Tuesday, September 4, 2012

வயது சாதனை?!..5

வயது அறுபதைக்கடந்துவிட்டால்
முதுமையின்தாக்கம் தானாகவந்துவிடும்.
தேனியாய் சுற்றித்திரிந்த நம்மை
தேங்கி நிற்கவைத்து முடங்கவைக்கும் தன்மை
முதுமைக்கு உண்டு.ஆனால்
அந்த முதுமையை, தன் விளாசலில்
விரட்டியுள்ளார் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை
பழையபோஸ்ட் ஆபீஸ்தெருவில் வசிக்கும்
சீனி என்ற
தொண்ணூற்று ஐந்துவயது சூப்பர்ஸ்டார்!
காற்றும் காணாமல்போகும் வேகத்திற்கு
சிலம்பம் சுற்றுவதில் வல்லவர்!
பன்னிரெண்டு வயதில்
சிலம்பத்தில் ஏற்பட்ட ஈர்ப்பு;
ஆயிரத்து தொள்ளாயிரத்துஐம்பத்துஎட்டில்
தொடங்கிய அவரது விளாசல்
பலகிளைகளுக்கு பரவி
தற்காப்பில் தனித்துவம்பெற்றகுருவாக மாற்றியது.
இவரிடம் பயிற்சிபெற்றவர்கள்
சினிமா, போலீஸ் துறையில் ‘கிங்’ஆகத்திகழ்கின்றனர்.
‘தேவர்மகன்’படத்தில்,கமலுக்கு சிலம்ப மாஸ்டராகஇருந்த
வேட்டைச்சாமி,சீனியின் மாணவராம்.
தொண்ணூற்றுஐந்து வயதில்கம்பு ஊன்றி
நடக்கவேண்டியவர்,கம்பெடுத்துச் சுற்றுகிறார் என்றால்;
அதுதான் கலைமீதுள்ள ஈடுபாடு.
இந்தவயதிலும்,சூறாவளியாய் சுற்றும்
உங்கள் ரகசியம் என்ன?என்ற கேள்விக்கு
"கலையை கற்பதுமட்டும் கடமையல்ல;
அதை தினமும் பயிற்சி செய்யவேண்டும்.
இதுநடந்தால் முதுமையாவது...இறப்பாவது.."என
நெஞ்சை நிமிர்த்துகிறார் சீனி.கம்பு சுத்தும்
ஆசையிருந்தால் 99948 39550 ஐ தெம்பாக அழுத்துங்கள்!

................நன்றி தினமலர் செப்டம்பர் 2-2012.

Wednesday, July 25, 2012

அக்கினி ஆத்தாள்.

கண்மாய்க் கரையிருந்து காட்சிதந்த கற்பகமே!
கண்ணிமையாய் எமைக்காக்க காரைநகர் வந்தவளே!
பேழைக்குள் இருந்துவந்த பெருந்தெய்வத் திருமகளே!
வாழையடி வாழையென வாழவைப்பாய் எம்குலமே!

