Friday, October 29, 2010

சிங்கை முருகன் பாடல்.

சிங்கையிலே கோவில்கொண்ட சிவன்மகனே முருகையா
பொங்கிவரும் காவிரிபோல் மங்காதபுகழ் சேர்த்தாய்!
எங்கையா உன்திருவை என்றுவந்து காண்பதென்று
தங்கமகன் தனைக்காண தவித்திருந்தேன் வெகுநாளாய்!

இங்கேவா என்றழைத்து எழிற்கோலம் காட்டிவிட்டாய்!
அங்கமெல்லாம் புல்லரிக்க அழகாஉனைப் பார்த்துவிட்டேன்!
சங்கெடுத்து ஊதுகையில் சதிராடிவரும் தமிழாய்
அங்கமெல்லாம் புல்லரிக்க அழகாஉனைப் பார்த்துவிட்டேன்!

மாப்போட்டு வெல்லமிட்டு மாவிளக்கும் ஏற்றிவைத்து
பூப்போட்டுப் பணிந்தவர்க்குப் புத்திரரும் மிகத்தருவாய்!
நாப்பாடும் பாட்டெல்லாம் நல்லதமிழ்ச் சொல்லெடுத்து
எப்போதும் பாடிவர எம்குலத்தைக் காத்தருள்வாய்!

பாலமிட்ட அன்பாலே பாடியுனைத் துதிக்கின்றோம்!
ஏலமிட்ட பாயசம்போல் இதயத்தை நனைக்கின்றாய்!
காலமெல்லாம் உனைத்துதித்து களிப்புமிகக் கொண்டோமையா!
நாளெல்லாம் திருநாளாய் நன்றாகத் தந்துவைத்தாய்!

காவடிகள் கொண்டுவந்துன் காலடியில் சேர்த்தவர்க்கு
சேவடிகள் காட்டிநின்றாய் செட்டிமக்கள் புகழ்சேர்த்தார்!
பாவடிகள் பாடிவந்தோம் பாசத்தைக் காட்டுமையா!
பூவடிகள் போற்றிநின்றோம் புண்ணியங்கள் தாருமையா!

இறையருளால் ஆக்கம் திருமதி முத்துசபாரத்தினம்.
                                                                             காரைக்குடி.

நான் இதுவரை சிங்கப்பூரோ மலேசியவோ பார்த்ததே இல்லை.முகப்புத்தகத்தில் பஜனை சாங்ஸ்ல் பார்த்ததும்
எழுதத்தோன்றியது. எல்லாம் இறையருளால்!
                                                                 நல்லது.

Thursday, October 28, 2010

முகம்

அகம்வலிக்கப் பிறந்த
அன்புக் குழந்தைக்கு
முகம் பார்க்கும்
கலையைத்தான்
முதலில் பயிற்றுவிப்போம்!
அன்னை முகம்தவிர
அடுத்தமுகம் கண்டால்
கண்ணை உருட்டிக்
கடைவாயைப் பிதுக்கி அழும்
களங்கமில்லாக் குழந்தைமுகம்
பேசத்துவங்கும் குழந்தையின்
தேன்சிந்தும் சிந்தூரமுகம்!
சேதிகள் சொலும்
செந்தமிழ் முகம்!
சாதிக்கின்ற சாந்தமுகம்!
கம்பீரத்தில் சிங்கமுகம்!
சிரிக்கும்போது சிங்காரமுகம்!
கருணை காட்டும்
கனிந்த முகம்!
கருத்த முகம்
களையான முகம்!
சொந்தம் விரும்பும்
சூரிய முகம்!
எந்திரன் காட்டும்
இந்திர முகம்!!
பற்றுக் கொண்டதால்
பழகிய முகம்!
கற்றுக் கொண்ட
கவிதை முகம்!
புதியவர் எல்லாம்
பொதுவாக்கிப்
புதுயுகப் புத்தகம்
காட்டும் முகம்!
முகப்புத்தகத்தில்
நுழைந்து நுழைந்து
மற்றவையெல்லாம்
மறந்தமுகம்!
சேரன் சுருக்கிச்
சொன்ன முகம்!
சிந்தனையாலே
பிறந்த முகம்!

Wednesday, October 27, 2010

என்னரிய மழலையரே!

வெந்தமனம் வெல்வதற்கு
வேறுவழி தேடுகையில்
நந்தவனம் தொட்டுவந்து
நடனமிடும் பூங்காற்று

இந்தமனம் இளைப்பாற
இரும்புருக்கும் இளங்குரலில்
தந்தனத்தாம் பாடிவரும்
தெள்ளுதமிழ்க் கள்ளூற்று!

