Wednesday, October 28, 2015

சரஸ்வதியின் இன்னும் சில பெயர்கள்.

சாரதா தேவி,
ஹம்சவாஹினி,
ஜகநீ,
வாணீஸ்வரி,
கவுமாரி,
ப்ரம்மசாரிணி,
புத்திதாத்ரி,
வரதாயினி,
க் ஷக்ரஹண்டி,
மற்றும்
புவனேஸ்வரி.

  நன்றி.தினமலர்.

Saturday, October 3, 2015

கன்னி கனியானாள்!

எங்கள் அண்ணன்மகள் வயசுக்கு வந்தபோது அண்ணனுக்கு எழுதிய கவிதை மடல்! இதை எழுதியதற்காக அண்ணன் ஆயிரத்தொரு பொற்காசு பணமுடிப்பு தந்தார்கள்.


கன்னித் தமிழினிமை காட்டுகின்ற மலர்முகத்தில்
பண்ணினிசை கூட்டுகின்ற பவளச்செவ் வாயிதழாள்!
எண்ணக் குவியலிடை எழில்கொஞ்சும் நன்முத்தாள்!
மின்னலிடை அன்னநடை மிளிர்கின்ற போதினிலே
கன்னி கனியானாள்! கண்டோர்க்கு வியப்பானாள்!
கண்ணின் கருமணியெனக் காத்திடுவீர் அவள்தனையே
தன்அவனைத் தேடுதற்கே தாமரையாள் மலர்வதுபோல
மன்னவனைத் தேடித்தரும் மாபொறுப்பும் தந்துவிட்டாள்!

Wednesday, September 9, 2015

பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.

பிள்ளையார் பட்டிவளர் பெருநிதியே கற்பகமே!
அள்ளிஅள்ளித் தருகின்ற அருள்நிதியே அற்புதமே!
உள்ளமார் அன்புக்கு உவந்திடுவாய் பொற்பதமே!
வள்ளல்உனை நாடிவந்தோம் வாழ்த்திடுவாய் சிற்பரமே!

கல்லிலே முளைத்துவந்த கவின்தமிழே கலையழகே!
கையிலே சிவனைவைத்து களிகூரும் சிலையழகே!
புல்லிலே மாலையிட்டால் பொலிவுதரும் மலையழகே!
பொய்யெலாம் போயகல பொங்குமருள் தருவாயே!

சொக்கனையும் அம்மையையும் சொகுசாக வலம்வந்து
பக்குவமாங் கனிபெற்றாய் பாரேத்தும் தந்தமுகா!
எக்காலும் உனைத்தொழுது ஏத்திவந்த பேர்களுக்கு
மிக்கபுகழ் தான்தந்து மிடுக்கோடு வாழவைப்பாய்!

பாலாலும் தேனாலும் பக்குவமாய் தயிராலும்
பன்னீரும் இளநீரும் பழவகையும் கலந்துவைத்து
ஐயனுக்கு அபிசேகம் சென்னியிலே பூவைத்து
செய்தன்பால் போற்றினார்க்குச் செய்தொழிலை  சிறக்கவைப்பாய்!

ஆவணியின் சதுர்த்தியிலே ஆனைமுகன் திருவிழா!
ஆவலுடன் மக்களெல்லாம் அணிதிரளும் பெருவிழா!
பாவணிகள் பாடிவரும் பெரும்புலவர் வரும்விழா!
பாவையர்கள் நோன்பேற்க பலன்மிகவே தரும்விழா!

உருவத்தில் முழுவதுமாய் உயர்சந்தனக் காப்பினிலே
வருடத்தில் ஒருமுறைதான் வந்தழகைக் காண்பீரே!
வருந்துன்பம் விலகவைத்து வாழ்க்கையினைச் சீராக்கும்
பெருமைகள் சொல்லரிய! பேரருளைப் பெறுவீரே!!

அற்புதக் கலைகளெல்லாம் அவையினிலே அரங்கேற்றம்!
ஐயன்மேல் கவிபுனைந்தால் ஆனந்தப் பூந்தோட்டம்!!
கற்பகத்தின் தனிப்பெருமை காணவரும் பெருங்கூட்டம்!!!
கையெல்லாம் வடம்பிடிக்க கட்டழகுத் தேரோட்டம்!!!!

Sunday, September 6, 2015

மாலைப் பொழுதழகு.

1963ம் ஆண்டு காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது எழுதியது.ஆண்டுமலரில் வெளிவந்தது.அச்சில் ஏறிய முதல் கவிதை!

திடலாய்க் காணும் கடலே உடலாய்!
பிடிபடா மின்னல் துடியிடை யாக!
நீல விசும்பே கோல உடையாய்!
ஆழக் கடலலை அழகுக் குழலாய்!
குளிரும் வெண்மதி குலவிடும் முகமாய்!
ஒளிரும் விண்மீன் எழிலின் மலராய்!
பெற்றவள் வந்தாள் பேரழகுடனே!
நற்றவ மாலைப் பொழுதே வாழி! 

