திருச்செந்தூர் செயந்திநாதா செந்திலவடிவேலா-நீறு
தரிச்சோமே இலையில்வாங்கி செந்தில்வடிவேலா!
சிரிச்சமுகம் காட்டியே செந்தில்வடிவேலா-மனம்
வரிச்சாயே சுந்தரமாய் செந்தில்வடிவேலா!
முன்னைசெய் தவமேநீ செந்தில்வடிவேலா-எமக்கு
அன்னையாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
சிந்தைமகிழ் திருப்புகழே செந்தில்வடிவேலா-எங்கள்
தந்தையாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
கண்ணைஇமை காப்பதுபோல் செந்தில்வடிவேலா-எங்கள்
அண்ணனாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
பக்கபலம் நீயேதான் செந்தில்வடிவேலா-எமக்கு
அக்காவாய் வரவேண்டும் செந்தில்வடிவேலா
அம்பியென அழைத்திடுவோம் செந்தில்வடிவேலா-எங்கள்
தம்பியாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
பொங்குமன்பில் குளித்திடவே செந்தில்வடிவேலா-எங்கள்
தங்கையாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
மகள்போல ஓவியமாய் வந்திடுவாயே-அன்பு
மகத்தான காவியமே செந்தில்வடிவேலா!
மகனாக உனைக்கண்டோம் செந்தில்வடிவேலா-இந்த
செகம்போற்றும் புகழோனே செந்தில்வடிவேலா!
பேரன்பால் உனைப்பாட செந்தில்வடிவேலா-எங்கள்
பேரனாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
காத்திருக்கோம் உனைக்காண செந்தில்வடிவேலா-எங்க
பேத்தியாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
கொள்ளுப்பேரன் கண்டோமே செந்தில்வடிவேலா-எங்கள்
உள்ளமெல்லாம் பரவசமே செந்தில் வடிவேலா!
கொள்ளைச்சிரிப் பழகாலே செந்தில்வடிவேலா-மனம்
கொள்ளைகொண்டார் பேரழகால் செந்தில்வடிவேரா
உற்றதொரு நண்பனாக செந்தில்வடிவேலா-உனைப்
பெற்றோமே நன்றியுடன் செந்தில்வடிவேலா!
கற்றவர்க்கு கவின் தமிழாய் செந்தில்வடிவேலா-நாங்கள்
வெற்றிபெற வாழ்த்திடுவாய் செந்தில்வடிவேலா!
திருந்தியவர் தெளிவாக செந்தில்வடிவேலா-நீ
மருந்தாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
கரும்பினிக்கும் குரலாலே உனைப்பாடவே-ஐயா
விரும்பி இங்கே வந்திடுவாய் செந்திலவடிவேலா!
சேவல்கொடி அழகோனே செந்தில்வடிவேலா-உனை
பாவில்பாடி அழைக்கின்றோம் செந்தில்வடிவேலா
ஆவலுடன் காத்திருக்கோம் விரைந்தோடியே-மயில்
தேவயானை வள்ளியுடன் வந்திடுவாயே!
கள்ளிருக்கும் பூவதனில் வண்டினைப்போல-எங்கள்
உள்ளமதில் குடிகொண்ட செந்தில்வடிவேலா!
புள்ளிமயில் ஏறிவரும் பூந்தமிழழகே-மக்கள்
புள்ளிபெருக அருள்தருவாய் செந்தில்வடிவேலா!
எந்தவினையும் வேலெடுத்து நலமாக்கியே-இங்கே
வந்தாரை வாழவைக்கும் செந்தில்வடிவேலா!
சொந்தமென நாடிவந்தோம் உனைத்தேடியே-என்றும்
பந்தமாக வரவேண்டும் செந்தில்வடிவேலா!
முத்துசபா ரத்தினமாய் வேண்டிநின்றோமே-நாங்கள்
பக்திசெய்ய பலன்தருவாய் செந்தில்வடிவேலா!
சக்திமகன் சண்முகனே சங்கமித்திணைந்து-மக்கள்
ஒத்துமையாய் வாழவேண்டும் செந்தில்வடிவேலா!