Saturday, July 14, 2012

வயது சாதனை?! 4

எவரெஸ்ட்சிகரத்தில் ஏறியவர்களிலேயே மிகவும் வயதானபெண் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜப்பானைச்சேர்ந்த தமேய்வடானபி.இவர் சிகரத்தின் உச்சியைத்தொட்டபோது இவரது வயது எழுபத்துமூன்று!
சாதனைபுரிய நினைப்பவர்களின் உச்சக்கட்ட சாதனையே எவரெஸ்ட் சிகரம் ஏறுவதுதான்.இளமை முறுக்கோடு கிளம்பிய,இருநூற்று எண்பத்துநாலு பேர்களில்,இவர்தான் வயதானவர்.ஆனால் இவர்களில் குளிர்தாங்காமல் இறந்தவர்கள்,ஏறமுடியாமல் நின்றவர்கள்,இன்னும் கொஞ்சநேரம் இருந்தாலும் இறந்துவிடுவேன் என்று அடித்துப்பிடித்து திரும்பியவர்களெல்லாம் போக எவரெஸ்ட் சிகரம் தொட்டஎண்பத்து இரண்டு பேர்களில் இவரும் ஒருவர்!எவரெஸ்ட் சிகரம் தொட்டவயதானவர் என்ற சாதனையை தன் அறுபத்து இரண்டு வயதில் ஏற்படுத்திய தமேய்,தன்சாதனையை தானே முறியடிக்கும்வகையில் பதினொறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கடந்தவாரம் தன் எழுபத்துமூன்றாவது வயதில் மீண்டும் எவரெஸ்ட் சிகரம் தொட்டுத் திரும்பியுள்ளார்.இடையில் தன் அறுபத்து ஐந்தாவது வயதில் ஒருமுறை எவரெஸ்ட் சிகரம் ஏறும்போது கடுமையான பனிப்புயலில் சிக்கி முதுகில் பலத்த காயமடைந்தார்.எழுந்து நடக்கவேமாட்டார் என்று எல்லோரும் கருதியபோது, தன் மனவலிமை காரணமாக துள்ளி எழுந்தவர் கடுமையான பயிற்சி எடுத்து, இந்தமுறை வீழ்ச்சியின்றி எழுச்சி பெற்றுவிட்டார்.இந்த சாதனை தனக்கு மகிழ்ச்சி என்றாலும் கடந்த பதினொரு ஆண்டுகளில் எவரெஸ்ட் மிகவு
ம் மாறிவிட்டதாக வேதனையும்படுகிறார்.முன்பு பனிபடர்ந்து அடர்ந்து இருந்த இடங்கள் எல்லாம் இப்போது நீர்நிலையாக நீண்டு காணப்படுகிறது.இது உலகம் வேகமாக வெப்பமயமாகிவருவதன்[குளோபல் வார்மிங்] அறிகுறியே. இதை தடுத்துநிறுத்திட,நிறைய விழிப்புணர்வு தேவை.அது இளைஞர்களிடம் இன்னும் தேவை.ஏனெனில்,இனி உலகம் அவர்களின் கையில்.அவர்களது உலகத்தை காப்பாற்ற அவர்கள்தான் முவரவேண்டும் என்கிறார்.நமது எண்ணமும் அதுவே.எனவே உலகம் வெப்பமயமாவதைத் தடுக்க நம்மால் முடிந்தவரை முயற்சிசெய்வோம்.அன்புடையீர் தயவுசெய்து இன்றே உறுதி எடுங்கள்..
நன்றி. தினமலர் 24-6-2012.  நல்லது.     

Monday, May 28, 2012

கரண்டோட ரவுசு.

கரண்டோட ரவுசு!
அம்மிக்கு மவுசு!!
ஆட்டுக்கல்லுக்குப் பவுசு!!!

ஜிம்முக்குப் போகாம
அம்மியில அறச்சதுல [ஒடம்பு]
ஜம்முன்னு ஆச்சுதுங்க!

பயிப்புத்தண்ணி வத்துனதால [கெணத்துல]
பையப்பையத் தண்ணியெடுத்து
கையிக்கிப் பயிற்சியாச்சுதுங்க!

ஓலவிசிறி வெலையெல்லாம்
ஒசரத்துக்குப் போயிநின்னு
அசரவைக்கிது பாருங்க!

லிப்டு வேலசெய்யாம
கப்புசிப்புனு ஆயிப்போயி
லெப்டு ரயிட்டு வாங்குது!

யூப்பிஎஸ்ஸுகூட ரொம்ப
யூசாகிப் போனதால
ப்யூசாகிப்போச்சுதுங்க

வெளக்கேத்தற எண்ணெயெல்லாம்
வெல எகிறிப்போச்சு
வாங்குதுங்க மூச்சு!


Saturday, May 12, 2012

ஞாபகம் வருதே!அனுபவித்துப் பாருங்களே!!

விதைப்பும் அறுவடையும் இல்லாத
விவசாயிகளின் விடுமுறைநாட்கள்
விதைப்பில்லாச் சித்திரை
அறுவடையில்லா வைகாசி!
நாம் மறந்துபோன
வாழ்க்கையின் மறுபக்கம்.
கள்ளரை விரட்டியடிக்க
கைக்கொரு ஆயுதம்வைத்திருக்கும்
காவல் தெய்வங்களுக்கு
பொங்கலிட்டுக் குட்டிவெட்டி
பங்குவைத்துப் பாசமுடன்
சொந்தங்கள் அழைத்து
சுறுசுறுப்பாய் விருந்துவைத்து
சண்டையிட்ட உறவெல்லாம்
சலிக்காமல் உறவாடி
கண்பட்டு விடும்போல
களிப்போடு ஒன்றுகூடி
கெண்டைக்கறி உண்ணுகின்ற
கண்கொள்ளாக் காட்சி!
கொஞ்சிவரும் குழந்தைக்கு
பஞ்சுமிட்டாய் நுங்குவண்டி!
விடலைப் பசங்களுக்கு
உல்லாசப் பாட்டிசைத்து
உசுப்பேற்றும் ஒலிபெருக்கிகள்!
கரகாட்டம் ஒயிலாட்டம்!
கண்கவரும் மயிலாட்டம்!
வளைக்கரங்கள் ஏந்திவரும்
முளப்பாரி மதுக்குடங்கள்!
களைப்பில்லாக் கண்விருந்து!
வறுத்துத் தோலெடுத்து
உப்புப்போட்டுத் தண்ணியில
ஊறவச்ச புளியங்கொட்டை!
அள்ளித் தின்றுகொண்டே
அயராமல் முளிச்சிருந்து
ஆண்டாண்டு பார்த்தாலும்
அலுக்காத நாடகங்கள்!
வள்ளிதிருமணமும்
அரிச்சந்திரா பவளக்கொடி!
ஆண்டுக்கு ஒருமுறைதான்
அனுபவித்துப் பாருங்களே!

