Sunday, October 25, 2020

ஆயாள் வீட்டின் காயா நினைவுகள் 2

 சின்னச்சின்ன செடிவளத்து

சிங்காரமாய்த்  தோட்டமிட்டு

சிந்தாம தண்ணிஊத்தி

ஆயா வெதச்சதெல்லம்

அலுக்காமக் களையெடுத்து

ஆசையுடன் வளப்போமே!

ஆயா சங்கூத

ஆலாய் வளந்திருக்கும்

காய்,கீரை,வெங்காயம்

அத்தனையும் ஆராஞ்சு

அழகழகாய்க் கிள்ளிவர

அம்மான் பெண்டிருமே

அறுசுவையாய் ஆக்கிடுவார்!

வாசலிலே பெரிய

வாகான வட்டிலிட்டு

வாஞ்சையுடன் ஊட்டிடுவார் 

ஓடி ஓடி நாமெல்லாம்

உண்டு மகிழ்வோமே!


வளவுக்குள் ஊஞ்சலாட

வரிசையிட்டு நிப்போமே!


ஆளுக்கொரு சத்தகத்தால்

பங்குவச்சுப் புளிகுத்தி

பக்குவமாக் கொட்டையெடுத்து

ஓட்டில் வறுத்தெடுத்து

உப்புபோட்டு ஊறவச்சு

உல்லாசமாய் உண்போமே!

காரைக்குடியில்

ஏகாதசி விரதமிருந்து

இரவெல்லாம் முழிச்சிருந்து

பல்லாங்குழி முதலாக

பாம்புத்தாயம் ஈறாய்

பமபதம் விளையாண்டு,

வெள்ளனவே ஏந்திரிச்சு

வெள்ளமெனக் கெணத்தில

வேகமாத் தண்ணியெறச்சு

குளிச்சு முடிச்சதுமே

கொப்பாத்தா கோயிலுக்கும்

பெருமா கோயிலுக்கும்!


பரமபத வாசல்கண்டு

பிரசாதம் வாங்கிவந்து

பிரியமுடன் உண்போமே....

இட்டலியும் கோசமல்லி

இன்னும் இன்னும் என்றுகேட்டு

இனிமையுடன் உண்போமே!!


Monday, May 4, 2020

அமைதி வாழ்க்கை அழகாய் மலர

அச்ச உணர்வின்றி
ஆற்றலைப் பெருக்கி
இல்லத்தில் இருந்து
ஈர நெஞ்சோடு
உலகம் உணர்ந்து
ஊரடங்கு வீடடங்கால்
எளிமையாய் வாழ்ந்து
ஏராள நன்மைகளை
ஐயமின்றித் தெளிந்து
ஒதுங்கி இருந்து
ஓம் என்று தியானித்து
ஈசன் அடிபணிவோம்
எல்லாம் நன்மைக்கே!
எல்லாம் அவன்செயல்!

ஒற்றுமை என்றும்
உயர்வே என்ற
இந்தியர் பண்பாடு
என்றும் துலங்க
அரசின் ஆணை
அவசியம் ஏற்போம்!
அமைதி வாழ்க்கை
அழகாய் மலரும்!!

Thursday, February 7, 2019

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணமாம் கல்யாணம்
முருகனுக்குக் கல்யாணம்!
உல்லசமாய்த் தேவி இருவர்
உடனிருக்கக் கல்யாணம்!

நல்லதெல்லாம் நடக்கவைக்கும்
நாயகனின் கல்யாணம்!
எல்லாருமே பாக்கவாங்க
எடுத்ததெல்லாம் வெற்றியாம்!

மாலையெடுத்துத் தந்திடுவான்
மறுவருசம் மனைவியோடு
சோலையாக வாழ்வுதரும்
சுப்பிரமணியன் கல்யாணம்!

குன்றுதோறும் ஆடிவரும் 
குமரனுக்குக் கல்யாணம்!
வெற்றிவேலை எடுத்துவரும்
விமலனுக்குக் கல்யாணம்!

மழலைவரம் கேட்டவர்க்கு
மனம்போலத் தந்திடுவான்!
அழகெல்லாம் அள்ளிவரும்
அழகனுக்குக் கல்யாணம்!

சேவக்கொடி அழகனுக்கு
சிங்காரமாய்க் கல்யாணம்
ஆவலுடன் பாத்திருப்போம்
ஆறுமுகன் கல்யாணம்!