மந்திர விழியாலே
மௌனத்தின் மனங்கவர்ந்து
சுந்தர மொழிபேசிச்
சொக்கவைக்கும் தோகைமயில்!

பந்தலிட்டுப் பூப்பூத்துப்
பக்குவமாய்க் கனிவதற்கு
சொந்தமெனப் படர்ந்துவந்து
சுகமாக்கும் தளிர்க்கொடி!

சந்தங்கள் சதிராடிச்
சங்கீதம் இசைத்துவரச்
சந்தனத்தில் நிறமெடுத்துச்
சங்கமிக்கும் பொன்னருவி!

பொன்னருவிப் பெருக்கைப்போல்
பூந்தமிழாய்ச் சிரித்திருக்கும்
என்னரிய மழலையரே!
ஏற்றமுடன் வாழியரே!!

இதுஎழுதி ஆச்சுஒரு இருவத்தியேழு வருசம்!

சின்னஞ் சிறுமலர்
சிக்கெனப் பூத்ததுபோல்
பொக்கை வாய் திறந்து
பக்கெனச் சிரித்திடுவாய்
பக்கத்தில் வந்தாலோ
படக்கெனெக் கைதூக்கி
ஒக்கலில் அமர்ந்து
பதவிசாய்க் குனிந்து
பாதங்கள் தங்கள் அணிகளை
அணிகிறதா என்று....
ஆவலுடன் பார்ப்பாய்!
அணிந்தாலோ....
அழகிய மலர்கள்
தென்றல் காற்றில்
மாறிமாறி ஆடுவதுபோல்
கைமலர் விரித்துக்
கனிந்த முகமலர்காட்டுவாய்!
அது....
இன்னும் என் கண்ணில்
நிற்கிறது..
கண்ணே அல்ர்மேலு
காணவேண்டும் உன்னை!
நிருத்தியம் காட்டும்
நின்கை மலர்கள்
அவை உன் ஒருத்திக்கே சொந்தம்!
அரிசிப் பல்காட்டி
அலர்மேலு சிரிப்பதை
அத்தை காணவேண்டும்!
முத்தங்கள் ஒருகோடி
நிறுத்தாமல் தரவேண்டும்!
தேன்சிந்தும் உந்தன்
சிந்தூரப் புன்னகையும்
மான்கொஞ்சும் விழியழகும்
நான்வந்து காணவேண்டும்!
ஆசைகள் மிகநிறைய....
உடனே முடிகிறதா?
பாவிகள்
தடைகள் எத்தனைதான்
இடையில் விதிக்கின்றார்...
பாஸ்போர்ட்டாம்!
 விசாவாம்!!
பலமணிப் பயணமாம்!!!
என் இதயத்தின்
இறக்கை கட்டிய வேகத்தோடு
போட்டிபோட முடியாதவர்கள்!
போகட்டும்
அவர்களை மன்னிக்கிறேன்!
அவர்கள் விதிப்படி
உன்னைக் காணவேண்டுமெனில்
பல ஆயிரங்கள்
பணம் வேண்டும்.
அதை.....(சே)
நிறைய சேர்த்து
பிறகு.....
தடையின்றி உன்னைக்காண
உன்மலர்ப் பாதம் பட்டதால்
உயர்ந்த அந்த நாட்டுக்கு
நான் வருவேன்
நிச்சயம் ஒருமுறை!

இது எழுதி ஆச்சு ஒரு இருவத்தியேழு வருசம்!











Friday, October 22, 2010

மகன்வீட்டுப் பேத்தி

குட்டிக் குட்டி நந்தவனம்
குடைபிடித்து வந்ததுவோ!
சுட்டிசெய்யும் சுறுறுப்பு
சுந்தரமாய் மலர்ந்ததுவோ!
சொர்க்கம் காட்டும் புன்னகையே
சொந்தமாக்கிக் கொண்டதுவோ!
நர்த்தனம்தான் நளினமோ
நடையழகாய் வந்ததுவோ!
மெட்டிநடை ஓசைகேட்டு
மென்னகையைக் கூட்டியதோ!
பட்டுச்சேலை சத்தம்கேட்டு
பரவசமாய்த் திரும்பிப்பார்த்து
பக்கம் வந்து அம்மாவின்
பக்குவத்தில் வளர்ந்ததுவோ!
முத்துமுத்துப் பாப்பா நீ
முழுநிலவின் குளிர் ஒளியே!
முத்துநகை சூடிய உன்
முகம்காட்டி வந்திடுக!
சத்தமின்றி ஓடிவந்து
முத்தம் ஒன்று தந்திடுக!

பேரன் பேத்திகள் என்றாலே எல்லோருக்கும் ஓவியம்தானே!

