ஓ..பெண்ணே
நீ பிறக்கும்போது
பெற்றோர் இட்டபெயர்
ராஜகுமாரி
இன்றோ..
நீ..
சோகத்தின் சுவீகாரகுமாரி
உன் இதயத்தில் மலரும்
இன்பநினைவுகளில்
ஒன்றாவது இந்தஉலகத்தில்
உண்மையாகி இருந்தால்..
பெயரில்மட்டுமல்ல..
நீ..
உண்மையிலேயே ராஜகுமாரிதான்!
நீ இப்படி இருப்பது
எவருக்குப் பிடிக்கவில்லையோ
அவர்கள் மனம்மகிழத்தான்
இந்த ரோஜாவை முள்ளில் இட்டு
இடமும் வலமுமாக
இடைவிடாமல் தேய்க்கின்றனரோ!
!
கசங்கிப் போனாலும்
கண்ணீரில் மிதந்தாலும்
ஒரு விடியல் நிச்சயம் உண்டு!
தைரியமாய் இரு.
உன்னைப்பற்றிக் கவலைப்பட
உனக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டுமென்று
ஒரு இதயம்...
அல்ல அல்ல
சில இதயங்கள் இங்கே..
துடித்துக்கொண்டிருக்கின்றன
ஆனால் அவை
துடிப்பதால்மட்டும் உனக்கு
சுகமான வாழ்வு கிடைக்குமானால்
எப்போதும் உனக்காக
துடிக்கக் காத்திருக்கின்றன.
எந்த ராஜகுமாரனோடு நீ..
வாழ்ந்துகாட்டப்போகிறாய் என்று
உன்னைப் பெற்றவர்கள்
உவந்து மணமுடித்தார்களோ
அந்தக் கொடுங்கோலனே
இரக்கமற்ற கொடுமைகளால்
உனக்குக் காலனாகவருவானோ என்று..
எங்கள் இதயங்கள் பதறுகின்றன
ஒவ்வொருநாள் காலையிலும்
உதயமலர் போலிருக்கும் உன்வதனம்
ஒவ்வொரு மாலையிலும்
உலர்ந்து தவிப்பதை உணருகிறோம்
ஆனாலும் நீ
வாழ்ந்து காட்ட வேண்டும்
உன்வாழ்வை இப்படி ஆக்கிய
உன்மத்தர்கள் உருகித்தவிக்கவும்
அவர்களப்பார்த்து நீ
ஐயோ பாவமென்று
சொல்வதற்காகவாவது
நீ வாழவேண்டும்
உன் கணவன் திருந்த
நீயும்
உன்னோடு நாங்களும்
இறைவன் திருவடியை
இணைந்து வணங்குவோம்.
மதுரைக்கும் திருப்பத்தூருக்கும் நடுவிலுள்ள மேலூருக்குப்
பக்கத்திலுள்ள வெள்ளலூர் என்னும் ஊரில்1982களில்
என் குழந்தைகளின் அப்பா மதுரைவங்கியில் வேலை
பார்த்தபோது எழுதியது.[இப்போது ஐசிஐசிஐ] அப்போதெல்லாம்
பாவம் அந்தஊர்ப் பெண்களுக்கு அவ்வளவாக சுதந்திரமில்லை
கிராமங்களில் எம்பொண்டாட்டிய நா அடிப்பேன்
எவண்டா நாயே கேக்கிறது? என்று சமாதானம்
பேசப்போகிறவர்களையும் இழிவாகப்பேசுவான்கள்
அதையெல்லாம் பார்த்து மனம்வருந்தி எழுதிய
எண்ணங்களின் வெளிப்பாடே இது.அதன்பிறகு பல
ஊர்கள்மாறி இப்போது பதவிஓய்வும்பெற்று
ஊரோடு வந்தாச்சு. பேரனும்படித்துமுடித்து வேலைக்குப்
போகிறான். அந்த ராஜகுமாரி இப்போது எங்கு இருக்கிறாள் என்றுதெரியவில்லை.
1 comment:
ஜனவரி ஐந்தாம் தேதி வரை, பதிவுலக விடுமுறையில் செல்கிறேன், அம்மா...... உங்கள் கவிதைகளையெல்லாம் நிச்சயம் மிஸ் செய்வேன்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
என்றும் அன்புடன், உங்கள் ஆசிரை வேண்டும் சித்ரா
Post a Comment