Saturday, October 18, 2014

சரசுவதி பாடல்

அன்னவா கனத்தமர் அன்னையே சரஸ்வதி
             அருட்கல்வி  அரசிநீயே!
சொன்னவாக் கினில்வந்து சுயமாகக் கவிபாட
             சொந்தமாய்க் கேட்டுவாவா!
உன்னரும் கருணையால் உயர்கல்வி பெற்றிட
             உரமூட்ட வேண்டிநின்றோம்!
இன்னரும் தமிழிலே இயலிசை இசைபட
             இதமாக எடுத்தாளத்தா!
வெண்கலை உடுத்தியே வீணைகைக் கொண்டுநீ
             விரலுவந்து மீட்டிடுவாய்!
வெண்மலர்த் தாமரை விழைந்துமே அமர்ந்துநீ
            வியன்காட்சி தந்தருள்வாய்!
இலக்கணம் இலக்கியம் நேரிசை நிரையசை
            இவையெலாம் புரியவேண்டும்!
தலைக்கனம் இல்லாமல் தக்கோரை நாடியே
            தமிழிலே மூழ்கவேண்டும்!
கற்றோர்கள் காமுறும் கவின்வேதம் நான்கையும்
            கையிலே வைத்திருப்பாய்!
வற்றாத கல்வியை முற்றாகத் தருவாயே
            சரஸ்வதி அம்மையுமையே!
காத்திருந்த காலங்கள் கனியாக மாறியே
            கைவந்து நிறையவேண்டும்!
கூத்தனூர் உறைகின்ற ப்ரம்மனின் துணையான
              ப்ராஹ்மியே அம்மை தாயே!           
Related Posts Plugin for WordPress, Blogger...