Tuesday, September 1, 2015

அன்னை அன்னை அன்னை!

எனது இரண்டாவது கவிதை
பாரதியாரைப்போல எழுதமுயற்சித்தது

அன்னை அன்னை அன்னை
அன்புடன் அமுதம் ஊட்டிவளர்த்தாள்
என்னை என்னை என்னை!

தந்தை தந்தை தந்தை
தாமரை மகளின் கலையினை ஈந்தார்
எந்தை எந்தை எந்தை!

தம்பி தம்பி தம்பி
தத்தித் தவழும் அவனோ தங்கக்
கம்பி கம்பி கம்பி!

தங்கை தங்கை தங்கை
தைநெல் போல மெய்யொடு வளர்ந்த
நங்கை  நங்கை நங்கை!

பாட்டு பாட்டு பாட்டு
பாரதி பாட்டின் சுவையைப் பிறர்க்கு
ஊட்டு ஊட்டு ஊட்டு!

Monday, August 17, 2015

சின்னச் சின்ன ரோஜா!

எனது முதல் கவிதை.பள்ளியில் படிக்கும்போது எழுதியது.

சின்னச் சின்ன ரோஜா!
  சிவப்பு வண்ண ரோஜா!-இதழ்
கண்ணைக் காட்டி என்னை
  கனிந் தழைக்கும் ரோஜா!
மென்மை கொண்ட ரோஜா
  மினுக்கு கின்ற ரோஜா!-இளம்
பெண்மக்[கு] உவமை ரோஜா!
  பேசத் துடிக்கும் ரோஜா!
முத்துப்போன்ற ரோஜா!-பனி
  மொட்டுத் தோய்ந்த ரோஜா!
பட்டு உடுத்திய ரோஜா!-நான்
  தொட்டு வைத்த ரோஜா!

Friday, August 7, 2015

என்ன நாஞ்சொல்லுரது?! 4

சும்மா சும்மா போரப்போட்டு
கம்மாயெல்லாங் காஞ்சுபோச்சு!
எம்மாம்பெரிய போரப்போட்டு
ஏரியெல்லாம் வத்திப்போச்சு!
கெணத்துக்குள்ள வாளிபோனா
மணல் மணலா வருதுங்க!
மழைநீரு சேமிப்ப 
மறக்காமப் போட்டிங்கன்னா
வளமான வாழ்க்கைக்கு
வழிகாட்டி ஆவீங்க!
வளமான இந்தியாவ
வருங்காலமாக்கலாங்க!
என்ன நாஞ்சொல்லுரது
எல்லாருக்கும் நல்லாருக்கா?

Sunday, February 1, 2015

மலைமேல் மலைமேல் காவடிகள்!

மலைமேல் மலைமேல் காவடிகள்
மகிழ்வுடன் ஆடி வருகுதையா!
அலைபோல் அலைபோல் மக்கள் கூட்டம்
அழகாய் கூடி வருகுதையா!
மலையோன் மகனைக் காணுதற்கு
மழைபோல் பெருகி வருகுதையா!
வலையில் மீன்போல் உனைக்காண
வரங்கள் வேண்டி வருகுதையா!
தலைமேல் தலைமேல் பால்குடங்கள்
தளும்பத் தளும்ப வருகுதையா!
விலையில் அன்பால் வருகுதையா!
விரைந்தே ஓடி வருகுதையா!!
சேவலும் மயிலும் சேர்ந்துவர
பாவலர் பாடல் பாடிவர
காவலாய் வேலும் துணைவரவே
காணவரும் உனது அடியவர்க்கு
குருவாய் வருவாய் குகனே மக்கள்
குற்றம் எல்லாம் பொறுத்தருள்வாய்!
தருவாய் தருவாய் நன்மையென
தாள்கள் பணிந்தோம் தந்தருள்வாய்!
பழனி மலையில் இருப்பவனே!
பக்தர் அன்புக்கு அருள்குகனே!
கழனி விளைய வளம்பெருக
கண்கள் கருணைபொழிந்திடுவாய்!

Sunday, December 7, 2014

இரணியூர் ஆட்கொண்டநாதர்.

ஒற்றைவெண் பிறைதன்னை உச்சியில் வைத்தவா
                      உலகாளும் எம்பிரானே!
கற்றைச்ச டையினில் கங்கையைத் தாங்கியே
                      களிகூரும் தம்பிரானே!
பற்றியே கழுத்தினில் பாம்பினை அணிந்தவா
                      பரங்கருணைப் பேராளனே!
சுற்றியுனை வணங்கிடச் சொந்தங்கள் பெருக்கியே
                     சுகமாக்கும் சீராளனே!
கடலினை அதிகமாய்க் கடைந்ததால் வந்திட்ட
                     நஞ்சுண்ட கண்டனானாய்!
உடலிலே நோவென்று உன்னையே வணங்கினால்
                    உற்றதொரு மருந்தாயினாய்!
உடலிலே பாதியை உமயவள் பெற்றதால்
                  அர்த்தநா சனாரீசனானாய்!
கடலெனும் அன்பிலே அடியவர் பூசிக்கும்
                  திருநீறு வாசனானாய்!
ஆயகலை அனைத்துமே அறிந்தவன் என்றாலும்
                  அன்புமகன் குருவாகினான்!
மாயவன் மருகனின் மந்திர உபதேசம்
                 மயங்கியே கேட்டிருந்தாய்!
மாயவன் இரணியனை வதம்செய்த கோபத்தை
                 நீக்கியே ஆட்கொண்டவா!
மேயஉன் கருணையை முற்றோதல் செய்திட
                 இப்பிறவி போதுமாமோ!
சேயெங்கள் துணையாகிச் செய்கின்ற செயலெலாம்
                 செழித்தோங்கச் செய்திடுவாய்!
நேயமுடன் அடியவரை ஆட்கொள்ளும் நாதனே
                 இரணியூர் ஆளும்சிவனே                      
        

