Sunday, September 6, 2015

மாலைப் பொழுதழகு.

1963ம் ஆண்டு காரைக்குடி மீ.சு.உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது எழுதியது.ஆண்டுமலரில் வெளிவந்தது.அச்சில் ஏறிய முதல் கவிதை!

திடலாய்க் காணும் கடலே உடலாய்!
பிடிபடா மின்னல் துடியிடை யாக!
நீல விசும்பே கோல உடையாய்!
ஆழக் கடலலை அழகுக் குழலாய்!
குளிரும் வெண்மதி குலவிடும் முகமாய்!
ஒளிரும் விண்மீன் எழிலின் மலராய்!
பெற்றவள் வந்தாள் பேரழகுடனே!
நற்றவ மாலைப் பொழுதே வாழி! 

Wednesday, September 2, 2015

எனது முதல் சாமிபாட்டு.

தொந்திக் கணபதி உன் தூய திருவடியை
நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக!

கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்!
கொலமதி போல்முகனே ஆறுமுகமானாய்!

ஞாலமதில் நீயெனக்கு நல்லருளைத் தாதா!
பாலகனே உன்னடிகள் பணிந்தேன்நீ வாவா!

வெள்ளிவேலை அள்ளிவந்து வெண்ணீறு தருவாய்!
புள்ளிமயில் ஏறிவந்து பூந்தமிழாய் வருவாய்!

பிள்ளையென என்னையெண்ணி பேசுமொழிஅருள்வாய்!
நல்லவனே வல்லவனே உள்ளமுதே உயிராய்!


Tuesday, September 1, 2015

அன்னை அன்னை அன்னை!

எனது இரண்டாவது கவிதை
பாரதியாரைப்போல எழுதமுயற்சித்தது

அன்னை அன்னை அன்னை
அன்புடன் அமுதம் ஊட்டிவளர்த்தாள்
என்னை என்னை என்னை!

தந்தை தந்தை தந்தை
தாமரை மகளின் கலையினை ஈந்தார்
எந்தை எந்தை எந்தை!

தம்பி தம்பி தம்பி
தத்தித் தவழும் அவனோ தங்கக்
கம்பி கம்பி கம்பி!

தங்கை தங்கை தங்கை
தைநெல் போல மெய்யொடு வளர்ந்த
நங்கை  நங்கை நங்கை!

பாட்டு பாட்டு பாட்டு
பாரதி பாட்டின் சுவையைப் பிறர்க்கு
ஊட்டு ஊட்டு ஊட்டு!

Monday, August 17, 2015

சின்னச் சின்ன ரோஜா!

எனது முதல் கவிதை.பள்ளியில் படிக்கும்போது எழுதியது.

சின்னச் சின்ன ரோஜா!
  சிவப்பு வண்ண ரோஜா!-இதழ்
கண்ணைக் காட்டி என்னை
  கனிந் தழைக்கும் ரோஜா!
மென்மை கொண்ட ரோஜா
  மினுக்கு கின்ற ரோஜா!-இளம்
பெண்மக்[கு] உவமை ரோஜா!
  பேசத் துடிக்கும் ரோஜா!
முத்துப்போன்ற ரோஜா!-பனி
  மொட்டுத் தோய்ந்த ரோஜா!
பட்டு உடுத்திய ரோஜா!-நான்
  தொட்டு வைத்த ரோஜா!

Friday, August 7, 2015

என்ன நாஞ்சொல்லுரது?! 4

சும்மா சும்மா போரப்போட்டு
கம்மாயெல்லாங் காஞ்சுபோச்சு!
எம்மாம்பெரிய போரப்போட்டு
ஏரியெல்லாம் வத்திப்போச்சு!
கெணத்துக்குள்ள வாளிபோனா
மணல் மணலா வருதுங்க!
மழைநீரு சேமிப்ப 
மறக்காமப் போட்டிங்கன்னா
வளமான வாழ்க்கைக்கு
வழிகாட்டி ஆவீங்க!
வளமான இந்தியாவ
வருங்காலமாக்கலாங்க!
என்ன நாஞ்சொல்லுரது
எல்லாருக்கும் நல்லாருக்கா?

Sunday, February 1, 2015

மலைமேல் மலைமேல் காவடிகள்!

மலைமேல் மலைமேல் காவடிகள்
மகிழ்வுடன் ஆடி வருகுதையா!
அலைபோல் அலைபோல் மக்கள் கூட்டம்
அழகாய் கூடி வருகுதையா!
மலையோன் மகனைக் காணுதற்கு
மழைபோல் பெருகி வருகுதையா!
வலையில் மீன்போல் உனைக்காண
வரங்கள் வேண்டி வருகுதையா!
தலைமேல் தலைமேல் பால்குடங்கள்
தளும்பத் தளும்ப வருகுதையா!
விலையில் அன்பால் வருகுதையா!
விரைந்தே ஓடி வருகுதையா!!
சேவலும் மயிலும் சேர்ந்துவர
பாவலர் பாடல் பாடிவர
காவலாய் வேலும் துணைவரவே
காணவரும் உனது அடியவர்க்கு
குருவாய் வருவாய் குகனே மக்கள்
குற்றம் எல்லாம் பொறுத்தருள்வாய்!
தருவாய் தருவாய் நன்மையென
தாள்கள் பணிந்தோம் தந்தருள்வாய்!
பழனி மலையில் இருப்பவனே!
பக்தர் அன்புக்கு அருள்குகனே!
கழனி விளைய வளம்பெருக
கண்கள் கருணைபொழிந்திடுவாய்!

Sunday, December 7, 2014

இரணியூர் ஆட்கொண்டநாதர்.

ஒற்றைவெண் பிறைதன்னை உச்சியில் வைத்தவா
                      உலகாளும் எம்பிரானே!
கற்றைச்ச டையினில் கங்கையைத் தாங்கியே
                      களிகூரும் தம்பிரானே!
பற்றியே கழுத்தினில் பாம்பினை அணிந்தவா
                      பரங்கருணைப் பேராளனே!
சுற்றியுனை வணங்கிடச் சொந்தங்கள் பெருக்கியே
                     சுகமாக்கும் சீராளனே!
கடலினை அதிகமாய்க் கடைந்ததால் வந்திட்ட
                     நஞ்சுண்ட கண்டனானாய்!
உடலிலே நோவென்று உன்னையே வணங்கினால்
                    உற்றதொரு மருந்தாயினாய்!
உடலிலே பாதியை உமயவள் பெற்றதால்
                  அர்த்தநா சனாரீசனானாய்!
கடலெனும் அன்பிலே அடியவர் பூசிக்கும்
                  திருநீறு வாசனானாய்!
ஆயகலை அனைத்துமே அறிந்தவன் என்றாலும்
                  அன்புமகன் குருவாகினான்!
மாயவன் மருகனின் மந்திர உபதேசம்
                 மயங்கியே கேட்டிருந்தாய்!
மாயவன் இரணியனை வதம்செய்த கோபத்தை
                 நீக்கியே ஆட்கொண்டவா!
மேயஉன் கருணையை முற்றோதல் செய்திட
                 இப்பிறவி போதுமாமோ!
சேயெங்கள் துணையாகிச் செய்கின்ற செயலெலாம்
                 செழித்தோங்கச் செய்திடுவாய்!
நேயமுடன் அடியவரை ஆட்கொள்ளும் நாதனே
                 இரணியூர் ஆளும்சிவனே                      
        
Related Posts Plugin for WordPress, Blogger...