Friday, December 24, 2010

வெங்காயம்.

விலைவைத்துப் புகழ்தேடி
மலை உயரம் தாண்டிவிட்டாய்!
விலைகேட்ட வியப்பினிலே
சிலைபோலச் சிலபேர்கள்!!
வேண்டுமா வேண்டாமா
விருந்துக்கு வெங்காயம்?
விதண்டா வாதம்பண்ணி
இதாண்டா சாக்கென்று
வெற்றிகரமாக
முட்டைக்கோசே போதுமென்று
வெங்காயம் விலக்கிவிட்டார்!
ஒருவழியாய் இறங்கிவந்தாய்
உன்னயே மறந்துபோச்சு!
இனிஎதற்கு?
வெங்ங்க்காயம்?!........

Monday, December 20, 2010

திருந்தாத மனிதன் இருந்தென்ன லாபம்?

ஓ..பெண்ணே
நீ பிறக்கும்போது
பெற்றோர் இட்டபெயர்
ராஜகுமாரி
இன்றோ..
நீ..
சோகத்தின் சுவீகாரகுமாரி
உன் இதயத்தில் மலரும்
இன்பநினைவுகளில்
ஒன்றாவது இந்தஉலகத்தில்
உண்மையாகி இருந்தால்..
பெயரில்மட்டுமல்ல..
நீ..
உண்மையிலேயே ராஜகுமாரிதான்!
நீ இப்படி இருப்பது
எவருக்குப் பிடிக்கவில்லையோ
அவர்கள் மனம்மகிழத்தான்
இந்த ரோஜாவை முள்ளில் இட்டு
இடமும் வலமுமாக
இடைவிடாமல் தேய்க்கின்றனரோ!
                                                                         !
கசங்கிப் போனாலும்
கண்ணீரில் மிதந்தாலும்
ஒரு விடியல் நிச்சயம் உண்டு!
தைரியமாய் இரு.
உன்னைப்பற்றிக் கவலைப்பட
உனக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டுமென்று
ஒரு இதயம்...
அல்ல அல்ல
சில இதயங்கள் இங்கே..
துடித்துக்கொண்டிருக்கின்றன
ஆனால் அவை
துடிப்பதால்மட்டும் உனக்கு
சுகமான வாழ்வு கிடைக்குமானால்
எப்போதும் உனக்காக
துடிக்கக் காத்திருக்கின்றன.
எந்த ராஜகுமாரனோடு நீ..
வாழ்ந்துகாட்டப்போகிறாய் என்று
உன்னைப் பெற்றவர்கள்
உவந்து மணமுடித்தார்களோ
அந்தக் கொடுங்கோலனே
இரக்கமற்ற கொடுமைகளால்
உனக்குக் காலனாகவருவானோ என்று..
எங்கள் இதயங்கள் பதறுகின்றன
ஒவ்வொருநாள் காலையிலும்
உதயமலர் போலிருக்கும் உன்வதனம்
ஒவ்வொரு மாலையிலும்
உலர்ந்து தவிப்பதை உணருகிறோம்
ஆனாலும் நீ
வாழ்ந்து காட்ட வேண்டும்
உன்வாழ்வை இப்படி ஆக்கிய
உன்மத்தர்கள் உருகித்தவிக்கவும்
அவர்களப்பார்த்து நீ
ஐயோ பாவமென்று
சொல்வதற்காகவாவது
நீ வாழவேண்டும்
உன் கணவன் திருந்த
நீயும்
உன்னோடு நாங்களும்
இறைவன் திருவடியை
இணைந்து வணங்குவோம்.

மதுரைக்கும் திருப்பத்தூருக்கும் நடுவிலுள்ள மேலூருக்குப்
பக்கத்திலுள்ள வெள்ளலூர் என்னும் ஊரில்1982களில்
என் குழந்தைகளின் அப்பா மதுரைவங்கியில் வேலை
பார்த்தபோது எழுதியது.[இப்போது ஐசிஐசிஐ] அப்போதெல்லாம்
பாவம் அந்தஊர்ப் பெண்களுக்கு அவ்வளவாக சுதந்திரமில்லை
கிராமங்களில் எம்பொண்டாட்டிய நா அடிப்பேன்
எவண்டா நாயே கேக்கிறது? என்று சமாதானம்
பேசப்போகிறவர்களையும் இழிவாகப்பேசுவான்கள்
அதையெல்லாம் பார்த்து மனம்வருந்தி எழுதிய
எண்ணங்களின் வெளிப்பாடே இது.அதன்பிறகு பல
ஊர்கள்மாறி இப்போது பதவிஓய்வும்பெற்று
ஊரோடு வந்தாச்சு. பேரனும்படித்துமுடித்து வேலைக்குப்
போகிறான். அந்த ராஜகுமாரி இப்போது எங்கு இருக்கிறாள் என்றுதெரியவில்லை.

