Friday, August 22, 2014

அக்கினி ஆத்தாள் அருள்வேண்டல்.

அக்கினி ஆத்தா உன்புகழை
     ஆசையுடன் நாம் பாடவந்தோம்
சிக்கலை எல்லாம் தீர்த்துவைப்பாய்
     சீரடி போற்றி வணங்குகிறோம்!

பக்கமிருந்து பார்த்திருப்போம்
     பாசமுடன் எமைக் காத்திடுவாய்!
தக்கபடி நல் வாழ்வமைத்து
    தாரணி போற்றச்செய்திடுவாய்!

தொக்கென வந்தவர் துயர்தனையே
   தூர விலக்கி துணையிருப்பாய்!
சிக்கெனப் பற்றினம் உன்பாதம்
    சிரசில் வைத்தே வணங்குகிறோம்!

பெற்றவர் எல்லாம் பெருமையுற
    பிள்ளைகள் எல்லாம் செம்மையுற
பெற்றவை எல்லாம் பெரும்பேறாய்
    பெற்றது உந்தன் கருணையிலே!

நற்றவம் செய்தோம் நானிலத்தில்
    நல்ல புள்ளிகள் பெருகிடவே!
கொற்றவை உந்தன் பேரருளால்
    கூடியே நாங்கள் மகிழ்கின்றோம்!

பொற்றா மரைபோல் புன்னகையில்
    பூத்திருக்கும் உன் முகம் கண்டால்
வற்றா நதிபோல் வளம்பெருகும்
    வரங்கள் தந்து வாழ்த்திடுவாய்!

உள்ளிருக் கும்உன் வீடுவந்தால்
   புள்ளி மான்கள் மகிழ்வோடு
துள்ளிவி ளையாடும் சோலையிலே
   புள்ளினம்போல் மனம் இசைபாடும்!

பள்ளயம்  இட்டு  உனைவணங்கி
  கள்ளமில் அன்பால் காத்திருக்கோம்
உள்ளன் போடே ஏற்றெங்கள்
  உள்ளம் மகிழச் செய்திடுவாய்!

பள்ளம் மேடினை வாழ்க்கையிலே
   பக்குவமுறவே கடந்துவர
வெள்ளம் பொழியும் அருளாலே
  வினைகள் போக்கி காத்திடுவய்!



          ஏலம் எடுத்த பயன்

உப்பை எடுத்தவர் வாழ்வினிலே
    உயர்ந்து நலம்பறச் செய்திடுவாய்!

மஞ்சள் ஏலம் எடுத்தவர்க்கு
   மங்கல மனையறம் தந்திடுவாய்!

சர்க்கரை எடுத்தவர் சடுதியிலே
   சகலமும் பெற்றிடச் செய்திடுவாய்!

சேலை எடுத்தவர் வாழ்வினையே
    சோலை ஆக்கித் தந்திடுவாய்!

பன்னீர் ஏலம் எடுத்தவர்க்கு
    தண்ணீர் பஞ்சம் இல்லையம்மா!

பழத்தை எடுத்தவர் பலம் பெறுவார்!
    பகையை மறந்தே உறவாவார்!!
Related Posts Plugin for WordPress, Blogger...