வள்ளிமயில் தேவயானை
ஒய்யாரமாய் அருகிருக்க
புள்ளிமயில் மீதுபூத்த
புன்னகைக்குக் கல்யாணம்!

Sunday, December 9, 2018

சரவண பவஎன......சரவண பவஎன ஒருதரம் நினைத்திட
     சக்தியின் மகனவன் வருவானே!
அரகர எனஎன அருகினில் அழைத்திட   
    அன்புடன் மனதினில் உறைவானே!       

ஓம்என உரைத்திட உறுவகை உறுகென
    உயர்வுகள் பெறுகென அருள்வானே!
நானெனும் நினைவுகள் நடுவில் விலகிட     
    அயர்வுகள் அருகிட  அருள்வானே!

வள்ளிதெய் வானை வள்ளல் இருபுறம்
    வடிவாய் காட்சி கண்டோமே!
ஒள்ளியன் ஆக உள்ளெழில் பெருகிட
     மனதில் மாட்சி  கொண்டோமே!

ரஅண பவச ரர ரர ரர ர
    அரங்கனின் மருகா சரணமையா!
ரிஅண பவச ரிரி ரிரி ரிரி ரி
    ரிதமென நாவினில் இருந்திடுக!

சேவல் கொடியுடை செவ்வாய் முருகனே
      செய்வன திருந்தச் செயவைப்பாய்!
வேலும் மயிலுடன் துணையாய் வந்தே
      வென்றிட எமக்கே வரமருள்வாய்! [முருகையா]
                                                                                 
                                   (ஒள்ளியன்=மேன்மைமிகுந்தவன்)
நால்வரின் வாழ்வில் நற்றுணையாவாய்
      நற்பணி யெல்லாம் செயவைப்பாய்!
வேல்வரின் இன்பம் விந்தைபுரிந்தே
      ஒற்றுமை ஆக்கித் தந்திடுவாய்!


Wednesday, May 30, 2018

இல்லாத ஆச்சியப்பத்தி
இழிவாகப் பேசிப்புட்டு
நல்லவங்க மனச எல்லாம்
நாரு நாராக் கிழிச்சுப்போட்டு
செல்லாத காசான
செல்லூரு ராசப்பனே?

மெல்ல மெல்லத்
தெய்வமெல்லாம்
மெதுவாகச் சொல்லுமையா
நல்லபுத்தி உனக்குவர,
நகரத்தார்
பெருமை எல்லாம்!

சிகரத்தார் நாங்கள்
பெருமையுற வேநடப்போம்
பகரும் மொழி சிலசமயம்
பலித்துவிடும் என்பதனால்!

பலித்துவிடும் என்பதனால்
நாங்கள் நல்லதையே
சொல்வோம் என பொருள்படும்.

[இல்லாத ஆச்சி]
மனோரமா இப்போது இல்லை
அவர் ஆச்சியும் இல்லை!?

Saturday, December 23, 2017

வினைதீரக்கும் வேலவன்

வேல்கொண்டு வினைதீர்க்கும் வேலவா போற்றி!
வேல்போல வேகத்தைத் தந்திடுவாய் போற்றி!
ஆல்போல குலம்தழைக்க அருள்வாய் போற்றி!
பால்பொங்கும் மனைதந்து மகிழ்விப்பாய் போற்றி!

கால்தூக்கி ஆடியவன் கண்மணியே போற்றி
வேல்தூக்கி வந்திடும் வித்தகனே போற்றி!
சல்லாபச் செந்தமிழாய்ச் சந்தித்தோம் போற்றி!
உல்லாச மாய்வந்து உவப்பாய் போற்றி!

கல்லசையும் கவிபாடிக் களித்தோம் போற்றி!
மெல்லிசைக்கு மனங்கனிந்து மிளிர்வாய் போற்றி!
சொல்லதிரும் தமிழெடுத்துத் துதித்தோம் போற்றி!
வல்லகதிர் வேலெடுத்து வருவாய் போற்றி!

எல்லாமாய் அல்லதுமாய் இருப்பாய்போற்றி!
எல்லார்க்கும் நல்லனாய் ஆக்குவாய் போற்றி!
எல்லையில் கருணைசெய் எம்மான் போற்றி!
தொல்லைசூழ் பகைமையைத் துரத்துவாய் போற்றி!