Saturday, December 18, 2010

அன்புத் திருமகளே!

பச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து
பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய்!
பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல்,
கல்லூரி சென்றபின் கல்வியுடன் கவிதையும்,
போட்டிகளில் கலந்துகொண்டால் பொதுவாக முதல்பரிசு,
வீட்டுக்கு வந்துவிட்டால் வண்ணங்கள் தீட்டுதல்,
திருமணத்தின்பின் வாழ்வின் இலக்கணமாய் இருக்கின்றாய்.
கோவையிலும் சென்னையிலும் குழந்தைகளே உலகமாய்,
டெல்லியிலே இருக்கையிலோ உல்லனிலே வகைவகையாய்,
சிதம்பரத்தில் இருக்கையிலே சிவனவனே சீவனாய்,
நெய்வேலி இருக்கையிலே கைவேலை கவினழகாய்,
சேலத்தில் இருக்கையிலே சிங்கார வீடழகாய்,
காரையில் உன்வீடு கவினுறவே தோட்டமிட்டு,
காய்கீரை பூச்செடியும் கனிமரங்கள் தான்வளர்த்தாய்,
மீண்டும்நீ சென்னையில் மீண்டுமுன்னைப் புதுப்பித்து,
வாழ்கின்ற வசந்தத்தில் வரவேண்டும் பேரமிண்டி!

Friday, December 17, 2010

வந்தாரை வாழவைப்பான்!

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்--வெற்றி
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்

வந்தாரை வாழவைக்கும் செந்தூரின் வேலனவன்
பந்தாடிக் கவலைகளைப் பறந்தோடச் செய்திடுவான்!
அந்திசந்தி காலமும் ஒன்பதுகாலப் பூசையும்
முந்திவந்து காணவே முடிவில்லாத ஆனந்தம்!---[வேல்முருகா]

படிப்படியாய் வளர்கஎன்று பாசத்தைக் காட்டியே
அடிக்கடி நமைஅழைக்கும் அழகுச் செந்தூரானுக்கு
அடுத்தடுத்து அபிசேகம் அன்பிலே பொழிந்திடும்
தொடுத்தெடுத்த மலர்களெல்லாம் தோள்களில் மலர்ந்திடும்!--[வேல்முருகா]

வருகவருக வருகஎன்று வரவேற்கும் வேலவன்
பெறுகபெறுக இனியதென்று பேரருள் புரிகிறான்!
அரஹரஹர என்பவர்க்கு அச்சமில்லை அவனியில்
கரங்களிலே ஏந்திநின்று கருணைமழை பொழிகிறான்!--[வேல்முருகா]

கண்ணில் மின்னும் கனிவினால் கடலையும் கட்டுவான்
விண்ணைமுட்டும் அலைகூட வீழ்ந்துவணங்கும் செந்திலில்!
சண்முகத்தைக் கண்டுவந்தால் சகலத்திலும் வெற்றியே!
கண்களிலே தேக்கிவைத்துக் காத்திடுவோம் போற்றியே!!--[வேல்முருகா]

சங்கினோசை அலையிலே சண்முகத்தின் கரையிலே
எங்கும்மக்கள் வெள்ளந்தான் எழிலான காட்சியே!
சங்கரனின் மைந்தனுக்கு சஷ்டியிலே திருவிழா
சங்கடங்கள் நீக்கிவிடும் சம்ஹாரக் காட்சியே--[வேல்முருகா]

இறங்கிவந்து வணங்கினால் இரக்கம்காட்டும் வேலவன்
ஏறிவரும் வேளையில் ஏற்றம்மிகத் தருகிறான்
மறங்கிநின்றால் கவலைகளை மறைந்தோடச் செய்திடுவான்!
சிறந்தநல்ல பதவியும் செல்வமும் நல்குவான்!!--[வேல்முருகா]

