Tuesday, January 25, 2011

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ என்கண்ணே
ஆரிரரோ ஆராரோ
மானோடும் வீதியெல்லம்
தம்பி தானோடி வந்தானோ
ஓடுமா மேகம் கண்ணே
ஒளிவிடுமா ராணிமேகம்
கண்ணோ என்கவரிமான்
பெற்ற பெண்ணோ
கண்ணான மீனாளாம்
எம் மதுரை மண்ணாளாம்
மதுரை மண்ணாள வாராகன்னு
என்கண்ணே
பொன்னால தாமரையும்
பூக்கும்அந்தப் பொய்கையில
பொய்கையாம் வைகை என்கண்ணே
வைகையாத்துத் தண்ணிவர
பாலாத்துத் தண்ணிவர என்கண்ணே
பாக்கவந்த பாலகனே
பாலகனை ஆரடிச்சா
ஆரடிச்சா ஏனழுதா யென்கண்ணே
அடிச்சாரச் சொல்லியழு
தாத்தா அடிச்சாரோ என்கண்ணே
தமரைப்பூச் செண்டாலே!
பாட்டி அடிச்சாரோ என்கண்ணே
பஞ்சுப் பூச்செண்டாலே!
மாமன் அடிச்சாரோ என்கண்ணே
மகிழம்பூச் செண்டாலே!
அத்தை அடிச்சாரோ என்கண்ணே
அல்லிப்பூச் செண்டாலே
அடிச்சாரச் சொல்லியழு என்கண்ணே
ஆவதென்ன பாத்துருவோம்!
தொட்டாரச் சொல்லியழு என்கண்ணே
தோள்விலங்கு போட்டுருவோம்
ஆரும் அடிக்கலையே என்கண்ணே
ஐவிரலும் தீண்டலையே!
தம்பி தானாயழுகிறானே
தாயாரைத் தேடுகிறான்!

பரட்டைப் புளியமரம் என்கண்ணே
பந்தடிக்க ஒருநந்தவனம்
நந்தவனம் கண்திறந்து என்கண்ணே
நாலுவகைப் பூஎடுத்து
பூஎடுத்துப் பூசைசெய்யும்
புண்ணியனார் பெயரனோ என்கண்ணே
மலரெடுத்துப் பூசைசெய்யும்
மகராசர் பெயரனோ
கண்ணே என்கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ என்கண்ணே
ஆரிரரோ ஆராரோ




















Thursday, January 20, 2011

ஒயிலாட்டம் மயிலாட்டம்

பழம்வேண்டி புவிசுற்றி
பழம்நீயாய் ஆனவனே
வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம்
ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம்

கற்பனையில் பாருங்களே
கண்டுமனம் மகிழுங்களே
வேல்போட்டு ஆடுகிறான்-----ஒயிலாட்டம்
பால்வடியும் பூமுகத்தான்-----மயிலாட்டம்

வேலுக்கொரு வேகமுண்டு
வேதனைகள் தீர்த்துவைக்கும்
வித்தகனாம் முருகனுக்கு------ஒயிலாட்டம்
பித்தந்தனைத் தீர்த்துவைக்கும்--மயிலாட்டம்

நாவல்பழம் தனைக்கொடுத்து
நாவன்மை சோதித்த
சேவற்கொடி அழகனுக்கு------ஒயிலாட்டம்
சேர்ந்துபாடி ஆடுங்களே ------மயிலாட்டம்

காவடிக்குத் துணைவருவான்
பூவடிகள் போற்றிநிதம்
பாவடிகள் புனைந்து ஆடும் ---ஒயிலாட்டம்
சேவடிகள் ஆடிவரும் --------- மயிலாட்டம்

உயிரெல்லாம் அவனாக
உள்ளமெல்லாம் தேனாக
மயிலோடு ஆடிவரும் ------- ஒயிலாட்டம்
ஒயிலாக ஆடிவரும் --------- மயிலாட்டம்

பாசமுடன் தேடிவந்தால்
நேசமுடன் வாழவைக்கும்
ராசஅலங் காரனுக்கு --------ஒயிலாட்டம்
தேசமல்லாம் ஆடிவரும்---மயிலாட்டம்

சங்கம் முழங்குதம்மா
அங்கம் சிலிர்க்குதம்மா
தங்கரத முருகனுக்கு ---- --- ஒயிலாட்டம்
தரணியெங்கும் ஆடிவரும்--மயிலாட்டம்

முத்தமிழின் சொல்லெடுத்து
முருகனவன் பேரிசைத்து
பக்தரெல்லாம் ஆடுகிறார் ------ ஒயிலாட்டம்
சித்தரையும் மயங்கவைக்கும்--மயிலாட்டம்