சொல்லமைக்கச் சுந்தரமாய் வருவாய் போற்றி!
வல்லமை தந்தெம்மை வாழ்த்துவாய் போற்றி!
அல்லதையும் நல்லதாக்கும் அழகே போற்றி!
நல்லதையே நினைத்திடுவோம் நலம்தா போற்றி!

எல்லார்க்கும் இனிமைசெய் எழிலே போற்றி!
பொல்லார்க்கும் புத்திதரும் பூரணா போற்றி!
கல்லார்க்கும் கருணைசெய் கனிவே போற்றி!
வல்லாரை வழிநடத்தும் வடிவேலா போற்றி!

நல்லதொரு நாமமது சரவணபவ போற்றி!
கல்லதிரும் கற்பனையில் கண்டோம் போற்றி!
செல்வத் திருமகனே செந்திலா போற்றி!
மெல்லச் சிரித்தமுக வேலவா போற்றி!

வெல்லத் திருப்புகழில் விழைந்தோம் போற்றி!
சொல்லற்கரிய தமிழ்ச் சூரியனே போற்றி!
உள்ளத்து இருத்தியே உகந்தோம் போற்றி!
கள்ளப்பு லன்கரைக்கும் கந்தனே போற்றி!

வெல்லத்தமிழ் போற்றும் விருத்தனே போற்றி!
சல்லாப செந்தமிழே சந்திரா போற்றி!
வல்லிசிவ காமியின் வாஞ்சைமகன் போற்றி!
பில்லிசூ னியம்விலக்கும் பேரருளே போற்றி!

வேல்வழியே வினைகளையும் வித்தகா போற்றி!
சால்வழியும் நீர்போலச் சமத்துவா போற்றி!
அல்லவை தீர்த்தருளும் ஆறுமுகா போற்றி!
நல்லவை தந்தருளும் நாதனே போற்றி!

பொல்லேன் அறியாமை பொறுத்தருள்வாய் போற்றி!
கல்லேன் குறைகளைந்து காப்பாய் போற்றி!
வெல்வேன் எனும்உறுதி தந்திடுவாய் போற்றி!
சொல்வேன் உன்நாமம் எந்நாளும் போற்றி!

சொல்லின் செல்வாசொக்கன்மகனே போற்றி!
சொல்லின் உன்நாமம் சுகந்தருமே போற்றி!
புல்லின்மேல் பனிபோலப் பூத்தமுகம் போற்றி!
சொல்லரிய தமிழ்போலத் தூயவனே போற்றி!

வெல்லரிய பலம்தருவாய்  விடைவாகனா போற்றி!
சொல்லெடுத்துத் துதித்தவர்ககுத் துணையே போற்றி
வில்லெடுத்த நம்பிராஜன் மருகா போற்றி!
வல்லியர் இருபுறம் வைத்தாய் போற்றி!

இல்லக் கிழத்தியர் இணையடி போற்றி
சொல்லச் சொல்லச் சுகமே போற்றி!

Thursday, May 11, 2017

ஆராவயல் வீரமாகளி அம்பாள்.

சித்திரைச் செவ்வாயில் திருவிழா நடக்குமே
               சிங்காரக் கொலுவிருப்பாய்!
எத்திக்கி லிருந்தாலும் எழிற்கோலம் காணவே
               எல்லோரும் ஓடிவருவார்!

வேண்டிவரம் கேட்டவர்க்கு விளையாடப் பிள்ளையும்
              விரும்பியதும் தந்தருள்வாய்!
ஆண்டியென உள்ளவரும் அடிபணிந்து ஏத்தவே
              அழியாத பொருள்தருவாய்!

மழலையர்க்குத் தொட்டில்கட்டி மகிழ்வோடு பொங்கலிட்டு
              மாவிளக்கும் ஏற்றிவைப்பார்!
மாவாலே களிக்கிண்டி மக்களுக்குப் பகிர்ந்தளிக்க
              நோகாமல் நோய்கள் தீர்ப்பய்!

பால்குடங்கள் காவடிகள் முளைப்பாரி தீச்சட்டி
               பாதத்தில் சேர்க்க வருவார்!
வேல்கொண்டு துன்பங்கள் விரைந்தோட வைப்பாயே
               வீரமா காளிஉமையே!
Related Posts Plugin for WordPress, Blogger...