வரம்வேண்டி வருவோர்க்கு வளர்கஎன்று வாழ்த்தியே
சிரங்குவித்து வணங்கும்வேளை சிரித்தமுகம் காட்டுவான்!
பிரகாரம் ஒன்றுவந்து நிறைவுசெய்யு முன்னரே
விரும்புகின்ற வேண்டுதலை விரைவில் நிறைவேற்றுவான்!--[வேல்முருகா]

கற்பகத்தின் தம்பியவன் கந்தவேளை நம்பினால்!
உற்றதுணை அன்பிலே உலவாக்கிழி யானவன்!!
பொற்பதங்கள் பணிந்துவந்தால் புதியசக்தி காணலாம்!!!
அற்புதங்கள் காட்டிடுவான் ஆறுமுக வேலவன்!!!!--[வெல்முருகா]

விண்ணைமுட்டும்...=சுனாமி வந்தபோதுகூட திருச்செந்தூரில் கடல்
உள்வாங்கியது.அந்த நேரத்தில் நான் அங்கு பதினொருநாட்கள்
 வேண்டுதலின்பொருட்டுத் தங்கிஇருந்துவந்தபடியால்
ஏற்பட்ட எனது அனுபவங்களின் வெளிப்பாடே இப்பாடல்.

மறங்கிநின்றால்=கலங்கிநின்றால்

உலவாக்கிழி = எடுக்கஎடுக்கக் குறையாத பொன்முடிப்பு.


ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லே.
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லே.
என்ற மெட்டில் பாடிப்பாருங்கள்.

Tuesday, December 14, 2010

பாரம் சுமக்கப் பழகும் பசுந்தளிர்கள்

நெடுமால்திருமருகா
நித்தநித்தம் இந்த[அ]ளவா!?
பாடுபட்டுச் சுமக்கின்ற
பசுந்தளிர்கள் பாவமன்றோ?
நாட்டுபுகழ்க் கல்வியினை
நலமுறவே கற்பதற்கு
ஏட்டில் படித்த நாங்கள்
இந்த[அ]ளவு சுமக்கலையே
ஏந்திச் சுமந்துபட்டால்
எளிதாகும் வாழ்க்கையென
நீந்திக் கடப்பதற்கு
நிகழ்காலப் பழகுதலோ?
முதுகில் சுமந்துவந்து
முழுமையுறக் கற்றதனால்
எளிதாக அறிவதற்கு
ஏற்றதொரு நூலகமாய்
புதுயுகப் புத்தகத்தைப்
புதுமையுறக் கண்டனரோ!?
                                                                                                                                                                                                            

Sunday, December 5, 2010

பேரன் பேத்திகள் தொடர்ச்சி

                                  மா.விசாலாட்சி.

ஐயாவின் சமஸ்தானம் வளவுக்குள் பேரடக்கம்.
ஆயாவின் சாம்ராஜ்யம் அடுக்களையில் சிறந்திருக்கும்!


                                  லெ.தேனம்மை.

முக்காட்டார் அகத்திருந்து முன்புவந்த ஆயாவாம்
முத்துக் கருப்பாயி முழுமனதாய் ஐயாவின்                                    
சொத்தாக இதயத்தில் சொகுசாக வாழ்கின்றார்!
பக்திசெயும் எங்களுக்கும் பாசமுடன் அருள்கின்றார்!


                              சபா.அருணாசலம்


பேசாத தெய்வமெங்கள் பெரிய ஆயாவென்றால்
பாசமுடன் உணவூட்டிப் பக்குவமாய் எனைவளர்த்த
வாசமுள்ள மரிக்கொழுந்து மல்லிகைப்பூ தான்சூடும்
பேசுகின்ற பொற்பாவை பிரியமுள்ள அலர்மேலு!


                          சபா.வள்ளியப்பன்


ஆறாவயல் பிறந்து ஆயாவீட்டில் வாழ்வமைந்த
சீராங்கனி ஆயாள் சிறப்பெங்கள் வாழ்வினிலே!


                        சபா.மெய்யப்பன்.