வள்ளிமயில் தேவயானை
உள்ளமகிழ் மன்னவனாம்
செல்வமுத்துக் குமரனுக்கு------ஒயிலாட்டம்
செல்வங்களை அள்ளித்தரும்---மயிலாட்டம்

அப்பனுக்குப் பாடஞ்சொன்ன
ஒப்பில்லாப் பிள்ளையவன்
சுப்ரமணியக் கடவுளுக்கு ------ ஒயிலாட்டம்
சுவாமிமலை சண்முகனின்-----மயிலாட்டம்

செட்டிமக்கள் சேர்ந்துஒன்றாய்
சித்திரையின் பௌர்ணமியில்
எட்டுக்குடி ஆடிவரும் --------- ஒயிலாட்டம்
கட்டழகுக் குமரனுக்கு---------மயிலாட்ட்ம்

பக்தியெல்லாம் மிகுந்துவரப்
பெற்றுவரும் நன்மையினால்
பாடிப்பாடி ஆடுகிறார் --------- ஒயிலாட்டம்
பார்க்கப் பார்க்கப் பரவசமாம்-மயிலாட்டம்





Friday, January 14, 2011

பொங்கலோ பொங்கல்!

மங்கலமாய்க் கோலமிட்டுச்
சங்கொலித்துத் தமிழெடுத்துப்
பொங்கலோ பொங்கலென்று
பூவையர்கள் பொங்கிடுவார்!
மஞ்சுவிரட்டுக் களத்தினிலே
மதர்த்துநிற்கும் காளகளை
சிங்கமெனச் சிலிர்த்தெழுந்து
கொம்புபிடித்து திமிலடக்கி
கட்டிப் பிடித்துவந்து
கழுத்தினிலே கட்டியுள்ள
பட்டுத்துணிபிரித்துக்
களியாட்டம் போடுகின்ற
காளையர்க்குக் கொண்டாட்டம்!
பொங்கலுக்கு மூணுநாள்
பூராவும் விடுப்பு என
பொங்கும் மகிழ்ச்சியிலே
பூத்திருக்கும் சிறார் கூட்டம்!
காணும் பொங்கலன்று
கன்னியரும் காளையரும்
வானம் தொட்டுவிடும்
வைபோக மகிழ்ச்சியிலே!
ஆற்றங் கரையினிலே
அடுத்தூரும் ஊற்றினைப்போல்
உற்றாரும் உறவுகளும்
உயர்ந்திருக்கப் பார்த்திடலாம்!
காணும் பொங்கலிது
கண்துஞ்சாப் பொங்கலிது!
கடல்கடந்து சென்றாலும்
கதிரவனின் ஆற்றல்பெற்று
களைப்பின்றிச் செயலாற்ற
மறத்தமிழன் கொண்டாடும்
மகர சங்கராந்தியிது!
மண்ணின் பெருமையிது!

Sunday, January 9, 2011

சந்தனக் காட்டில் முருகன்!

செந்தமிழ் நாடெனும் போதினிலே மெட்டு


சந்தனக் காட்டிலே குளித்தெழுந்து---இங்கு
தந்தனா பாடிவரும் தென்றலைப்போல்
கந்தனின் புகழ்மணக் காட்டினிலே---மனிதர்
கவலை மறக்கிறார் நாட்டினிலே!

பழனி மலைநோக்கிப் பாடிவந்தார்---அந்தப்
பால முருகனைப் பணியவந்தார்!
வேலோடு மயில்துணை யாகுமென்றார்---அந்த
வேந்தனின் வேல்வினை களையுமென்றார்!

காவடி தூக்கியே காணவந்தார் -----கந்தன்
சேவடி நோக்கியே சேர்க்கவந்தார்!
பாவடி பாடியே பக்தியோடு ------ கடம்பன்
பூவடி கண்களில் தேக்கிவந்தார்!

நல்ல வரங்களை நாடிவந்தார் --- அதைச்
சொல்ல முடியாமல் சொக்கிநின்றார்!
கள்ளூரும் கந்தனின் காட்சியிலே ---தங்கள்
பிள்ளை முகம்கண்டு மகிழ்வடைந்தார்!!

தத்தித் தத்தியேதான் நடந்தாலும் ---அவர்
பக்தி மிகுதியால் பலமடைந்தார்!
சுத்தி நில்லாதேபோ பகையேஎன்று--விரைந்து
துரத்தி விட்டேயுன்னைச் சரணடைந்தார்!

