Friday, October 15, 2010

துபாய் கவிதை



சிவமயம்
முருகன் துணை
வணக்கம்
என் இனியதமிழ்க் கவிதைக் குழந்தைகளெல்லாம் இறையருளால் உருவானவை.



துபாய் கவிதை பிறந்த சூழ்நிலை

அந்தக்காலத்தில் அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் செட்டிநாட்டில்
வெளிநாடுகளுக்கு செட்டியர்கள் தொழில்செய்யப்போனால் குடும்பத்தை அழைத்துப்போவதில்லை எங்கள்இருவரின் அப்பச்சியும் பர்மா மலேசியா முதலிய நாடுகளுக்குச்சென்றபோது எங்களை அழைத்துச்செல்லவில்லை. அதன்பிறகு சென்ற ஆண்டுதான் எங்களது சின்னமகனும் மருமகளும் எங்களை துபாய்க்கு அழைத்துச்சென்று நல்லமுறையில் கவனித்து சுற்றிக்காண்பித்து அனுப்பிவைத்தார்கள்.இதற்குமுன் நான் விமானப்பயணம்செய்ததில்லை.
எனது முதல் விமானப்பயணம் அது.அப்போது தொன்றிய எண்ணங்களின் வடிவமே துபாய் கவிதை.இதை எப்படிச்சேமிப்பது என்றுதெரியமல் இதில் எழுதியுள்ளேன்.உங்களுக்குத்தோன்றிய கருத்துக்களை எழுதலாம். நன்றி.

இறக்கை கட்டிய முதல் பயணம்
                                              
ஊருக்குள்ள நுழைகையில
ஒளிவெள்ளம் பாயிது!
பேரீச்சம் பழமரங்க
பெருமையா வரவேக்குது!
தரையெல்லாம் வழுக்குது!
தரதரன்னு இழுக்குது!
திரைபோட்ட தில்லானா
திரும்பிப்பாக்க வைக்கிது!
பாக்கப்பாக்க மனசெல்லாம்
பறவபோல பறக்குது!
ஷேக்குமக்க குடும்பமெல்லாம்
ஜிலுஜிலுன்னு ஜொலிக்குது!!
காரெல்லாங் கழுவித்தர
கண்கவரும் மிசினு!
தரையெல்லாம் பெருக்கித்தர
தனியாக ஒருமிசினு!
பாதைஎதிரில் மாறிக்கிட
பச்சைவெளக்கு இருக்குது!
பொத்தானை அமுக்கினாக்க
வண்டியெல்லாம் நின்னுக்கிது!
மாறிவந்து பட்டன்தொட்டா 
மறுபடியும் போயிக்கிது!!
ரயிலான ரயிலுஒண்ணு
ரசிக்கவைக்கும் புயலு!
ஒயிலான மயிலப்போல
ஒய்யாரக் காட்சியது!
மானாக ஓடிவந்து
மக்களெல்லாம் ஏறிஎறங்க
தானியங்கிக் கதவுகூட
தனியாக இருக்குது!
எத்திவிட்டாத் தண்ணிவருது
ஏறக்கிவிட்டா நின்னுபோது
பாத்துரூமு பயிப்புகூட
பணக்காரத் தோரண!!
பாடப்புத்தகம் வைக்கதுக்கும்
பலசரக்கு வாங்கதுக்கும்
ஓடுஞ்சக்கரம் வெச்சபைய
உருட்டிக்கிட்டுப் போறாங்க!
தடவித்தடவிப் பாக்க ஒரு
தட்டையான லாப்புடாப்பு
நடஎல்லாங் கொறஞ்சுபோச்சு
நடக்கதுக்கு சக்கரச்செருப்பு
ஏறியிறங்க நடக்கவெல்லாம்
எக்சலேட்டரு இருக்குது!
அரமனைய தோக்கடிக்கும்
அங்காடி அங்கங்க!
வரவிருந்தாச் செலவழிக்க
வாகான ஊரிதுங்க!
எப்படித்தேன் இருந்தாலும்
எங்க ஊரு ஆகுமா ?
ஏரோப்ளேனு ஏறிப்புட்டா
எல்லாம் மாறிப்போகுமா!

ரொம்பரொம்ப சம்பாரிக்க
ரொம்பநல்ல ஊருங்க 
சம்பாரிச்சு வெச்சிக்கிட்டு
நன்றிசொல்லி வரணுங்க!