என்னங்க நாஞ்சொல்றது?!  
                  
மகள் வீட்டுப் பேரன் சபா ஆறுமாதக்குழந்தையாக இருந்தபோது


சின்னதாய் இங்கே
சிரிக்கும் வசந்தம்
சிந்தையுள் வெல்லப்பாகாய்
சிந்திக் குவித்தது கொஞ்சம்
கன்னக் குழிவினில் கொஞ்சும்
கனிவால் நிறைந்தது நெஞ்சம்
முத்தமிழ்ச் சோலைக்குள்ளே
பூத்த முகமலர் கண்டேன்
செந்தமிழ்ச் சிரிப்பால்
எந்தன் சிந்தையில்
நிறைந்தாய் வாழி!

ஒற்றுமையே உயர்வினைத்தரும்

ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்துகொள்ளுதலே முதலில் முக்கியம்.
பிறகு மற்றவர் நம் எண்ணங்களுக்கு ஒத்துவருவார்களா என்பதை முயற்சி
செய்து பார்க்கவேண்டும். முடியவில்லை என்றால் நம்மால் அவர்களுடன் ஒத்துப்போகமுடியுமா என்று பார்க்க வேண்டும்.அப்போது நம்மால் சிலசெயல்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாதபோது நம்எண்ணங்கள்மூலம்
மனதில் நல்லவற்றையே எண்ணி அவர்கள் நல்லவராக வேண்டும் என்று மனதில் திரும்பத்திரும்ப எண்ணிவந்தால் எல்லோருமே ஒற்றுமையாக
வாழ்ந்து உயர்வடையலாம்.நம் எண்ணங்களில் உறுதியாக இருந்தால் எந்தசெயலிலும் வெற்றியடையலாம்.அறிவியல் ஆய்வாளர்களும்கூட
உறுதிப்படுத்திக் கூறியுள்ளனர்.

இதுதான் மனிதருக்கும் மற்றவைக்கும் மாற்றமுள்ளவேறுபாடு.!
இதுதான் சான்றோர் சாற்றிய சத்தியம்!
உண்ர்ந்தோர் உரைத்த உண்மைகள்!
நாமும் உணர்ந்தால் நமக்கு நன்மைகள்!

நல்லதே நினைப்போம்
நல்லதே சொல்லுவோம்
நல்லதே செய்வோம்
நல்லதே நடக்கும்!

Wednesday, October 20, 2010

ஆயாள் வீட்டின் காயா நினைவுகள்

இவையெல்லாம் நான் 1992ல் எழுதியது
எங்கள் ஆயாள் வயதாகிவிட்டதன் காரணமாக என் தாய்வீட்டில்
இருந்ததாலும் அம்மான்வீடு எங்களையெல்லாம் விடாமல் கூப்பிடுவார்கள்.நாங்களும் சென்றுவருவோம். இந்த இனிய நினைவுகள்
எல்லோருக்கும் இருக்கும். இதைப்பகிர்ந்துகொள்ள எனக்குக் கணினியைக்
கற்றுத்தந்து என் குழந்தைகள் எனக்குவாய்ப்பளித்துவிட்டார்கள். இனிவரும்
காலங்களில் வேறு என்னமாதிரி கல்வி வளர்ச்சியடையப்போகிறதோ தெரியவில்லை. நீங்களும் கற்றுக்கொள்ளத் தயாராகுங்கள்!
                             அன்புடன் சும்மாவின் அம்மா.          