கந்தா கந்தாவென்று கதறிவந்தார்---மனதில்
சொந்தம் நீதானென்று சொல்லிவந்தார்!
பந்த பாசம்தொட்டு ஓடிவந்தார் --- ஓடி
வந்தவர்க்கே நல்ல வரந்தருவாய்!

பஞ்சாமிர்தப் பிரியன் பாதம்கண்டார்---அங்கு
பாலோடு தேனபிஷேகம் கண்டார்!
அஞ்சாதே நில்லென்று அபயந்தரும் -அந்தப்
பிஞ்சு முகம்கண்டு பேறுபெற்றார்!!

Saturday, January 8, 2011

நல்லதே நினைப்போம்

பிறர்க்குக் கொடுப்பதற்கு ஒன்றுமில்லையெனில்
கனிவான வார்த்தைகளையாவது பேசுவோம்
என்பது புத்தர்வாக்கு.உலகத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய
நல்லசெய்திகள் எவ்வளவோ இருக்கின்றன.
அதுபோல் பிறர்க்குக்கொடுப்பதற்கு
நல்ல செய்திகள் கிடைக்கவில்லையெனில்
விரும்பத்தகாத செய்திகளைத் தவிர்க்கலாம்.
எல்லோரும் படிக்க வேண்டுமல்லவா?
என்னால் சில ‘ப்லாக் ’குகளில் படித்த சில
செய்திகளை சீரணிக்கவே முடியவில்லை.
அவர்கள் எண்ணங்களை மாற்ற நாம்யார்?
இனிமேல் அந்தமாதிரி ‘ப்லாக்’ குகளைப்
படிக்காமல் இருந்துவிடலாம் என்று
முடிவு செய்துவிட்டேன்.

Thursday, January 6, 2011

கண்ணாத்தாள்

      ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்
      ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்

கருவிலே உருவான கனிதமிழ்ப் பாட்டிது
            கண்ணாத்தா உந்தனருளே!
வருவாய்நீ வாழ்க்கையில் வசந்தங்கள் பெருகிட
            வாழ்த்தியே அருள்புரிவாய்!
கண்மலர் சாத்தினால் கனிவோடு பார்த்துநீ
            கண்நோயைத் தீர்த்தருள்வாய்!
கண்மணியைக் காத்தருள் புரிவதால் தான்உனை
           கண்ணாத்தா என்றுசொல்வார்!
கண்ணிலே மாவிளக்கு வைத்துனை வணங்கிட
           கவலையைத் தீர்த்தருள்வாய்!
கண்ணுக்குக் கண்ணாகக் கருவிலே குழந்தையைக்
           களிப்போடு தந்தருள்வாய்!
பாட்டரசன் பாட்டுக்குப் படியெடுத்துக் கொடுத்துநீ
           பாரெல்லாம் புகழவைத்தாய்
நாட்டரசன் கோட்டைவளர் நாயகியே உன்புகழ்
           நாவினால் சொல்லலரிதே!                             ----ஓம்சக்தி

Tuesday, January 4, 2011

ஊஞ்சலாடும் பேரானந்தம்!

ஊஞ்சலிலே ஆடிவரும் ஓங்கார முருகையா
உன்னூஞ்சல் ஆடுகையில் உள்ளமெல்லாம் மகிழுதையா!
ஓடோடிக் காணவந்தோம் உன்னூஞ்சல் ஆட்டத்தையே
தேடிவந்த செல்வமெல்லாம் தென்பழனி நீதந்தது!
காடுமேடு பள்ளமெல்லாம் கடிதாகக் கடந்துவந்து
களிகூரும் உன்னூஞ்சல் கண்குளிரக் காணவந்தோம்!
வெள்ளியினால் ஊஞ்சலிலே புள்ளிமயில் முருகையா
உள்ளம்மகிழ்ந் தாடிடுவாய் உற்றதுன்பம் மறக்கச்செய்வாய்!
செம்மடைப் பட்டியிலே செகம்போற்ற வெள்ளிஊஞ்சல்
செம்மையாக ஆடுதல்போல் செகம்போற்றும் வாழ்வுதருவாய்!
கல்லும்முள்ளும் மெத்தையிட்டு காவலுக்கு உன்பாட்டு
கால்சிவக்க நடந்துவந்தோம் கண்திறந்து பாருமையா!
கண்களிலே உன்னைவைத்து கற்பனையில் கவியமைத்து
பண்ணிசைத்துப் பாடிவந்தோம் பரவசமாய் ஆடுமையா!
எல்லார்க்கும் செல்வமுண்டு எமக்குள்ள செல்வங்களோ
வள்ளலுந்தன் கருணைக்கடல் வற்றாத செல்வமன்றோ!