மல்லித்தழை கருவேப்பிலை மணக்கின்ற புதினாவுடன்
முள்ளங்கி வெங்காயம் முதலான காய்கறிகள்
உள்ளம் நிறைந்திடவே ஒவ்வொன்றாய்த் தேர்ந்தெடுத்து
அள்ளித் தின்னலாம்போல் அரிந்துவைப்பார் அழகுறவே!


                      ராம.வள்ளிக்கண்ணு.


இட்டலியோ முல்லைப்பூ!இளந்தோசை அப்பத்தா
வார்க்கின்ற அழகினிலே வட்டநிலா வெட்கிநிற்கும்!!

                        ராம.அலமேலு.


பொட்டழகுப் பூமுகத்தில் புன்சிரிப்புமாறாமல்
இட்டமுடன் பரிமாறி இனிமையுடன் பார்த்திருப்பார்!


                       ராம.சௌந்திரநாயகி
.
பட்டுத்துகில் கசங்காது பளபளக்கும் சூரியனாய்
தொட்டதெல்லாம் துலங்கவரும் தூயமன அப்பத்தா!
அலர்மேலு அன்புஎமக்கு ஆனந்த நீரூற்று!
பழமுதிர்ச் சோலைநிறை பரவசப் பூங்காற்று!


வெ.மீனாட்சி, வெ.வள்ளியம்மை, வெ.பொன்னழகி,
          நாக.மெய்யப்பன், நாக.சபாரெத்தினம்,
                       ராம.சுப்பிரமணி.

                                                      
வடிவழகாய்ப் பொன்சேர்த்து வயிரமணிச் சரம்கோர்த்து
கொடியினிலே தாலிகோர்த்து கோடிஅழகாய்த் திருப்பூட்டி
தாமரைகள் இரண்டுவந்து தரையினிலே பூத்ததுபோல்
ஆழ்கடலின் முத்தெடுத்து அருகருகே அமைத்ததுபோல்
யாழிசையும் ஏழிசையும் யாப்போடு இணந்ததுபோல்
மாயவனும் இலக்குமியும் மணைமேல் அமர்ந்ததுபோல்
ஆயிரம் பிறைகண்ட ஐயாவுடன் அப்பத்தா!
வயிரம் தங்கமெல்லாம் வாழ்வினிலே எமக்கெதற்கு
ஆயிரம் பிறவியிலும் அன்புகொண்ட உள்ளங்களே!
சேயாகப் பிறந்து உங்கள் சீரடிகள் போற்றவேணும்
வண்ண மலர்தூவி வழ்த்துக்கள் வேண்டிநின்றோம்
வாயர வாழ்த்திடுவீர் எம்மை.!

இருபத்தி ஐந்துபேரன் பேத்திகள். இவர்களுடன்
என் ஆச்சி மகளின்பேரனையும் பார்த்துவிட்டார்கள்.
ஐந்து தலைமுறைகள்!


இன்று எங்கள் அப்பச்சி எங்களுடன்இல்லை.
சுமார் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
வீட்டில் [U.P.S]பொருத்தி விளக்கு வந்ததும்
உயிர் பிரிந்தது!
தனது தொண்ணூற்று ஏழாவது வயதில்
உயிர்பிரியும் நேரத்தில்கூட உயர்விளக்கு
ஏற்றிவைத்த உன்னத மனிதர்.

ஆயா=அம்மாவுடய அம்மா
அப்பத்தா=அப்பாவுடைய அம்மா
ஆச்சி=அக்கா





Saturday, December 4, 2010

தொடர்ச்சி--பேரன் பேத்திகள்.

                                 சுப. வள்ளியப்பன்
பாட்டையா சுப்பையா பண்பான ஆட்சியிலே
ஈட்டிவந்த புகழுக்கு இன்றளவும் குறைவின்றி
போட்டியின்றித் தேர்ந்தெடுத்த பொன்னான தலைவரைப்போல்
பாட்டியார் மூவருக்கும் பணிவான ஒருமகனார்.
                              
                                சுப. சுப்பையா

சந்தனத்தில் பொட்டுவைத்து சவ்வாது மணக்கவரும்
சென்ட் -வ-னா என்றழைக்கும் செல்லப்பெயர் நண்பரிடை
வத்துப்ப ஹார்தனிலே வட்டிக்கடை நடத்தியதால்
வத்துப்ப ஹார்-வ-னா எனும்பெயரும் தானுண்டு.

