கல்யாணமாம் கல்யாணம்
முருகனுக்குக் கல்யாணம்!
உல்லசமாய்த் தேவி இருவர்
உடனிருக்கக் கல்யாணம்!
நல்லதெல்லாம் நடக்கவைக்கும்
நாயகனின் கல்யாணம்!
எல்லாருமே பாக்கவாங்க
எடுத்ததெல்லாம் வெற்றியாம்!
மாலையெடுத்துத் தந்திடுவான்
மறுவருசம் மனைவியோடு
சோலையாக வாழ்வுதரும்
சுப்பிரமணியன் கல்யாணம்!
குன்றுதோறும் ஆடிவரும்
குமரனுக்குக் கல்யாணம்!
வெற்றிவேலை எடுத்துவரும்
விமலனுக்குக் கல்யாணம்!
மழலைவரம் கேட்டவர்க்கு
மனம்போலத் தந்திடுவான்!
அழகெல்லாம் அள்ளிவரும்
அழகனுக்குக் கல்யாணம்!
சேவக்கொடி அழகனுக்கு
சிங்காரமாய்க் கல்யாணம்
ஆவலுடன் பாத்திருப்போம்
ஆறுமுகன் கல்யாணம்!
வள்ளிமயில் தேவயானை
ஒய்யாரமாய் அருகிருக்க
புள்ளிமயில் மீதுபூத்த
புன்னகைக்குக் கல்யாணம்!
No comments:
Post a Comment