Sunday, December 2, 2018

புள்ளிமயில் மீதுவரும் பூந்தமிழே போற்றி!
அள்ளிவரும் அழகுதமிழ் அமுதே போற்றி!
துள்ளிவரும் வேலெடுத்து வருவாய் போற்றி!
புள்ளியெலாம் பெருகிவர அருள்வாய் போற்றி!
கள்ளமில்லா அன்பருள்ளம் அறிவாய் போற்றி!
உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும் உயிரேபோற்றி!           
வள்ளிதெய்வ யானையுடன் வருவாய் போற்றி!
வெள்ளமென அருள்பொழியும் விளக்கே போற்றி!
கள்ளிருக்கும் பூவிருக்கும் தேனே போற்றி!
உள்ளிருக்கும் அன்பாலே உவந்தோம் போற்றி!
புள்ளிருக்கு வேளூரின குமரா போற்றி!     [வைத்தீசுவரன் கோவில்]
எள்ளிருக்கும் எண்ணைபோல் இருப்பாய் போற்றி!
கிள்ளைமொழி மழலையர்போல் கிளர்ந்தோம் போற்றி!
கொள்ளைவிழி அழகினிலே குழைந்தோம் போற்றி!
அள்ளஅள்ளக் குறையாத அன்பே போற்றி!
மெள்ள மெள்ள அடியாரை ஆள்வாய் போற்றி!
உள்ளுவதை உயர்வாகத் தருவாய் போற்றி
தெள்ளுதமிழ்ப் பாப்பாடித் தெளிந்தோம் போற்றி!
வெள்ளியங் கிரியானே வேலா போற்றி!
வெள்ளைப்பூ அலங்கார வேந்தே போற்றி!
                                                               [திருச்செந்தூரில்]
அள்ளிவரும் மாசிப்பச்சை அழகே போற்றி!
                                                               [ திருச்செந்தூரில்]             
துள்ளிவரும் தொல்தமிழின் துடிப்பே போற்றி!
ஒள்ளியனே தில்லையனின் மகனே போற்றி!
                                     [ஒள்ளியன்=மேன்மையானவன்]
வள்ளியனே வெல்லத்தமிழ் வளர்ப்பே போற்றி!
                                          [வள்ளியன்=கொடையாளன்]
பள்ளிகொண்ட எம்பெருமான் மருகா போற்றி!             
வள்ளிதினை மாதருவாள் வருவாய் போற்றி!
தள்ளையெனத் தாங்குகின்ற தருவே போற்றி!
                                                    [தள்ளை=தாய்]
நள்ளினவர் நலம்பெறவே அருள்வாய் போற்றி!
                                                       [நள்ளினவர்=நாடியவர்]
பள்ளிகொண்ட மாலவனின் மருகா போற்றி!
பிள்ளையென எண்ணியெமை ஏற்பாய் போற்றி!ய்                                  உள்ளூரும் பக்தியிலே உயர்ந்தோம் போற்றி!
கள்ளூறும் காட்சியிலே கனிந்தோம் போற்றி!
உள்ளமெனும் கோயிலமர் குமரா போற்றி!
தெள்ளமுதத் தீந்தமிழின் திருவுருவே போற்றி!
தெள்ளிக்கொ ளிக்குங்கடற் செந்திலா போற்றி!
வள்ளிக்கு வாய்த்தவடி வேலவா போற்றி!
அள்ளிக் கொடுக்கின்ற அருளமுதே போற்றி!
பிள்ளைக்கு வரம்தந்து பேணிடுவாய் போற்றி!
பள்ளயத்தை இட்டுவைத்தோம் பரன்மகனே போற்றி!
உள்ளன்போ டேற்றுவந்து உவந்திடுவாய் போற்றி!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...