                               சுப. அருணாசலம்

கட்டியுள்ள வேட்டிஎன்றும் கசங்கிடாத முல்லைப்பூ
போட்டிருக்கும் சட்டையுடன் புதிதாக இரண்டுமட்டும்
தேவைக்கு மேல்இருந்தும் தேடிஅணிய மாட்டார்கள்!
தேவை முடிந்தவுடன் தாமேதான் துவைப்பர்கள்!
                            
                           சுப.முத்துக்கருப்பாயி


நகைசெய்ய வைரங்கள் நன்றாகப் பார்ப்பார்கள்
பகையின்றி எவருடனும் பழகிவரும் பண்பாளர்!
நகைமுகம் மாறாத நல்லமன அப்பத்தா
வகைவகையாய் எங்களுக்கு வாங்கித் தருவார்கள்


                               சுப. மெய்யப்பன்

இஞ்சினியர் நிறைந்திட்ட இனியஎங்கள் குடும்பம்
மிஞ்சுகின்ற பல்கலைக் கழகமாய்த் திகழுதற்கு
நெஞ்சகத்தே அன்புவைத்து நிலைவிளக்காய் ஒளிகூட்டி
விஞ்சுகின்ற கண்டிப்பில் விளங்குகின்றார் எம்ஐயா!
                             
                                சுப. தேனப்பன்

நண்பருக்கு நலமாகி நல்லவர்க்குத் துணையாவார்!
கண்பார்த்தால் கைசெய்யும் பழக்கமே நல்லதென்பார்!
கண்பட்டு விடும்போலக் கணக்கெழுதும் எங்களையா!
எண்பதென்று சொல்லுகிறார்! நம்பவே முடியவில்லை!!


                             சுப. விசாலாட்சி
                        
தும்பைப்பூத் துப்பட்டா தோள்களிலே துலங்கிவர!
நம்பிக்கை கண்களிலே நல்வைர மின்னலிட!
தும்பிக்கை யான்தம்பி துணையாக வருவதுபோல்
எம்ஐயா நேர்த்தியுடன் எழுந்துவரும் சுறுசுறுப்பு!


                             ராம.முத்துக்கருப்பாயி.


எப்போதும் மணிப்படியே தப்பாது உணவருந்தி
இப்போதும் இளமையுடன் இருக்கின்றார் எங்களையா!
ஐயாவின் மனம்போல ஆயாவின் நளபாகம்!
ஐயாவின் இளமைக்கு அதுவேதான் ரகசியமாம்!


                            வ.மீனாட்சி


அதிகாலை எழுந்துவந்து அதிவேக நடைப்பயிற்சி
ஆனந்த பவனிலொரு காப்பியுடன் முடிப்பார்கள்!


                          மா.வள்ளியப்பன்


காலைக் கடன்களெல்லாம் கடுகவே முடித்துவிட்டு
நாளையென்று தள்ளாமல் நடைமுறையில் செயலாற்றி
காலைமுதல் மாலைவரை கணப்போதும் சுணங்காமல்
களைப்பின்றி விரைந்தாற்றும் கணிப்பொறியாம் எங்களையா!

                             சு.ரேவதி.


படையே பதைக்கின்ற பலமான வெய்யிலிலும்
நடையே போதுமென்பார் நாலுரூபா மிச்சமென்பார்!
இடையிடையே காப்பி கொஞ்சம் இதமாகக் குடித்திடுவார்
குடையோடு பார்த்திடலாம் குசியான எங்களையா!

                                                                       வளரும்...

Thursday, December 2, 2010

தொடர்ச்சி

.ஒப்பற்ற மெய்யப்பர் உயர்வான கவனிப்பில்
எப்போதும் சுறுசுறுப்பே இயல்பான அப்பச்சி
எட்டாவது படிக்கையிலே எழில்ரங்கூனில் இருந்து
சிட்டாகப் பறந்துவந்த சிறுதந்தி படித்ததனால்
மெய்யப்ப பாட்டைய்யா மிகமகிழ்ச்சி தானடைந்து
மெய்யான படிப்பிதுவே! மேற்படிப்பு போதுமென்று
ஏட்டுப் படிப்பதனை எட்டோடு நிறுத்திவிட்டு
வட்டித் தொழில்தன்னை வளமாகக் கற்பித்தார்.
தலைமுறைகள் தழைக்கவந்த தாய்மூவர்க் கொருமகனார்
அலைகடலுக் கப்பாலே அறம்பெருக வித்திட்டார்!
விலையுண்டோ இளமையிலே தனிமைமிகக் கொண்டதற்கு!?
ரங்கூனில் கொண்டுவிக்க ராப்பகலாய் மொழிகற்று
மலாயாவில் கொண்டுவிக்க மலாய்மொழியும் தான்கற்றார்!
என்றைக்கும் கற்பதற்கு ஏற்றதொரு நூலகமாய்!
இன்றைக்கும்திகழ்கின்றார் எங்களது அப்பச்சி!!
                                                                     