ஆயாள் வீட்டின் காயா நினைவுகள்
புள்ளி மான்போல்
துள்ளி விளையாண்ட
கொல்லை வாசல்
குவித்திடும் நினைவுகள்
முற்றம் முழுதும்
மெத்தை விரித்த
முருங்கைப் பூக்கள்
பருப்புப் போட்ட
பக்குவத் துவட்டல்
ஆயாள் கையால்
இருப்புச் சட்டியில்
இன்னிசை பாடும்!
இன்றும் நினைத்தால்
எச்சில் ஊறும்!!
கொட்டில் மாடும்
கத்தும் கன்றும்
எட்டாத் தொலைவில்
இருக்குது இன்று!
அவரைப் பந்தல்
அதற்கொரு சங்கு
அதிகாலை எழுந்து
ஆயாள் ஊதும்
அழகே நன்று!
மோரில் குளித்து
தடுக்கில் தவழ்ந்து
வெயிலில் காயும்
மிளகாய்கள்!
வத்தல் போட்ட
மூக்கு மாங்காய்
வாரித் தின்றபின்
வலிக்கும் வயிறு
வளவில் ஆடிட
வாகான ஊஞ்சல்
அளவில்லாத
ஆனந்தம் கூடும்!
வங்காள அண்டாவில்
வந்துவிழும் மழைத்தண்ணி
தூப்பாயை அடைத்துவைத்து
துணிதுவைக்க நீர்கட்டி
மழைபேஞ்சா வளவோடு
வாருங்கோல் விளையாடும்!
பளபளக்கும் பட்டாலைப்
பட்டியக் கல் அழகும்!
பர்மாப்பாய் விரித்த அழகும்
பார்த்தாலே மனம்நிறையும்!
சிறுகுறும்பு செய்கின்ற
சின்னக் குழந்தைகூட
பொட்டிமேசை முன்னாலே
வட்டிக் கணக்கெழுதி
அட்டணக்கால் போட்டு
அசையாமல் நிமிர்ந்திருக்கும்
வீரப்ப அம்மானின்
விழிகண்டால் வாய்பொத்தும்!
அடுக்கடுக்காய் அதிரேசம்
மனகோலம் மாவுருண்டை
எடுக்க எடுக்கக் குறையாத
எண்ணில்லாத பலகாரங்கள்
எறும்புக்கு வேலியிட்டு
விளக்கெண்ணெய்த் துணிசுற்றிய
வெண்கலப் பானையில்!
ஓட்டில் வறுத்துத்
திருகையில் திரித்த
வேங்கரிசி மாவு!
அரிசிமாவில் அதிசயம் காட்டும்
மொறுமொறுப்பான 
ஜிலேபி முறுக்குகள்
பாசியில் பின்னிய
ஓவியம் காட்டும்
ஓலைக் கொட்டான்
சித்திரை வெயிலின்
சிந்தும் வியர்வையில்
சத்தகம் கையில்
சதிராடி நின்று
பொத்திய பொட்டிகள்!
குத்திய புளிகள்!!
வண்ணம் பின்னிய
பாய்கள் தடுக்குகள்!
வளவளப்பான
வாருங்கோல்கள்!!
ஆயாள் கைவண்ணம்
அழகாய் மின்னும்!
சின்ன அம்மான்
சிரித்த முகம்போல்
விரித்த இலையில்
விளையும் அன்னம்!
பெரிய அம்மான்
பெண்டிர் கையால்
பிசைந்து ஊட்டும்
அரிய நினைவுகள்
அமுதக் காட்சிகள்!
சர்க்கரைக் கரைசலில்
சத்து மாவுடன்
தட்டானின் தங்கம்போல்
கொட்டானில் தேங்குழலுடன்
மூணரை மணிக்கு
தினமும் காப்பி!
நாலரை மணிக்கு
நற்சிவன் கோவில்!
ஏழரை மணிக்கு
இரவு உணவுபின் இனியநித்திரை!
காலைமுதலாய் இரவுவரையில்
வேலைகள் எல்லாம் விதிப்படி நடக்கும்!
ஆயாள்வீட்டின் அழகியநினைவுகள்!
காயாநினைவுகள் கட்டும் நினைவுகள்!

சித்திரைச் செவ்வாய்த் திருவிழா

தென்னம் பாளையின்
தேன்மதுக் குடங்கள்!
சித்திரச் சட்டியில்
சிரிக்கும் முளைப்பாரி!
பால்குடம் காவடி
அக்கினிச் சட்டி!
பார்த்த முகங்கள்
பழகிய நண்பர்கள்!
கூத்தாடி மகிழும்
ஆத்தாளின் அம்பலத்தில்
சேர்ந்து கூடி மகிழ்கின்ற
சித்திரையின் திருநாளில்
கூத்தில் நடக்கின்ற
வள்ளி திருமணத்தின்
வாய்ஜாலக் கலகலப்பும்
அள்ளிவைத்து மடியினிலே
அழகுமழலையர்க்கு
அழகான பெயர்சூட்டி
ஆயுசு நூறு என்று
சந்திரமதி தாலாட்டும்
அரிச்சந்திரா நாடகமும்
சிந்தும் நினைவுகளில்
சிக்கவைத்துப் பார்க்கிறது!
தொட்டில் கட்டிய
கரும்புத் துண்டினை
வெட்டித் தின்ன
விளையும் ஆசைகள்!
பத்துப் பைசா
பஞ்சு மிட்டாய்கள்!
நுகத்தடி இல்லா
நுங்கு வண்டிகள்!
அகத்தில் ஆடும்
ஆயிரம் நினைவுகள்!
நொடிக்கொரு தடவை
வெடிக்கும் கனவுகள்!!
துடிக்கும் நெஞ்சில்
துள்ளும் நினைவுகள்!

