Sunday, December 5, 2010

பேரன் பேத்திகள் தொடர்ச்சி

                                  மா.விசாலாட்சி.

ஐயாவின் சமஸ்தானம் வளவுக்குள் பேரடக்கம்.
ஆயாவின் சாம்ராஜ்யம் அடுக்களையில் சிறந்திருக்கும்!


                                  லெ.தேனம்மை.

முக்காட்டார் அகத்திருந்து முன்புவந்த ஆயாவாம்
முத்துக் கருப்பாயி முழுமனதாய் ஐயாவின்                                    
சொத்தாக இதயத்தில் சொகுசாக வாழ்கின்றார்!
பக்திசெயும் எங்களுக்கும் பாசமுடன் அருள்கின்றார்!


                              சபா.அருணாசலம்


பேசாத தெய்வமெங்கள் பெரிய ஆயாவென்றால்
பாசமுடன் உணவூட்டிப் பக்குவமாய் எனைவளர்த்த
வாசமுள்ள மரிக்கொழுந்து மல்லிகைப்பூ தான்சூடும்
பேசுகின்ற பொற்பாவை பிரியமுள்ள அலர்மேலு!


                          சபா.வள்ளியப்பன்


ஆறாவயல் பிறந்து ஆயாவீட்டில் வாழ்வமைந்த
சீராங்கனி ஆயாள் சிறப்பெங்கள் வாழ்வினிலே!


                        சபா.மெய்யப்பன்.


மல்லித்தழை கருவேப்பிலை மணக்கின்ற புதினாவுடன்
முள்ளங்கி வெங்காயம் முதலான காய்கறிகள்
உள்ளம் நிறைந்திடவே ஒவ்வொன்றாய்த் தேர்ந்தெடுத்து
அள்ளித் தின்னலாம்போல் அரிந்துவைப்பார் அழகுறவே!


                      ராம.வள்ளிக்கண்ணு.


இட்டலியோ முல்லைப்பூ!இளந்தோசை அப்பத்தா
வார்க்கின்ற அழகினிலே வட்டநிலா வெட்கிநிற்கும்!!

                        ராம.அலமேலு.


பொட்டழகுப் பூமுகத்தில் புன்சிரிப்புமாறாமல்
இட்டமுடன் பரிமாறி இனிமையுடன் பார்த்திருப்பார்!


                       ராம.சௌந்திரநாயகி
.
பட்டுத்துகில் கசங்காது பளபளக்கும் சூரியனாய்
தொட்டதெல்லாம் துலங்கவரும் தூயமன அப்பத்தா!
அலர்மேலு அன்புஎமக்கு ஆனந்த நீரூற்று!
பழமுதிர்ச் சோலைநிறை பரவசப் பூங்காற்று!


வெ.மீனாட்சி, வெ.வள்ளியம்மை, வெ.பொன்னழகி,
          நாக.மெய்யப்பன், நாக.சபாரெத்தினம்,
                       ராம.சுப்பிரமணி.

                                                      
வடிவழகாய்ப் பொன்சேர்த்து வயிரமணிச் சரம்கோர்த்து
கொடியினிலே தாலிகோர்த்து கோடிஅழகாய்த் திருப்பூட்டி
தாமரைகள் இரண்டுவந்து தரையினிலே பூத்ததுபோல்
ஆழ்கடலின் முத்தெடுத்து அருகருகே அமைத்ததுபோல்
யாழிசையும் ஏழிசையும் யாப்போடு இணந்ததுபோல்
மாயவனும் இலக்குமியும் மணைமேல் அமர்ந்ததுபோல்
ஆயிரம் பிறைகண்ட ஐயாவுடன் அப்பத்தா!
வயிரம் தங்கமெல்லாம் வாழ்வினிலே எமக்கெதற்கு
ஆயிரம் பிறவியிலும் அன்புகொண்ட உள்ளங்களே!
சேயாகப் பிறந்து உங்கள் சீரடிகள் போற்றவேணும்
வண்ண மலர்தூவி வழ்த்துக்கள் வேண்டிநின்றோம்
வாயர வாழ்த்திடுவீர் எம்மை.!

இருபத்தி ஐந்துபேரன் பேத்திகள். இவர்களுடன்
என் ஆச்சி மகளின்பேரனையும் பார்த்துவிட்டார்கள்.
ஐந்து தலைமுறைகள்!


இன்று எங்கள் அப்பச்சி எங்களுடன்இல்லை.
சுமார் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன.
வீட்டில் [U.P.S]பொருத்தி விளக்கு வந்ததும்
உயிர் பிரிந்தது!
தனது தொண்ணூற்று ஏழாவது வயதில்
உயிர்பிரியும் நேரத்தில்கூட உயர்விளக்கு
ஏற்றிவைத்த உன்னத மனிதர்.

ஆயா=அம்மாவுடய அம்மா
அப்பத்தா=அப்பாவுடைய அம்மா
ஆச்சி=அக்கா

1 comment:

Chitra said...

அம்மா, எல்லாமே அழகு.... அருமை. வாசிக்க சந்தோஷமாக இருக்குது, அம்மா.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...