                                                                       வளரும்..
.
அப்பச்சி { பொருள் } -அப்பா.              


கொண்டுவிக்க { இதற்குப்பொருள் சுருக்கமாகச் சொன்னால் செட்டியார்கள்
வெளிநாடுகளுக்குச் சென்று பணம் மற்றும்பொருளீட்டி வருதல் }

























































































































Wednesday, December 1, 2010

எங்கள் அப்பச்சி எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தவர்கள்..

மடைதிறந்த வெள்ளமென மக்களுக்கு அருள்பொழிந்து
கடைக்கண்ணால் கொப்பாத்தாள் கருணையுடன் காத்திருக்க
அடைக்கலமாய் வந்தவர்கள் ஆயிரமாய்ப் புகழ்சேர்க்க
தடக்கலன்கள் விலகிவளர் தண்காரை நகர்தன்னில்
குன்றக்குடி உறைகின்ற குமரனவன் சன்னதிமுன்
நன்றெனவே அந்தணர்கள் நாடிவந்து கற்பதற்கு
வேதங்கள் நன்கறிந்த வித்தகரும் தான்வைத்து
வேதசாலை அமைத்தஎங்கள் வேகுப்பட்டி யார்வீட்டில்
எல்லையில்லாக் குறும்புசெய்யும் எழிற்குழந்தை வேண்டுமென்று
வள்ளியம்மை அப்பத்தாள் வரம்வேண்டிச் சென்றார்கள்.
மெய்யம்மை அப்பத்தாள் மிகவிருப்பம் தான்கொண்டு
செய்கின்ற தவமெல்லாம் செம்மையுடன் மேற்கொண்டார்.
மெய்வருத்தித் தவமிருந்து மேன்மைமிகு மகன்தந்து
ஐயனவன் முருகனடி அடைக்கலமாய்ச் சென்றுவிட்டார்.
கைகளிலே குழந்தைதனைக் கருத்துடனே வளர்ப்பதற்கு
பெய்கின்ற மழையெனவே பேரன்பு செய்குதற்கு
ஐயாவாம் சுப்பையா அருமைவிசா லாட்சிதனை
மெய்யான துணையாக மேன்மையுறப் பெற்றார்கள்!
அப்பத்தாள் வளர்ப்பினிலே அப்பச்சி வள்ளியப்பர்
தப்பாது தான்வளர்ந்தார் தகைசால் மகனாக
                                                            வளரும்....

ஆங்கில ஆண்டு எட்டு மூன்று ஆயிரத்துத்தொள்ளாயிரத்து
தொண்ணூற்று மூன்றாம் ஆண்டுஎங்கள் அப்பச்சியின்
ஆயிரம்பிறைகாண்விழாவிற்கு எழுதியது.

எங்கள் குழந்தைகளின் அப்பத்தாவீட்டு ஐயா

அன்பினிலே கடலானார்! எங்களையா அலைநிகர்க்கும்
நண்பர்களின் துணையானார்! இகவாழ்வில் எமக்கெனவே
பண்பென்ற தங்கத்தில் பணியெனும் வைரம்சேர்த்தார்!
கண்போன்று எங்களைத்தம் இமையாலே காக்கின்றார்!
தன்னைவிடத் தன்பணியே தலைசிறந்து விளங்கிடுவார்!
பொன்னைநிகர் ஐயாவாம் போஸ்டாபீஸ் ஆனா ரூனா
செப்பரிய அன்பாலே செதுக்கிவைத்தார் எமையெல்லாம்!
அப்பத்தா இருவருடன் அகத்திருந்து வாழ்த்துகின்றார்!











Related Posts Plugin for WordPress, Blogger...