   ஆராவயல் வீரமாகாளி அம்மன்


சித்திரைச் செவ்வாயில் திருவிழா நடக்குமே
     சிங்காரக் கொலுவிருப்பாய்!
எத்திக்கி லிருந்தாலும் எழிற்கோலம் காணவே
     எல்லோரும் ஓடிவருவார்!
வேண்டிவரம் கேட்டவர்க்கு விளையடப் பிள்ளையும்
     விரும்பியதும் தந்தருள்வாய்!
ஆண்டியென உள்ளவரும் அடிபணிந்து ஏத்தவே
     அழியாத பொருள்தருவாய்!
மழலையர்க்குத் தொட்டில்கட்டி மகிழ்வோடு பொங்கலிட்டு
       மாவிளக்கும் ஏற்றிவைப்பார்
மாவாலே களிக்கிண்டி மக்களுக்குப் பகிர்ந்தளிக்க
     நோகாமல் நோய்கள் தீர்ப்பாய்!
பால்குடங்கள் காவடிகள் முளைப்பாரி தீச்சட்டி
      பாதத்தில் சேர்க்கவருவார்
வேல்கொண்டு துன்பங்கள் விரைந்தோட வைப்பாயே
      வீரமாகாளி உமையே!

இறையருளால் ஆக்கம் திருமதிமுத்துசபாரத்தினம்

   திருவிழாவுக்கு ஒவ்வொரு ஆண்டும் மறக்காமல் அழைத்து
   விருந்திடுவார்கள் எங்களது ஆயாள் வீட்டில்

                              
உருக்கிய நெய்யால் மெருகூட்டி
பருப்பு மசியல் பால்கூட்டு                                  
முருங்கைக் காய்கள்
மூழ்கிய சாம்பார்!
எண்ணையில் குளித்து
மிளகில் புரண்டு
மினுக்கும் முட்டைகள்!
தொண்டை ருசியைத்
தூண்டும் விதத்தில்
வெண்டைக் காயில்
ஒரு மண்டி!
தேன்போல் இனிப்பும்
திகட்டாப் புளிப்பும்
மாங்காய்ப் பச்சடி
மணக்குது ஜோராய்!
வாழைக் காயில்
வண்ணப் பொரியல்!
ருசிக்கும் ரசமும்
ரசிக்கும் அப்பளமும்
பசிக்கு ருசிக்கும்
பக்க மேளமாய்!
வெல்லப் பாகில்
விந்தை புரிந்து
முந்திரி கிஸ்மிஸ்
முகிழ்த்திடும் அழகில்
தேங்காய்ப் பாலுடன்
திமிறும் பாயசம்!
அன்பின் மிக்கார்
அழைத்தார் வந்தோம்
அம்மான்கள் வீட்டில்
அறுசுவை உணவு!
காளி அம்மனைக்
கண்சிறை பூட்டி
பால்குடம் காவடி
அக்கினிச் சட்டி
பார்த்து மகிழ்ந்தோம்
உண்டு நிறைந்தோம்!
தொடர்ந்து வருவோம்
தொல்லையில் அன்பு!
தொடரட்டும் இங்கு!
வாரோம் நன்று!!
வாழிய நீவிர்!!!


Sunday, October 17, 2010

சரஸ்வதி பாடலும் சரஸ்வதியின் வேறுபெயர்களும்




16-10-2010 தினமலர் நாளிதழில் வெளிவந்தது 

மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியேஅன்னமே மனக்கூர் இருளுக்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின்னே இனி வேறு தவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனது பொற்பாதங்களே!
-    கம்பர்
                                                                                                                    
சரஸ்வதி கல்விப்பயிர் வளர்ப்பவள்
குமரகுருபரர் சரஸ்வதிமீது பாடியது சகலகலாவல்லி மாலை.
ஆதிசங்கரர் சிருங்கேரியில் உருவாக்கிய சரஸ்வதி சாரதாம்பாள்.
மணிமேகலை காப்பியம் சரஸ்வதியை சிந்தாதேவி என்று குறிப்பிடுகிறது.
ஞானபீடம் பரிசில் இடம்பெறும் சின்னம் வாக்தேவி.
சரஸ்வதிக்குரிய திதி நவமி திதி.
சரஸ்வதிக்குரிய மலர் வெண்தாமரை
சரஸ்வதிக்குரிய வாகனங்கள் அன்னம் மயில்

