டு ரூபாயிலிருந்து இருபது
ரூபாய் வரைதான்.ஒருநாளைக்கு பெட்ரோல் சிலவுபோக
நூறிலிருந்து நூற்றைம்பது ரூபாய்வரை கிடைக்கிறது.
      காது கேட்காததைப்பற்றிக் கவலை படவேஇல்லை இவர்.
இதன்காரணமாக தான்விற்கும் பொருட்களின்மீது விலையை
ஒட்டிவிடுகிறார்.ஒருரூபாய், இரண்டுரூபாய் லாபம் வைத்தே
இவர் விற்பது வாடிக்கையாளர்களுக்கு தெரியும் என்பதால்
யாரும் பேரம்பேசாமல் பொருளை வாங்கிச்செல்வர்.
            கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகள் சிலருக்கு
நல்ல நாள்போன்ற தினங்களில், இலவசமாக பொருட்கள்
தந்து மகிழ்ச்சிப்படுத்துவதும் உண்டு.
            பழகியவர்களுக்கு என்னைப்பற்றி தெரியும். புதிதாக என்னை
பார்ப்பவர்களுக்கு என்னைப்பற்றி தெரியாமல் சிரமப்படக்கூடாது
என்பதற்காகவும் சாலையில் போகும்போது பின்னால் வரும்
வாகன ஓட்டிகள் ,என்நிலையை தெரிந்துகொண்டால், வீணாக
ஆரன் சப்தம் கொடுத்து சிரமப்பட வேண்டாம் பாருங்கள்.....
அதற்காகத்தான் சட்டையில் பின்பக்கத்தில் ‘எனக்கு காதுகேட்காது"
என்று எழுதி,பின்போட்டுள்ளேன்.இதில் எனக்கு எந்தவெட்கமும்
இல்லை... என்கிறார்.
           ஓய்வு எடுக்கவேண்டிய வயதில், களைத்து போகாமல் உழைத்து
பிழைக்கும் கல்யாண சுந்தரத்தை நினைத்து, உழைக்காமல்,
இலவசங்களை நம்பி வாழ்பவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்.
உண்மையில் இவரை நினைத்து நாமும் நாடும் பெருமைப்படத்தான்
வேண்டும்.
       
          நன்றி தினமலர் 13-05-2012.

         நானும் எனது அறுபது வயதுக்கு பிறகுதான் எனது குழந்தைகளிடமிருந்து இந்த கணினியைகற்றுக்கொண்டேன்.ஷேர் வணிகம்
என்தந்தையிடம்கற்றுக்கொண்டேன்.முன்பு எழுதிவைத்திருந்த கவிதைகளையும் இதில் வெளியிட்டுள்ளேன்.
                                                                                        நல்லது.

Saturday, December 8, 2012

வயது சாதனை?!...6

கற்றுக்கொள்ள எந்தவயதும் தடையில்லைஎன்பதை நிரூபிக்கும்வகையில்
எழுபதுவயதில் ஒருபெண், அண்டர் வாட்டர் போட்டோகிராபி
[நீருக்குள் மூழ்கி புகைப்படம் எடுத்தல்]கலையை கற்றுக்கொண்டதுடன்
அந்த துறையில் பெரும் நிபுணராகி, அதுதொடர்பாக மூன்று புத்தகங்கள்
எழுதியுள்ளார் என்றால் ஆச்சரியம்தானே?அவர்பெயர் லெனி ரிபென்டால்.

      கடந்த 1936ல் பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியை முதன்முதலாக ஆவணப்படமாக தொகுத்தவர் இவரே.இந்த ஒலிம்பிக்
போட்டிக்காக, அறுபதுக்கும் மேற்பட்ட ஒளிப்பதிவு கலைஞர்களை
இயக்கினார்.ஸ்லோமோஷன், பனோரமிக் வியூ,பிஷ் ஐ என்று,இன்றைய
காலகட்டத்தில்பயன்படுத்தக்கூடிய அனத்துவித தொழில் நுட்பத்தையும்,
அப்போதே செயல்படுத்திக்காட்டியவர். புகப்படக்கலையின் பல்வேறு பரிணாமங்களையும் தொட்டவர்.
       ஆப்ரிக்கநாடுகளில் ஒன்றான சூடானுக்கு சென்று, அங்குள்ள
பழங்குடியினர்பற்றி இவர் எடுத்தபடங்கள் ஏராளம்.இதை வைத்தும்
பலபுத்தகங்களை வெளியிட்டுள்ளார்.அவை ஒவ்வொன்றும்
பழங்குடியினர் பற்றிய பாட புத்தகங்கள் போன்றே இன்றும் கருதப்படுகிறது.
சமீபத்தில் இவர் தன் 101வது வயதில் காலமானார்.இறப்பதற்கு முதல்நாள்கூட,ஒரு புகைப்படம் எடுப்பது தொடர்பான கலந்தாய்வில் கலந்துகொண்டார்.
       தான் ஏற்றுக்கொண்ட துறையில், புதுமையை புகுத்தியதும், சமுதாய
நலனுடன் கடினமாக உழைத்ததும், இவருக்கு இறவா புகழைத் தேடித்தந்துள்ளது.

நன்றி.தினமலர். 18-11-2012.

நம்மால் எதுவும் முடியும்.வயது ஒருதடையல்ல.முயற்சிப்போம்.
வெற்றிபெறுவோம்.நல்லது.

         
Related Posts Plugin for WordPress, Blogger...