Friday, January 11, 2013

தோளெடுத்த காவடிக்கு துணைவருவாய் முருகையா!

தோளெடுத்த காவடிக்குத் துணைவருவாய் முருகையா!
தாளெடுத்து வைக்கையிலே தப்பாது வேகமையா!
வேலெடுத்து வந்துநின்று வினைகளைவாய் முருகையா!
தாளமிட்டுப் பாடிவர தணியாத மோகமையா

தேனான தெய்வானை தென்றலென அருகிருக்க,
மானான வள்ளியுடன் மயிலினிலே அமர்ந்திருப்பாய்!
தானானா பாட்டிசைத்து தமிழ்மகனே உனைவணங்க
மீனான கண்ணசைத்து மேவுபுகழ் தந்திடுவாய்!

கால்வலிக்க நடந்துவந்து கண்மணியாம் முருகுனக்கு
பால்குடமும் காவடியும் பக்குவமாய்க் கொண்டுவர
மால்மருகா மக்களுக்கு மலைபோல துன்பமெல்லாம்
பால்பனிபோல் மறைந்திடவே பரிவோடு காத்தருள்வாய்!

புள்ளியெல்லாம் பெருகவென்று பூம்பாதம் பணிந்தவர்க்கு
நல்லபிள்ளை தந்திடுவாய்! நல்முத்தாய் விளையவைப்பாய்!
வள்ளலுனை நாடிடுவார் வரம்கோடி முன்வைப்பார்!
வெள்ளமென அருள்பொழிய விரைவாக வந்திடுவாய் !


2 comments:

இராஜராஜேஸ்வரி said...


வள்ளலுனை நாடிடுவார் வரம்கோடி முன்வைப்பார்!
வெள்ளமென அருள்பொழிய விரைவாக வந்திடுவாய்

அருமையான காவடிப்பாட்டு ..பாராட்டுக்கள்..

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

Mey said...

Kavithai mika arumai
Vetrivel Muruganukku Arohara!

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...