வேறு பெயர்கள்
கலை மகள்
நாமகள்
பாரதி
வாணி
இசைமடந்தை
ஞானவடிவு
பனுவலாட்டி
ப்ராஹ்மி
பூரவாகினி
அயன் மனைவி
வெண்தாமரையாள்
சாவித்ரி
வேதவல்லி
கலையரசி
நாவுக்கரசி
ஞானப்பூங்கொடி
வித்யா சரஸ்வதி
கலை ஓதும் மலர்மாது
கலைக்கொடி
கலை ஞானத்தோகை
கலை ஞானவல்லி
கலை ஞானாம்பிகை
கலை மடந்தை
கலைமான்
கலைப் பெருமாட்டி
கலை மின்னாள்
கலையணங்கு

கலையம்மா
கலாராணி
கலாசுந்தரி
கலைவாணி
கலைச்செல்வி
கமலவல்லி
வெண்கமல நாயகி
வெண்டாமரைச் செல்வி
வெண்கமல பனுவலாட்சி
வீணை வித்யாம்பிகை
ஆயகலைப் பாவை
கலைமகளைவழிபடுவோர் நவமி நாளிலோ அல்லது
மூலநட்சத்திரத்தன்றோ வழிபாடு செய்வது சிறப்பு
புரட்டாசி நவமி சரஸ்வதிக்குரிய மகாநவமி
                                                                    
இந்தப் புரட்டாசி நவமி அனைவருக்கும் சிறப்பாக இருக்கும்
என்ன சரஸ்வதி பற்றிய செய்திகளைப் படித்தாச்சா
இனிநாள் தோறும் சரஸ்வதியை வணங்கி உங்கள் வேலைகளைத்
துவங்குங்கள்.
                                                                                     நன்றி வணக்கம்.


இதுவரை எனக்குச் சரஸ்வதியைப்பற்றித் தெரியாதுஇருந்த சிலசெய்திகளைத் தினமலரில் பார்த்தவுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது .





புதுயுகப்புத்தகம்

பாக்கதுக்கும் படிக்கதுக்கும்
பகட்டாகத் தானிருக்கு
பதில் எழுதப் போனாக்க
பசுந்தமிழே தெரியலே
இருவருமாச் சேந்துவந்து
இதப்போட்டு அதப்போட்டு
வேர்த்து விருவிருத்து
விசயொண்ணக் கண்டுபிடிச்சு
இதமா அமுக்கிப்பிட்டு
எதவாப் பாத்தாக்க.....
நுழைக நுழைக இன்னு
நூறுதரம் வருது அதுல!
எதுல ‘நுழையிரது?
எப்பிடித்தமிழ் எழுதுறது?!
கண்ணக்கட்டிக் காட்டுக்குள்ள
விட்டகதை இதுதானோ!?
{அப்பா சொல்வது காதில் கேட்கிறது}
நுழைக நுழைகவில நுழைஞ்சு கற்றுவர

அ னாவைக் கற்பிக்க அன்னைபட்ட பாட்டைவிட
க னாவைக்{கணினியை}கற்பிக்க{அன்னைக்கு}
கண்மணிகள் வெகுபாடு.

இது நான் புதுயுகப்புத்தகம் கற்றுக்கொண்ட கதை!

துபாய் கவிதை பிறந்த சூழ்நிலை

அந்தக்காலத்தில் அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் செட்டிநாட்டில்
வெளிநாடுகளுக்கு செட்டியர்கள் தொழில்செய்யப்போனால் குடும்பத்தை அழைத்துப்போவதில்லை எங்கள்இருவரின் அப்பச்சியும் பர்மா மலேசியா முதலிய நாடுகளுக்குச்சென்றபோது எங்களை அழைத்துச்செல்லவில்லை. அதன்பிறகு சென்ற ஆண்டுதான் எங்களது சின்னமகனும் மருமகளும் எங்களை துபாய்க்கு அழைத்துச்சென்று நல்லமுறையில் கவனித்து சுற்றிக்காண்பித்து அனுப்பிவைத்தார்கள்.இதற்குமுன் நான் விமானப்பயணம்செய்ததில்லை.
எனது முதல் விமானப்பயணம் அது.அப்போது தொன்றிய எண்ணங்களின் வடிவமே துபாய் கவிதை.இதை எப்படிச்சேமிப்பது என்றுதெரியமல் இதில் எழுதியுள்ளேன்.உங்களுக்குத்தோன்றிய கருத்துக்களை எழுதலாம். நன்றி.