பாம் ஜுமைரா
ங்கிருந்தோ கல்லுமண்ணு
ஏராளமாக்கொண்டுவந்து
அங்கங்க போட்டுவச்சு
அலகடலத் தூத்துப்பிட்டு
பங்களாவும் அடுக்குமாடியும்
‘பாம்’ மரம்போல் கட்டிஇருக்கு!
தங்கம்போல வெலயதுக்கு
தாராளமா எடமிருக்கு!!
காரெல்லாம் போகவர
கடலுக்குள்ள ரோடு
மேடுபள்ளந் தெரியாமெ
மெலுக்காகப் போகலாங்க!
உள்ளுக்குள்ள போனாக்க
ஊருப்பட்ட மீனிருக்கு!
ஒலகத்துல உள்ளதெல்லம்
ஒசரமான வெலைக்கிருக்கு
வெள்ளக்காரக் கூட்டந்தாங்க
வெகுபேரா இருக்குதுங்க
அள்ளிக்கிட்டுப் போறாங்க
அவசரமே இல்லாமெ
நீச்சக்கொளம் அருவியோட
நீளமாக இருக்குதுங்க
மூச்சுவாங்கப் பாக்கலாங்க!
முழுகி முழுகிக் குளிக்கலாங்க!!
சூரியனு கடலத்தொடதும்
சுக்கான் போட்ட பாய்மரமும்
பறந்துவார பறவக்கூட்டம்
பாக்கதெல்லாஞ் சந்தோசங்[க]
கொறையாமப் பாக்கலாங்க
குந்திக்கிட்டு கடலோரம்!

வெளக்குப்போட்ட துபாயி!
வெளுத்துக்கட்டுது ஜமாயி!!

                      
சலிச்செடுத்த மண்ணுலகூட சலிக்காத ஓவியமா!!?

கண்ணாடிக் குடுவையில
கலநெறஞ்ச ஓவியமா!
மண்ணெல்லாஞ் சலிச்செடுத்து
மயக்கவைக்கும் ஓவியமா!!
ஒண்ணொண்ணா ஒட்டகத்த
வரஞ்சிருக்கான் ஓவியமா!!!
கண்ணுக்குள்ள நிக்கிதுப்பா
கலயெல்லாங் காவியமா!!!!

மாலுக்குள்ள போனாக்க மனசெல்லாம் பறக்குதுப்பா!

துபாய் மாலு நீரூத்து 
துள்ளியாடும் நடனம்பாக்க
ஜமாய்க்கிது கூட்டம்ரொம்ப
ஜாலி ஜாலி ஜாலிதான்!

சல்லிசான வெலகுடுத்து
சகலபொருளும் வாங்கிடலாம்
அள்ளிக்கிட்டு வாரதுக்கு
அருமையான கிப்டுமார்க்கட்!

எமிரேட்டு மாலுக்குள்ள
எதவாப்போயி வரணுங்க!
எங்கிட்டுப்போனம் எங்கிட்டு வந்தம்
எந்தவழியும் புரியல!

எல்லாநாட்டுக் கலாச்சாரம்
இபுன்பட்டுட்டா மாலுக்குள்ள
வெள்ளமாக இருக்குது
விதவிதமா நாமபாக்க

பாலுமோரு பழங்காயும்
பலநாட்டுப் பொருளும் இருக்கு
லூலுமார்க்கட் பாக்கரொம்ப
லுக்காக இருக்குமுங்க

காருன்னாக் காரு!
கலக்கடிக்கிது பாரு!!
ஊருக்குள்ள போறவேகம்
கிலோமீட்டர் நூறு!!!

காருநிறுத்த எடங்கெடைக்க
காத்துருக்க நேரத்துல
காலார நடந்தாக்கூட
காலத்தோட போகலாங்க

5 comments:

அதிரை என்.ஷஃபாத் said...

துபாய் கவிதை?? நீங்க இப்போ எங்கே இருக்கீங்க?


www.aaraamnilam.blogspot.com

சுந்தரா said...

மொத்த துபாயையும் அலசிட்டீங்க :)

//வெளக்குப்போட்ட துபாயி!
வெளுத்துக்கட்டுது ஜமாயி!!//

கலக்கல் அம்மா :)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அம்மா! வாங்க வாங்க. வணக்கம் அம்மா! உங்க வரவு எங்களுக்கு மிகுந்த சந்தோசம். கூடி வாழத்தெரியாத எங்களிடம் உங்க அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு தய்வுடன் வேண்டும் தங்கள் மகள் (மாதிரி)
அன்புடன்
க.நா.சாந்தி லக்ஷ்மணன்

muthu said...

THANK'S for publishing dubai kavithaikal.
U'R ANNAN magal.VERY NICE to see lot of kavithaikalabout dubai.once again thank's.

அருள்மொழிவர்மன் said...

நல்லா இருக்குங்க. பார்த்தவைகளை எழுத்தாக்கி படைத்ததற்குப் பாராட்டுகள்!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...