சரவண பவஎன ஒருதரம் நினைத்திட
சக்தியின் மகனவன் வருவானே!
அரகர எனஎன அருகினில் அழைத்திட
அன்புடன் மனதினில் உறைவானே!
ஓம்என உரைத்திட உறுவகை உறுகென
உயர்வுகள் பெறுகென அருள்வானே!
நானெனும் நினைவுகள் நடுவில் விலகிட
அயர்வுகள் அருகிட அருள்வானே!
வள்ளிதெய் வானை வள்ளல் இருபுறம்
வடிவாய் காட்சி கண்டோமே!
ஒள்ளியன் ஆக உள்ளெழில் பெருகிட
மனதில் மாட்சி கொண்டோமே!
ரஅண பவச ரர ரர ரர ர
அரங்கனின் மருகா சரணமையா!
ரிஅண பவச ரிரி ரிரி ரிரி ரி
ரிதமென நாவினில் இருந்திடுக!
சேவல் கொடியுடை செவ்வாய் முருகனே
செய்வன திருந்தச் செயவைப்பாய்!
வேலும் மயிலுடன் துணையாய் வந்தே
வென்றிட எமக்கே வரமருள்வாய்! [முருகையா]
(ஒள்ளியன்=மேன்மைமிகுந்தவன்)
நால்வரின் வாழ்வில் நற்றுணையாவாய்
நற்பணி யெல்லாம் செயவைப்பாய்!
வேல்வரின் இன்பம் விந்தைபுரிந்தே
ஒற்றுமை ஆக்கித் தந்திடுவாய்!