Saturday, October 16, 2010

எங்கள் குலதெய்வம் ஆதினமிளகி அய்யனார்

ஆதீனமிளகி அய்யன் அடிபணிந்து ஏத்திவந்தால்
கோதிலாக் குலம்தழைக்கக் கொடுத்தருள் புரிவான்காணீர்

வில்வமர வனந்தனிலே வீற்றிருக்கும் அய்யனாரை
தெள்ளுதமி ழால்பாடித் தினந்தோறும் வணங்கிவந்தால்
வள்ளுவனும் வாசுகிபோல் வளமோடு வாழ்ந்திடலாம்
உள்ளமெல்லாம் மகிழ்வடைய உயர்பதவி பெற்றிடலாம்!  [ஆதீனமிளகி]

துள்ளிவிளை யாடிவரும் துடிப்பான மழலை தந்து
புள்ளியெல்லாம் பெருகிவரப் புகழ்மிகவே தந்திடுவார்
அள்ள அள்ளக் குறையாத அன்னமென்றும் விளைந்திருக்கும்
இல்லமெல்லாம் நிறைந்திருக்கும் இனியபொருள் நிலைத்திருக்கும்![ஆதீன]

நாடிவரும் நகரத்தார் நன்மையெல்லாம் பெற்றுயர 
தேடிவரும்செல்வமெல்லாம் செழித்தோங்கச் செய்திடுவார்!
கூடிவந்து மக்களெல்லாம் கொண்டாடி வணங்கிவந்தால்
கோடிபெறும் நன்மையெல்லாம் கொண்டுவந்து சேர்த்தருள்வார்!-[ஆதீனமிளகி]

Friday, October 15, 2010

துபாய் கவிதை



சிவமயம்
முருகன் துணை
வணக்கம்
என் இனியதமிழ்க் கவிதைக் குழந்தைகளெல்லாம் இறையருளால் உருவானவை.



துபாய் கவிதை பிறந்த சூழ்நிலை

அந்தக்காலத்தில் அதாவது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் செட்டிநாட்டில்
வெளிநாடுகளுக்கு செட்டியர்கள் தொழில்செய்யப்போனால் குடும்பத்தை அழைத்துப்போவதில்லை எங்கள்இருவரின் அப்பச்சியும் பர்மா மலேசியா முதலிய நாடுகளுக்குச்சென்றபோது எங்களை அழைத்துச்செல்லவில்லை. அதன்பிறகு சென்ற ஆண்டுதான் எங்களது சின்னமகனும் மருமகளும் எங்களை துபாய்க்கு அழைத்துச்சென்று நல்லமுறையில் கவனித்து சுற்றிக்காண்பித்து அனுப்பிவைத்தார்கள்.இதற்குமுன் நான் விமானப்பயணம்செய்ததில்லை.
எனது முதல் விமானப்பயணம் அது.அப்போது தொன்றிய எண்ணங்களின் வடிவமே துபாய் கவிதை.இதை எப்படிச்சேமிப்பது என்றுதெரியமல் இதில் எழுதியுள்ளேன்.உங்களுக்குத்தோன்றிய கருத்துக்களை எழுதலாம். நன்றி.

இறக்கை கட்டிய முதல் பயணம்
                                              
ஊருக்குள்ள நுழைகையில
ஒளிவெள்ளம் பாயிது!
பேரீச்சம் பழமரங்க
பெருமையா வரவேக்குது!
தரையெல்லாம் வழுக்குது!
தரதரன்னு இழுக்குது!
திரைபோட்ட தில்லானா
திரும்பிப்பாக்க வைக்கிது!
பாக்கப்பாக்க மனசெல்லாம்
பறவபோல பறக்குது!
ஷேக்குமக்க குடும்பமெல்லாம்
ஜிலுஜிலுன்னு ஜொலிக்குது!!
காரெல்லாங் கழுவித்தர
கண்கவரும் மிசினு!
தரையெல்லாம் பெருக்கித்தர
தனியாக ஒருமிசினு!
பாதைஎதிரில் மாறிக்கிட
பச்சைவெளக்கு இருக்குது!
பொத்தானை அமுக்கினாக்க
வண்டியெல்லாம் நின்னுக்கிது!
மாறிவந்து பட்டன்தொட்டா 
மறுபடியும் போயிக்கிது!!
ரயிலான ரயிலுஒண்ணு
ரசிக்கவைக்கும் புயலு!
ஒயிலான மயிலப்போல
ஒய்யாரக் காட்சியது!
மானாக ஓடிவந்து
மக்களெல்லாம் ஏறிஎறங்க
தானியங்கிக் கதவுகூட
தனியாக இருக்குது!
எத்திவிட்டாத் தண்ணிவருது
ஏறக்கிவிட்டா நின்னுபோது
பாத்துரூமு பயிப்புகூட
பணக்காரத் தோரண!!
பாடப்புத்தகம் வைக்கதுக்கும்
பலசரக்கு வாங்கதுக்கும்
ஓடுஞ்சக்கரம் வெச்சபைய
உருட்டிக்கிட்டுப் போறாங்க!
தடவித்தடவிப் பாக்க ஒரு
தட்டையான லாப்புடாப்பு
நடஎல்லாங் கொறஞ்சுபோச்சு
நடக்கதுக்கு சக்கரச்செருப்பு
ஏறியிறங்க நடக்கவெல்லாம்
எக்சலேட்டரு இருக்குது!
அரமனைய தோக்கடிக்கும்
அங்காடி அங்கங்க!
வரவிருந்தாச் செலவழிக்க
வாகான ஊரிதுங்க!
எப்படித்தேன் இருந்தாலும்
எங்க ஊரு ஆகுமா ?
ஏரோப்ளேனு ஏறிப்புட்டா
எல்லாம் மாறிப்போகுமா!

