சின்னஞ் சிறுமலர்
சிக்கெனப் பூத்ததுபோல்
பொக்கை வாய் திறந்து
பக்கெனச் சிரித்திடுவாய்
பக்கத்தில் வந்தாலோ
படக்கெனெக் கைதூக்கி
ஒக்கலில் அமர்ந்து
பதவிசாய்க் குனிந்து
பாதங்கள் தங்கள் அணிகளை
அணிகிறதா என்று....
ஆவலுடன் பார்ப்பாய்!
அணிந்தாலோ....
அழகிய மலர்கள்
தென்றல் காற்றில்
மாறிமாறி ஆடுவதுபோல்
கைமலர் விரித்துக்
கனிந்த முகமலர்காட்டுவாய்!
அது....
இன்னும் என் கண்ணில்
நிற்கிறது..
கண்ணே அல்ர்மேலு
காணவேண்டும் உன்னை!
நிருத்தியம் காட்டும்
நின்கை மலர்கள்
அவை உன் ஒருத்திக்கே சொந்தம்!
அரிசிப் பல்காட்டி
அலர்மேலு சிரிப்பதை
அத்தை காணவேண்டும்!
முத்தங்கள் ஒருகோடி
நிறுத்தாமல் தரவேண்டும்!
தேன்சிந்தும் உந்தன்
சிந்தூரப் புன்னகையும்
மான்கொஞ்சும் விழியழகும்
நான்வந்து காணவேண்டும்!
ஆசைகள் மிகநிறைய....
உடனே முடிகிறதா?
பாவிகள்
தடைகள் எத்தனைதான்
இடையில் விதிக்கின்றார்...
பாஸ்போர்ட்டாம்!
விசாவாம்!!
பலமணிப் பயணமாம்!!!
என் இதயத்தின்
இறக்கை கட்டிய வேகத்தோடு
போட்டிபோட முடியாதவர்கள்!
போகட்டும்
அவர்களை மன்னிக்கிறேன்!
அவர்கள் விதிப்படி
உன்னைக் காணவேண்டுமெனில்
பல ஆயிரங்கள்
பணம் வேண்டும்.
அதை.....(சே)
நிறைய சேர்த்து
பிறகு.....
தடையின்றி உன்னைக்காண
உன்மலர்ப் பாதம் பட்டதால்
உயர்ந்த அந்த நாட்டுக்கு
நான் வருவேன்
நிச்சயம் ஒருமுறை!
இது எழுதி ஆச்சு ஒரு இருவத்தியேழு வருசம்!
No comments:
Post a Comment