Saturday, October 18, 2014

சரசுவதி பாடல்

அன்னவா கனத்தமர் அன்னையே சரஸ்வதி
             அருட்கல்வி  அரசிநீயே!
சொன்னவாக் கினில்வந்து சுயமாகக் கவிபாட
             சொந்தமாய்க் கேட்டுவாவா!
உன்னரும் கருணையால் உயர்கல்வி பெற்றிட
             உரமூட்ட வேண்டிநின்றோம்!
இன்னரும் தமிழிலே இயலிசை இசைபட
             இதமாக எடுத்தாளத்தா!
வெண்கலை உடுத்தியே வீணைகைக் கொண்டுநீ
             விரலுவந்து மீட்டிடுவாய்!
வெண்மலர்த் தாமரை விழைந்துமே அமர்ந்துநீ
            வியன்காட்சி தந்தருள்வாய்!
இலக்கணம் இலக்கியம் நேரிசை நிரையசை
            இவையெலாம் புரியவேண்டும்!
தலைக்கனம் இல்லாமல் தக்கோரை நாடியே
            தமிழிலே மூழ்கவேண்டும்!
கற்றோர்கள் காமுறும் கவின்வேதம் நான்கையும்
            கையிலே வைத்திருப்பாய்!
வற்றாத கல்வியை முற்றாகத் தருவாயே
            சரஸ்வதி அம்மையுமையே!
காத்திருந்த காலங்கள் கனியாக மாறியே
            கைவந்து நிறையவேண்டும்!
கூத்தனூர் உறைகின்ற ப்ரம்மனின் துணையான
              ப்ராஹ்மியே அம்மை தாயே!           

Tuesday, September 23, 2014

ஆதீனமிளகி ஐயனார் போற்றி.

ஐயன் பெருமை சாற்றிட எமக்கு
ஐங்கர னேநீ அருள்வாய்போற்றி!