Friday, February 3, 2012

கனியான கந்தவேள்!

கனிக்காகக் கனலாகிக் கடினமலை ஏறியே
                     கனியான கந்தவேளே!
இனிதான உன்பேரை இன்னமுதம் போலவே
                  இசையாகப் பாடிவாரோம்!
மெய்பூசும் நீரோடும் மெய்யான உறவோடும்
                 மெதுவாக ஓடிவாரோம்!
தைப்பூசம் தைப்பூசம் தரையிருந்து மலையேறும்
                  நதிபோல ஓடிவாரோம்!
சுட்டிக்கு ழந்தையுன் சூரிய முகம்கண்டு
            சொக்கியே நிற்கிறோமே
செட்டிக்கு ழந்தைகள் செகம்போற்ற வாழவே
           செல்வனே அருள்புரிவாய்!
கட்டிவரும் காவடியும் களிப்போடு பால்குடமும்
           காலடியில் சேர்க்கவருவார்!
அட்டியின்றி அடியவரை அருள்மழை நனையவைத்து
          ஆனந்தம் கொள்ளவைப்பாய்!
திருப்புகழும் தீந்தமிழும் தெவிட்டாத உன்பேரை
          செவிகேட்டுக் குளிர்ந்திருக்கும்!
விருப்பமுடன் பாடினால் விந்தைபல காட்டிநீ
               ஓடிவா பழனிவேலா!

Tuesday, January 17, 2012

என்ன நாஞ்சொல்லுரது? 2

மோல்மேனு குறிச்சியெல்லாம்
ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு
ஆல்வீ டு ரெண்டாங்கட்டு
கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு!
கூட்டிமொழுக ஆளுக்கெல்லாம்
ரேட்டுரொம்ப ஏறிப்போச்சுனு
போட்டிபோட்டு கூட்டுனவீ ட
கூட்டாமெ விட்டதால
கூட்டிமொழுகி வச்சவளவு
கொஞ்சங்கொஞ்சமா தூசியடஞ்சு
ராட்டிதட்டும் எடம்போல
ரணகளமா ஆயிப்போச்சு.
கோட்டைபோல வீ ட்டக்கட்டி
கொலாகலமா வாழ்ந்தவங்க
நோட்டமிட்டா மனசெல்லாம்
நொந்துபோயி நூலாவாங்க.
பாட்டன் பூட்டன் கட்டிவச்ச
பெரியவீட்ட பழுதுநீக்கி
ஓட்டமாத்தி ஒழுகல்நிறுத்தி
கரையானுக்கு மருந்தடிச்சு
தூணுசொவரு எல்லாத்துக்கும்
தூள்பறக்க வண்ணந்தீட்டி
வெடிப்புக்கெல்லாம் வெள்ளயடிச்சு
வெள்ளச்சொவர நல்லாக்கி
பர்மாத்தேக்கு நெலைக்கெல்லாம்
பக்குவமா எண்ணையடிச்சு
மோப்புக்குள்ள நுழைகையில [முகப்பு]
மொகமெல்லாம் மலரவைங்க!
சீட்டுக்கட்டுப் போலவீடு
சீக்கிரமா கட்டிரலாம்.
பாட்டன்வீடு போலநமக்கு
பக்குவமாக் கட்டவருமா!?

என்னநாஞ் சொல்லுரது
எல்லாருக்கும் நல்லாருக்கா?!

Related Posts Plugin for WordPress, Blogger...