ஊஞ்சலிலே ஆடிவரும் ஓங்கார முருகையா
உன்னூஞ்சல் ஆடுகையில் உள்ளமெல்லாம் மகிழுதையா!

Sunday, January 2, 2011

வயதானால் இப்படித்தான்!

எழுதிக் குவித்திடத் தோன்றும்
எண்ணற்ற கற்பனைகள்.
புழுதிதட்டிக் கொண்டுவந்து
புதுயுகப் புத்தகத்தில்
புன்னகையாய் மலரவேண்டும்!
எண்ணங்கள் மிகநிறைய்ய்ய!
எழுதத்தான் நேரமில்லை.
காலை எழுந்ததும்
கைபார்த்துக் கடவுள்வணங்கி
பல்துலக்கிக் காலைக்கடன்முடித்து
உடற்பயிற்சி, யோகாபண்ணி
[அதைசெய்தபின்தான்கொஞ்சம் சுறுசுறுப்பே வருகிறது]
வயதாகிவிட்டதல்லவா?
பின் குளித்து, விளக்கேற்றி
சாமி கும்பிட்டு
காலை உணவு தயாரித்தல்.
உண்டுமுடித்ததும்,
மாத்திரைமருந்து, [இல்லைன்னாஒண்ணும் நடக்காது]
பதினோரு மணிக்கு
மெட்டிஒலி, பின் கஸ்தூரி
பின் சமையல்.
இருவரும் சேர்ந்துதான்
ஆளுக்கு ஒன்றாய்ச் செய்வது.
தலைவர் இளவயதில்
செய்யாத உதவியெல்லாம்
இப்போது செய்கிறார்கள்
விலைக்கு வாங்கிச்சாப்பிட்டால்
வயிறு ஏற்பதில்லை.
அல்லது வீட்டின்தலைவருக்குப்
பிடிப்பது இல்லை.
சமையலுக்கு ஆள்போட்டால்
ஒழுங்காய் வருவதில்லை.
இதில இடையிடையே
தலைவரைத் தேடிவரும்
பஞ்சாயத்துக்கள்,
சாமிவீட்டு வேலைகள்,
கோவில் வேலைகள்,
கல்யாணம் பேசிமுடித்தல்,
ஊர்வேலைகள் சம்பந்தமாக
வருகிறவர்களுக்கு உபசரிப்பு
கணினியப் போட்டு விட்டு
போகவர நாலுவரி
காப்பிபோட்டுக் குடுத்துவிட்டு
வரப்போகநாலுவரி
வேலக்கார அம்மாவந்தா
வெளக்கற பாத்திரம் எடுத்துத்தரணும்
வண்ணாத்தி வந்தாக்க
துணி சோப்பு எடுத்து குடுக்கணும்.
இம்புட்டுக்கும் இடையில
ஷேர்மர்க்கட் வியாபாரம்[அப்பச்சி கற்றுக்கொடுத்தது]
கூப்பிடுகிற இடங்களுக்கு
திருவாசக முற்றோதல்,
முடிந்தபோதெல்லாம் புத்தகவாசிப்பு,
மாலையில் விளக்கேற்றி
மங்கலமாய் நாலுபாட்டு!
சிவன்கோவில் சென்றுவந்து,
சிறிது உணவு சாப்பிட்டு,
நாதஸ்வரம் திருமதிசெல்வம்,
பின் வழைப்பழம் பால்
மாத்திரை மருந்துகள்,
இதன்பிறகு தூக்கம்வராவிட்டால்
கணினியில் கொஞ்சநேரம்,
தலைவருக்கு கோபம்வருவதற்குள்
படுக்கைவிரித்துவிட வேண்டும்.
இலாட்டி அவ்வளவுதான்
என்ன நடக்குமென்று
சொல்லமுடியாது.
அப்புறம்
மாத்திரை மருந்து டோஸ்
அதிகமானால் பாடுபடப்போவது யார்?
அதனால் கோபம்வருமுன்
படுக்கை விரிக்கவேண்டியதுதான்.

Saturday, January 1, 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கவிதைபடித்துக் கருத்தெழுதும்
கண்மணிகளும்,
கவிதை ரசிகர்களும்
காலமெல்லாம்
களிப்போடு வாழ்ந்திருக்க
கடவுளை வேண்டுகிறேன்.
வாழிய நீடூழி!
வளர்ந்து புகழ்பெறுக!!
தமிழ்மணத்துக்கு நன்றி
Related Posts Plugin for WordPress, Blogger...