ரொம்பரொம்ப சம்பாரிக்க
ரொம்பநல்ல ஊருங்க 
சம்பாரிச்சு வெச்சிக்கிட்டு
நன்றிசொல்லி வரணுங்க!


பாம் ஜுமைரா
ங்கிருந்தோ கல்லுமண்ணு
ஏராளமாக்கொண்டுவந்து
அங்கங்க போட்டுவச்சு
அலகடலத் தூத்துப்பிட்டு
பங்களாவும் அடுக்குமாடியும்
‘பாம்’ மரம்போல் கட்டிஇருக்கு!
தங்கம்போல வெலயதுக்கு
தாராளமா எடமிருக்கு!!
காரெல்லாம் போகவர
கடலுக்குள்ள ரோடு
மேடுபள்ளந் தெரியாமெ
மெலுக்காகப் போகலாங்க!
உள்ளுக்குள்ள போனாக்க
ஊருப்பட்ட மீனிருக்கு!
ஒலகத்துல உள்ளதெல்லம்
ஒசரமான வெலைக்கிருக்கு
வெள்ளக்காரக் கூட்டந்தாங்க
வெகுபேரா இருக்குதுங்க
அள்ளிக்கிட்டுப் போறாங்க
அவசரமே இல்லாமெ
நீச்சக்கொளம் அருவியோட
நீளமாக இருக்குதுங்க
மூச்சுவாங்கப் பாக்கலாங்க!
முழுகி முழுகிக் குளிக்கலாங்க!!
சூரியனு கடலத்தொடதும்
சுக்கான் போட்ட பாய்மரமும்
பறந்துவார பறவக்கூட்டம்
பாக்கதெல்லாஞ் சந்தோசங்[க]
கொறையாமப் பாக்கலாங்க
குந்திக்கிட்டு கடலோரம்!

வெளக்குப்போட்ட துபாயி!
வெளுத்துக்கட்டுது ஜமாயி!!

                      
சலிச்செடுத்த மண்ணுலகூட சலிக்காத ஓவியமா!!?

கண்ணாடிக் குடுவையில
கலநெறஞ்ச ஓவியமா!
மண்ணெல்லாஞ் சலிச்செடுத்து
மயக்கவைக்கும் ஓவியமா!!
ஒண்ணொண்ணா ஒட்டகத்த
வரஞ்சிருக்கான் ஓவியமா!!!
கண்ணுக்குள்ள நிக்கிதுப்பா
கலயெல்லாங் காவியமா!!!!

மாலுக்குள்ள போனாக்க மனசெல்லாம் பறக்குதுப்பா!

துபாய் மாலு நீரூத்து 
துள்ளியாடும் நடனம்பாக்க
ஜமாய்க்கிது கூட்டம்ரொம்ப
ஜாலி ஜாலி ஜாலிதான்!

சல்லிசான வெலகுடுத்து
சகலபொருளும் வாங்கிடலாம்
அள்ளிக்கிட்டு வாரதுக்கு
அருமையான கிப்டுமார்க்கட்!

எமிரேட்டு மாலுக்குள்ள
எதவாப்போயி வரணுங்க!
எங்கிட்டுப்போனம் எங்கிட்டு வந்தம்
எந்தவழியும் புரியல!

எல்லாநாட்டுக் கலாச்சாரம்
இபுன்பட்டுட்டா மாலுக்குள்ள
வெள்ளமாக இருக்குது
விதவிதமா நாமபாக்க

பாலுமோரு பழங்காயும்
பலநாட்டுப் பொருளும் இருக்கு
லூலுமார்க்கட் பாக்கரொம்ப
லுக்காக இருக்குமுங்க

காருன்னாக் காரு!
கலக்கடிக்கிது பாரு!!
ஊருக்குள்ள போறவேகம்
கிலோமீட்டர் நூறு!!!

காருநிறுத்த எடங்கெடைக்க
காத்துருக்க நேரத்துல
காலார நடந்தாக்கூட
காலத்தோட போகலாங்க

Related Posts Plugin for WordPress, Blogger...