Sunday, January 9, 2011

சந்தனக் காட்டில் முருகன்!

செந்தமிழ் நாடெனும் போதினிலே மெட்டு


சந்தனக் காட்டிலே குளித்தெழுந்து---இங்கு
தந்தனா பாடிவரும் தென்றலைப்போல்
கந்தனின் புகழ்மணக் காட்டினிலே---மனிதர்
கவலை மறக்கிறார் நாட்டினிலே!

பழனி மலைநோக்கிப் பாடிவந்தார்---அந்தப்
பால முருகனைப் பணியவந்தார்!
வேலோடு மயில்துணை யாகுமென்றார்---அந்த
வேந்தனின் வேல்வினை களையுமென்றார்!

காவடி தூக்கியே காணவந்தார் -----கந்தன்
சேவடி நோக்கியே சேர்க்கவந்தார்!
பாவடி பாடியே பக்தியோடு ------ கடம்பன்
பூவடி கண்களில் தேக்கிவந்தார்!

நல்ல வரங்களை நாடிவந்தார் --- அதைச்
சொல்ல முடியாமல் சொக்கிநின்றார்!
கள்ளூரும் கந்தனின் காட்சியிலே ---தங்கள்
பிள்ளை முகம்கண்டு மகிழ்வடைந்தார்!!

தத்தித் தத்தியேதான் நடந்தாலும் ---அவர்
பக்தி மிகுதியால் பலமடைந்தார்!
சுத்தி நில்லாதேபோ பகையேஎன்று--விரைந்து
துரத்தி விட்டேயுன்னைச் சரணடைந்தார்!

கந்தா கந்தாவென்று கதறிவந்தார்---மனதில்
சொந்தம் நீதானென்று சொல்லிவந்தார்!
பந்த பாசம்தொட்டு ஓடிவந்தார் --- ஓடி
வந்தவர்க்கே நல்ல வரந்தருவாய்!

பஞ்சாமிர்தப் பிரியன் பாதம்கண்டார்---அங்கு
பாலோடு தேனபிஷேகம் கண்டார்!
அஞ்சாதே நில்லென்று அபயந்தரும் -அந்தப்
பிஞ்சு முகம்கண்டு பேறுபெற்றார்!!

1 comment:

Chitra said...

பக்கத்தில் ஒரு ஊருக்கு போய் விட்டு வந்தேன், அம்மா... இந்தியா வந்தால், கண்டிப்பாக உங்களை சந்திக்க வேண்டும் அம்மா... நேரம் இருந்தால், இந்த லிங்க் கிளிக் செய்து பாருங்கள். http://konjamvettipechu.blogspot.com/2011/01/blog-post_10.html

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...