Wednesday, September 9, 2015

பிள்ளையார்பட்டிப் பிள்ளையார்.

பிள்ளையார் பட்டிவளர் பெருநிதியே கற்பகமே!
அள்ளிஅள்ளித் தருகின்ற அருள்நிதியே அற்புதமே!
உள்ளமார் அன்புக்கு உவந்திடுவாய் பொற்பதமே!
வள்ளல்உனை நாடிவந்தோம் வாழ்த்திடுவாய் சிற்பரமே!

கல்லிலே முளைத்துவந்த கவின்தமிழே கலையழகே!
கையிலே சிவனைவைத்து களிகூரும் சிலையழகே!
புல்லிலே மாலையிட்டால் பொலிவுதரும் மலையழகே!
பொய்யெலாம் போயகல பொங்குமருள் தருவாயே!

சொக்கனையும் அம்மையையும் சொகுசாக வலம்வந்து
பக்குவமாங் கனிபெற்றாய் பாரேத்தும் தந்தமுகா!
எக்காலும் உனைத்தொழுது ஏத்திவந்த பேர்களுக்கு
மிக்கபுகழ் தான்தந்து மிடுக்கோடு வாழவைப்பாய்!

பாலாலும் தேனாலும் பக்குவமாய் தயிராலும்
பன்னீரும் இளநீரும் பழவகையும் கலந்துவைத்து
ஐயனுக்கு அபிசேகம் சென்னியிலே பூவைத்து
செய்தன்பால் போற்றினார்க்குச் செய்தொழிலை  சிறக்கவைப்பாய்!

ஆவணியின் சதுர்த்தியிலே ஆனைமுகன் திருவிழா!
ஆவலுடன் மக்களெல்லாம் அணிதிரளும் பெருவிழா!
பாவணிகள் பாடிவரும் பெரும்புலவர் வரும்விழா!
பாவையர்கள் நோன்பேற்க பலன்மிகவே தரும்விழா!

உருவத்தில் முழுவதுமாய் உயர்சந்தனக் காப்பினிலே
வருடத்தில் ஒருமுறைதான் வந்தழகைக் காண்பீரே!
வருந்துன்பம் விலகவைத்து வாழ்க்கையினைச் சீராக்கும்
பெருமைகள் சொல்லரிய! பேரருளைப் பெறுவீரே!!

அற்புதக் கலைகளெல்லாம் அவையினிலே அரங்கேற்றம்!
ஐயன்மேல் கவிபுனைந்தால் ஆனந்தப் பூந்தோட்டம்!!
கற்பகத்தின் தனிப்பெருமை காணவரும் பெருங்கூட்டம்!!!
கையெல்லாம் வடம்பிடிக்க கட்டழகுத் தேரோட்டம்!!!!

1 comment:

Geetha said...

வணக்கம்.வலைப்பதிவர் திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...