Tuesday, January 4, 2011

ஊஞ்சலாடும் பேரானந்தம்!

ஊஞ்சலிலே ஆடிவரும் ஓங்கார முருகையா
உன்னூஞ்சல் ஆடுகையில் உள்ளமெல்லாம் மகிழுதையா!
ஓடோடிக் காணவந்தோம் உன்னூஞ்சல் ஆட்டத்தையே
தேடிவந்த செல்வமெல்லாம் தென்பழனி நீதந்தது!
காடுமேடு பள்ளமெல்லாம் கடிதாகக் கடந்துவந்து
களிகூரும் உன்னூஞ்சல் கண்குளிரக் காணவந்தோம்!
வெள்ளியினால் ஊஞ்சலிலே புள்ளிமயில் முருகையா
உள்ளம்மகிழ்ந் தாடிடுவாய் உற்றதுன்பம் மறக்கச்செய்வாய்!
செம்மடைப் பட்டியிலே செகம்போற்ற வெள்ளிஊஞ்சல்
செம்மையாக ஆடுதல்போல் செகம்போற்றும் வாழ்வுதருவாய்!
கல்லும்முள்ளும் மெத்தையிட்டு காவலுக்கு உன்பாட்டு
கால்சிவக்க நடந்துவந்தோம் கண்திறந்து பாருமையா!
கண்களிலே உன்னைவைத்து கற்பனையில் கவியமைத்து
பண்ணிசைத்துப் பாடிவந்தோம் பரவசமாய் ஆடுமையா!
எல்லார்க்கும் செல்வமுண்டு எமக்குள்ள செல்வங்களோ
வள்ளலுந்தன் கருணைக்கடல் வற்றாத செல்வமன்றோ!

ஊஞ்சலிலே ஆடிவரும் ஓங்கார முருகையா
உன்னூஞ்சல் ஆடுகையில் உள்ளமெல்லாம் மகிழுதையா!

1 comment:

Chitra said...

அம்மாவுக்கும் அம்மாவின் குடும்பத்தில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
என்றும் உங்கள் ஆசிர் வேண்டும் மகள், சித்ரா

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...