Friday, December 17, 2010

வந்தாரை வாழவைப்பான்!

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்--வெற்றி
வேல்முருகா வேல்முருகா வேல்முருகா வேல்

வந்தாரை வாழவைக்கும் செந்தூரின் வேலனவன்
பந்தாடிக் கவலைகளைப் பறந்தோடச் செய்திடுவான்!
அந்திசந்தி காலமும் ஒன்பதுகாலப் பூசையும்
முந்திவந்து காணவே முடிவில்லாத ஆனந்தம்!---[வேல்முருகா]

படிப்படியாய் வளர்கஎன்று பாசத்தைக் காட்டியே
அடிக்கடி நமைஅழைக்கும் அழகுச் செந்தூரானுக்கு
அடுத்தடுத்து அபிசேகம் அன்பிலே பொழிந்திடும்
தொடுத்தெடுத்த மலர்களெல்லாம் தோள்களில் மலர்ந்திடும்!--[வேல்முருகா]

வருகவருக வருகஎன்று வரவேற்கும் வேலவன்
பெறுகபெறுக இனியதென்று பேரருள் புரிகிறான்!
அரஹரஹர என்பவர்க்கு அச்சமில்லை அவனியில்
கரங்களிலே ஏந்திநின்று கருணைமழை பொழிகிறான்!--[வேல்முருகா]

கண்ணில் மின்னும் கனிவினால் கடலையும் கட்டுவான்
விண்ணைமுட்டும் அலைகூட வீழ்ந்துவணங்கும் செந்திலில்!
சண்முகத்தைக் கண்டுவந்தால் சகலத்திலும் வெற்றியே!
கண்களிலே தேக்கிவைத்துக் காத்திடுவோம் போற்றியே!!--[வேல்முருகா]

சங்கினோசை அலையிலே சண்முகத்தின் கரையிலே
எங்கும்மக்கள் வெள்ளந்தான் எழிலான காட்சியே!
சங்கரனின் மைந்தனுக்கு சஷ்டியிலே திருவிழா
சங்கடங்கள் நீக்கிவிடும் சம்ஹாரக் காட்சியே--[வேல்முருகா]

இறங்கிவந்து வணங்கினால் இரக்கம்காட்டும் வேலவன்
ஏறிவரும் வேளையில் ஏற்றம்மிகத் தருகிறான்
மறங்கிநின்றால் கவலைகளை மறைந்தோடச் செய்திடுவான்!
சிறந்தநல்ல பதவியும் செல்வமும் நல்குவான்!!--[வேல்முருகா]

வரம்வேண்டி வருவோர்க்கு வளர்கஎன்று வாழ்த்தியே
சிரங்குவித்து வணங்கும்வேளை சிரித்தமுகம் காட்டுவான்!
பிரகாரம் ஒன்றுவந்து நிறைவுசெய்யு முன்னரே
விரும்புகின்ற வேண்டுதலை விரைவில் நிறைவேற்றுவான்!--[வேல்முருகா]

கற்பகத்தின் தம்பியவன் கந்தவேளை நம்பினால்!
உற்றதுணை அன்பிலே உலவாக்கிழி யானவன்!!
பொற்பதங்கள் பணிந்துவந்தால் புதியசக்தி காணலாம்!!!
அற்புதங்கள் காட்டிடுவான் ஆறுமுக வேலவன்!!!!--[வெல்முருகா]

விண்ணைமுட்டும்...=சுனாமி வந்தபோதுகூட திருச்செந்தூரில் கடல்
உள்வாங்கியது.அந்த நேரத்தில் நான் அங்கு பதினொருநாட்கள்
 வேண்டுதலின்பொருட்டுத் தங்கிஇருந்துவந்தபடியால்
ஏற்பட்ட எனது அனுபவங்களின் வெளிப்பாடே இப்பாடல்.

மறங்கிநின்றால்=கலங்கிநின்றால்

உலவாக்கிழி = எடுக்கஎடுக்கக் குறையாத பொன்முடிப்பு.


ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லே.
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமேயில்லே.
என்ற மெட்டில் பாடிப்பாருங்கள்.

1 comment:

Chitra said...

அம்மா... உங்கள் தூய்மையான பக்தி, பாடல் முழுவதும் தெரியுது, அம்மா... அப்படியே லயித்து எழுதி இருக்கீங்க...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...