Wednesday, September 2, 2015

எனது முதல் சாமிபாட்டு.

தொந்திக் கணபதி உன் தூய திருவடியை
நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக!

கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்!
கொலமதி போல்முகனே ஆறுமுகமானாய்!

ஞாலமதில் நீயெனக்கு நல்லருளைத் தாதா!
பாலகனே உன்னடிகள் பணிந்தேன்நீ வாவா!

வெள்ளிவேலை அள்ளிவந்து வெண்ணீறு தருவாய்!
புள்ளிமயில் ஏறிவந்து பூந்தமிழாய் வருவாய்!

பிள்ளையென என்னையெண்ணி பேசுமொழிஅருள்வாய்!
நல்லவனே வல்லவனே உள்ளமுதே உயிராய்!


Tuesday, September 1, 2015

அன்னை அன்னை அன்னை!

எனது இரண்டாவது கவிதை
பாரதியாரைப்போல எழுதமுயற்சித்தது

அன்னை அன்னை அன்னை
அன்புடன் அமுதம் ஊட்டிவளர்த்தாள்
என்னை என்னை என்னை!

தந்தை தந்தை தந்தை
தாமரை மகளின் கலையினை ஈந்தார்
எந்தை எந்தை எந்தை!

தம்பி தம்பி தம்பி
தத்தித் தவழும் அவனோ தங்கக்
கம்பி கம்பி கம்பி!

தங்கை தங்கை தங்கை
தைநெல் போல மெய்யொடு வளர்ந்த
நங்கை  நங்கை நங்கை!

பாட்டு பாட்டு பாட்டு
பாரதி பாட்டின் சுவையைப் பிறர்க்கு
ஊட்டு ஊட்டு ஊட்டு!

Monday, August 17, 2015

சின்னச் சின்ன ரோஜா!

எனது முதல் கவிதை.பள்ளியில் படிக்கும்போது எழுதியது.

சின்னச் சின்ன ரோஜா!
  சிவப்பு வண்ண ரோஜா!-இதழ்
கண்ணைக் காட்டி என்னை
  கனிந் தழைக்கும் ரோஜா!
மென்மை கொண்ட ரோஜா
  மினுக்கு கின்ற ரோஜா!-இளம்
பெண்மக்[கு] உவமை ரோஜா!
  பேசத் துடிக்கும் ரோஜா!
முத்துப்போன்ற ரோஜா!-பனி
  மொட்டுத் தோய்ந்த ரோஜா!
பட்டு உடுத்திய ரோஜா!-நான்
  தொட்டு வைத்த ரோஜா!

Friday, August 7, 2015

என்ன நாஞ்சொல்லுரது?! 4

சும்மா சும்மா போரப்போட்டு
கம்மாயெல்லாங் காஞ்சுபோச்சு!
எம்மாம்பெரிய போரப்போட்டு
ஏரியெல்லாம் வத்திப்போச்சு!
கெணத்துக்குள்ள வாளிபோனா
மணல் மணலா வருதுங்க!
மழைநீரு சேமிப்ப 
மறக்காமப் போட்டிங்கன்னா
வளமான வாழ்க்கைக்கு
வழிகாட்டி ஆவீங்க!
வளமான இந்தியாவ
வருங்காலமாக்கலாங்க!
என்ன நாஞ்சொல்லுரது
எல்லாருக்கும் நல்லாருக்கா?

Sunday, February 1, 2015

மலைமேல் மலைமேல் காவடிகள்!

மலைமேல் மலைமேல் காவடிகள்
மகிழ்வுடன் ஆடி வருகுதையா!
அலைபோல் அலைபோல் மக்கள் கூட்டம்
அழகாய் கூடி வருகுதையா!
மலையோன் மகனைக் காணுதற்கு
மழைபோல் பெருகி வருகுதையா!
வலையில் மீன்போல் உனைக்காண
வரங்கள் வேண்டி வருகுதையா!
தலைமேல் தலைமேல் பால்குடங்கள்
தளும்பத் தளும்ப வருகுதையா!
விலையில் அன்பால் வருகுதையா!
விரைந்தே ஓடி வருகுதையா!!
சேவலும் மயிலும் சேர்ந்துவர
பாவலர் பாடல் பாடிவர
காவலாய் வேலும் துணைவரவே
காணவரும் உனது அடியவர்க்கு
குருவாய் வருவாய் குகனே மக்கள்
குற்றம் எல்லாம் பொறுத்தருள்வாய்!
தருவாய் தருவாய் நன்மையென
தாள்கள் பணிந்தோம் தந்தருள்வாய்!

Related Posts Plugin for WordPress, Blogger...