Friday, February 3, 2012

கனியான கந்தவேள்!

கனிக்காகக் கனலாகிக் கடினமலை ஏறியே
                     கனியான கந்தவேளே!
இனிதான உன்பேரை இன்னமுதம் போலவே
                  இசையாகப் பாடிவாரோம்!
மெய்பூசும் நீரோடும் மெய்யான உறவோடும்
                 மெதுவாக ஓடிவாரோம்!
தைப்பூசம் தைப்பூசம் தரையிருந்து மலையேறும்
                  நதிபோல ஓடிவாரோம்!
சுட்டிக்கு ழந்தையுன் சூரிய முகம்கண்டு
            சொக்கியே நிற்கிறோமே
செட்டிக்கு ழந்தைகள் செகம்போற்ற வாழவே
           செல்வனே அருள்புரிவாய்!
கட்டிவரும் காவடியும் களிப்போடு பால்குடமும்
           காலடியில் சேர்க்கவருவார்!
அட்டியின்றி அடியவரை அருள்மழை நனையவைத்து
          ஆனந்தம் கொள்ளவைப்பாய்!
திருப்புகழும் தீந்தமிழும் தெவிட்டாத உன்பேரை
          செவிகேட்டுக் குளிர்ந்திருக்கும்!
விருப்பமுடன் பாடினால் விந்தைபல காட்டிநீ
               ஓடிவா பழனிவேலா!
Related Posts Plugin for WordPress, Blogger...