நரியங்குடி வாழ் நாதாபோற்றி!
சரணடைந் தோம்உனை சாஸ்தாபோற்றி!
பூரணை புஷ்கலை பதியேபோற்றி!
பொங்கிவரும் அருள் நிதியேபோற்றி!
அரிசிவன் மகனாய் உதித்தாய்போற்றி
கரிமுகன் தம்பி ஆனாய்போற்றி!
புலிமேல் வந்த புண்ணியபோற்றி!
கலிதீர்க் கவந்த கருணைபோற்றி!
ஆதீன மிளகி ஐயாபோற்றி!
கோதி லாக்குணம் தருவாய்போற்றி!
யாதும் ஆகி நின்றாய்போற்றி!
சோதி சூழும் சுடரொளிபோற்றி!
இருதுணை அருகமர் இனியாபோற்றி!
பருகும் தமிழாய் இனிப்பாய்போற்றி!
பெருகும் அன்பில் பிணைவாய்போற்றி!
உருகும் அருளில் உயர்ந்தோம்போற்றி!
ஆறூர் மக்களின் அகமேபோற்றி!
பேரருள் சுரக்கும் பெருமைபோற்றி!
பாரூர் வணங்கும் பரமேபோற்றி!  [உலகம்]
ஊரூர் எல்லை காவல் போற்றி!
வில்வ வனத்தமர் வேந்தேபோற்றி!
செல்வ வளம்தரும் செங்கைபோற்றி!
நல்ல மனத்தமர் நயமேபோற்றி!
சொல்லில் உயர்ந்த தமிழேபோற்றி!
இல்லறம் இனிக்கச் செய்வாய்போற்றி!
நல்லறம் தழைக்க அருள்வாய்போற்றி!
பில்லி சூனியம் விலக்குவாய்போற்றி!
தொல்லை தரும்பிணி நீக்குவாய்போற்றி!
சொல்லொடு பொருளாய் வருவாய்போற்றி!
வல்லமை தருவாய் போற்றி! போற்றி!
சுற்றி வந்துனை வணங்கினம்போற்றி!
சுற்றிவ ரும்பகை அழிப்பாய்போற்றி!
பற்றின வர்க்குப் பந்தம்போற்றி!
வற்றா நதிபோல் வளமேபோற்றி!
ஓசை மணியடித்[து] அழைத்தோம்போற்றி!
பூசை ஏற்க வருவாய்போற்றி!
வாச மலரெலாம் ஏற்பாய்போற்றி!
நேச மனதிலே நிறைவாய்போற்றி!
தாச தாசராய் ஆனோம்போற்றி!
பேச மறந்தனம் பிரியாபோற்றி!
அன்னை தந்தையாய் வருவாய்போற்றி!
தன்னை அறியச் செய்வாய்போற்றி
முன்னை வினையைத் தீர்ப்பாய்போற்றி!
கண்ணை இமைபோல் காப்பாய்போற்றி!
வெள்ளிக் கவசம் விழைந்தாய்போற்றி!
அள்ளி வரும்அருள் அழகேபோற்றி!
கள்ளமில் அன்பில் கரைவாய்போற்றி!
கள்ளூரும் காட்சியில் கனிந்தோம்போற்றி!
புள்ளிகள் பெருகச் செய்வாய்போற்றி!
தெள்ளிய மனதில் திகழ்வாய்போற்றி!
கள்ளருக்[கு] எமனாய் இருப்பாய்போற்றி!
விள்ளரும் சாதனை அருள்வாய்போற்றி!
வெண்பரி மீதமர் வேந்தேபோற்றி!
மண்பரி மழையாய் பொழிவாய்போற்றி![மண் மகிழும்வண்ணம்]
புரவி எடுப்பை ஏற்பாய்போற்றி!
உறவுகள் எல்லாம் சேர்ப்பாய்போற்றி!
சேமக் குதிரை சேவடிபோற்றி!
சாமத் துணையாய் வருவாய்போற்றி!
காட்டுக் கருப்பர் துணையேபோற்றி!
நாட்டும் புகழைத் தருவாய்போற்றி!
சாட்டை எடுத்து வருவாய்போற்றி!
நாட்டைத் திருத்தி நலம்தாபோற்றி!
வல்ல வேட்டிப் பட்டணிபோற்றி!
வீச்சறி வாள்கைக் கொண்டருள்போற்றி!
சாம்பி ராணி வாசாபோற்றி!
சோம்பல் இல்லாச் சுதந்திரம்போற்றி!
கருத்த மீசைக் கருப்பாபோற்றி!
வருத்தம் போக்கி வளம்தாபோற்றி
சுக்கு மாந்தடிச் சூராபோற்றி!
பக்க மிருந்து காப்பாய்போற்றி!
முன்னோடி  முன்வழி தருவார்போற்றி!
முன்னே வந்து காப்பார்போற்றி!
ராக்காயி பேச்சி ராத்துணைபோற்றி!
காக்கும் கருணை போற்றிபோற்றி!
கன்னியர் எழுவர் கழல்கள்போற்றி!
எண்ணிய மாலை தருவார்போற்றி!
திண்ணிய மனமே திரண்டருள்போற்றி!
நண்ணிய தெல்லாம் நலமேபோற்றி!
தேவானை வள்ளி முருகன்போற்றி!
பாவால் பாடிப் பணிந்தனம்போற்றி!
அஷ்டமி வைரவர் அருள்வார்போற்றி!
கஷ்டமி லைஎனும் கனிவேபோற்றி!
சப்பாணி சின்னக் கருப்பர்போற்றி!
எப்போ தும்துணை இருப்பார்போற்றி!
நொண்டிக் கருப்பா வருவாய்போற்றி!
கண்டிலம் உன்போல் கருணைபோற்றி!
பெரிய கருப்பர் பொன்னடிபோற்றி!
பிரிய முடன்துணை வருவாய்போற்றி!
காளி வீரப்பர் கண்டோம்போற்றி!
ஊழி தோறும் உறவேபோற்றி!
வாழும் வாழ்வின் வசந்தம்போற்றி!
சூழும் தீமை தீய்ப்பாய்போற்றி!

திருமஞ் சனநீ ராடுவாய்போற்றி!
திருவெ லாம்சேர அருள்வாய்போற்றி!
பாலபி சேகம் செய்தோம் போற்றி!
பாலரைக் காக்க வருவாய்போற்றி!
பஞ்சா மிர்தம் ஏற்பாய்போற்றி!
கொஞ்சிட மழலை தருவாய்போற்றி!
தயிரபி சேகம் செய்தோம்போற்றி!
பயிர்போல் வம்சம் தழைக்கணும்போற்றி!
இளநீர் அபிசேகம் செய்தோம்போற்றி!
கழனி விளையச் செய்வாய்போற்றி!
பன்னீர் அபிஷேகம் செய்தோம் போற்றி!
நன்நீர் பெறவே அருள்வாய் போற்றி
சந்தனக் குழம்பில் சார்வாய் போற்றி!
திருநீர்க் காப்பில் திகழ்வாய்போற்றி!
நாடிவந் துன்கழல் பணிந்தோம்போற்றி!
ஓடி வந்தருள் உன்னதம் போற்றி!

பாடிவந் துன்புகழ் பரவினம்போற்றி!
கூடியே வாழ்ந்திட அருள்வாய்போற்றி! [நரியங்குடிவாழ் நாதா]

Related Posts Plugin for WordPress, Blogger...